மனமே மந்திரம்
உடல்நலம் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவு மனநலமும் முக்கியம். மனநலம் குன்றினால், உடல்நலமும் குன்றும். உடல் நலத்தையும் மனநலத்தையும் பிரித்துப் பார்ப்பதும் தவறு. உடல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு கூடுதல் அளவில் மனச்சோர்வு போன்ற மனக்கோளாறுகள் உண்டாகின்றன. அதேபோல, மனக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு உடல் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மனச்சோர்வு காரணமாகவே இருதய மற்றும் இரத்தநாள நோய்கள் உருவாகின்றன என்று சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் உலகச் சுகாதார நிறுவனம், ‘உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகிவிடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒருசேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவராகக் கருதலாம்’ என்று குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், மனநலத்துக்கு ஆதரவாக முயற்சிகளை ஒன்றுதிரட்டுவதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு நாளை, உலக மனநல கூட்டமைப்பு 1992ம் ஆண்டு ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் மனநலக் கோளாறுகள் சுகாதாரக் கேடுகளுக்கும் ஊனங்களுக்கும் காரணமாக இருக்கின்றன. ‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயல்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்டகால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, அதிகமான மதுப் பழக்கம், எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை மன அழுத்தம் உருவாவதற்கு காரணங்களாக இருக்கின்றன. இதுதவிர 200க்கும் மேற்பட்ட மனநோய்கள் உள்ளன. இவையெல்லாம் நம் மனதைத் தினம்தினம் பாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
மனநோய் என்பது ஒரு சமூக நோய். குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் தாக்கும் மனநோயையும், அதன் அறிகுறிகளையும் தெரிந்துகொள்வதே, அதிலிருந்து மீள்வதற்கான முதல்படி. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒருவரின் சிந்தனையில், செயல்பாடுகளில், நடத்தை மற்றும் உணர்வுகளில், பிறரைவிட வித்தியாசமோ, தீவிரமோ தெரிந்தால், அது மனநலப் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி வரும் அறிகுறிகள் ஒருவரிடம் தொடர்ந்து காணப்பட்டால், உடனடியாக, மனநல மருத்துவர் அல்லது மனநல உளவியலாளரிடம் அழைத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும். சமூக விஷயங்களில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலக அளவில் 45 கோடி மக்கள் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கையின் ஏதாவது ஒருகட்டத்தில் நான்கில் ஒருவர் மன நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். உலகில் 10-19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் மனநலப் பிரச்சினைகளால் 16 சதவிகிதம் உலக நோய்ப்பளு ஏற்படுகிறது. மக்களின் மொத்த மனநிலைப் பிரச்சினைகளில் பாதி 14 வயதில் தொடங்கிவிடுகிறது. ஆனால் பெரும்பாலான நேர்வுகள் கண்டறியப்படுவதில்லை. அவற்றிற்கு சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை.
15-29 வயதினரின் மரணத்தில் தற்கொலை இரண்டாவது காரணத்தை மனநலம் வகிக்கிறது. மது மற்றும் போதைப் பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதால் பல இளைஞர்கள் பாதுகாப்பற்ற பால்வினை, ஆபத்தாக வாகனம் ஓட்டுதல் போன்ற ஆபத்து மிகும் நடத்தைகளுக்கு ஆளாகின்றனர். இவற்றில் ஆழ்ந்த கவனம் செலுத்தாவிட்டால் இவைகள் குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கையைப் பாதிக்கும். ஆகையால், மனநலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, ஒருவரின் எண்ணங்களும் செயல்களும் உணர்ச்சிகளும் தன்னையும், பிறரையும் பாதிக்காத அளவுக்கு இருக்குமேயானால், அதுதான் சிறந்த மனநலம். அதைப் பேணுவதும் போற்றிப் பாதுகாப்பதும் அவசியம். அதில் பிரச்சினை ஏற்பட்டால், மனநலம் பாதிக்கப்படும், பல விளைவுகளையும் நாம் சந்திக்க நேரிடும். எனவே, விழிப்புணர்வு பெறுவோம், மனநலம் காப்போம், மனித இனம் வளர்ப்போம்.