பிலேசிபோ எஃபக்ட் தெரியுமா..?

இருக்கு ஆனா இல்லை

மருந்தே இல்லாத ஒன்று மருந்தாக செயல்படுவதை பிலேசிபோ என்று மருத்துவத்தில் சொல்கிறார்கள்.

மாத்திரை, மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகிவிடும் என்று நோயாளி நம்புகிறார். இந்த நம்பிக்கை காரணமாக மருந்து என்று டம்மியாக எதைக் கொடுத்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு உடல் குணமடைகிறது. இந்த மருத்துவ ஆச்சர்யத்தையே பிலேசிபோ எஃபக்ட் என்கிறார்கள். ஒரே மாதிரியான நோய் பாதிக்கப்பட்ட இரண்டு பிரிவினருக்கு நிஜமான மருந்தும், போலி மருந்தும் கொடுத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு பிரிவினருமே பலன் பெற்றதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இப்படி மருந்து இல்லாத மாத்திரை, சலைன் வாட்டர் ஊசி, பொய்யான ஆறுதலும் கூட பிலேசிபோ மருத்துவத்தில் ஒருவரை குணம் அடையச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. போலி மருந்தையும் உண்மை என்று நம்பும் நோயாளியின் மூளையில் எண்டோர்பின், டோபமைன் போன்ற ஹார்மோன் சுரப்பதால் உடல் குணமடையத் தொடங்குகிறது. நோயாளியின் நம்பிக்கை அடிப்படையில் மூளை, உடல், மனம் ஆகியவை ஒன்றாக இணைந்து ஆரோக்கியத்தை நோக்கி ஆக்கபூர்வமாக செயலாற்றுகின்றன.

மன அழுத்தம், அலர்ஜி, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு சில நேரம் மருத்துவர்களே இப்படிப்பட்ட பொய்யான மருந்துகள் வழங்குவதுண்டு.

அதேபோல், ‘இந்த மருந்து போட்டால் ஒரு மணி நேரம் தலை வலிக்கும்’ என்று சொல்லி இனிப்பு மாத்திரை கொடுத்தாலும் தலை வலி அநேகம் பேருக்கு வருவதுண்டு. ஆகவே, மனமே மருந்து என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment