• Home
  • பணம்
  • வீட்டில் எவ்வளவு குப்பை சேர்த்து வைத்திருக்கிறீர்கள்..?

வீட்டில் எவ்வளவு குப்பை சேர்த்து வைத்திருக்கிறீர்கள்..?

Image

பணமே மந்திரம்

முகம் முழுக்க சோகத்துடன் வந்து நின்றான் மகேந்திரன். ‘’சாமி, மாச சம்பளக்காரன். எவ்வளவுதான் சிக்கனமா செலவழிச்சாலும் மாசக் கடைசியிலே கடன் வாங்க வேண்டியதா இருக்குது. இப்போ திடீர்னு ஆஸ்பத்திரி செலவு வந்து நிக்குது, நான் செய்வது? எங்களை மாதிரி ஆளுங்க நிம்மதியா வாழவே முடியாதா..?’’ கிட்டத்தட்ட அழும் நிலையில் கேட்டான்.

‘’உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது. சரி, உன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக கூட்டிவிட்டால், போதுமான அளவுக்கு சேமிப்பு செய்து, சிக்கல் இல்லாமல் வாழ்வாயா..?’’

மகேந்திரன் முகத்தில் ஆயிரம் வாட் பல்ப் எரிந்தது. ‘’சாமி, அப்படி மட்டும் ஏதாவது மாயமந்திரம் செஞ்சு நடக்க வைச்சீங்கனா, என் ஜென்மம் உள்ள வரைக்கும் உங்களை மறக்கவே மாட்டேன்’’ கையெடுத்து கும்பிட்டான்.

சட்டென்று சிரித்தார் ஞானகுரு. ‘’நீ என்னை மறக்காமல் இருப்பதால் எனக்கு என்ன லாபம்..?’’

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தான் மகேந்திரன்.

’’மகேந்திரா… சம்பள உயர்வு என்பது ஒரு மாயை.  இதற்கு முன்பு உனக்கு எத்தனையோ முறை சம்பள உயர்வு கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் கூடுதலாக உனக்கு கிடைத்த பணத்தை நீ சேமித்து வைத்தாயா..? இல்லையே… அதனால் இனி இரண்டு மடங்கு கிடைத்தாலும், அதையும் செலவு செய்வாயே தவிர சேமிக்க மாட்டாய். சரி, வீட்டில் நீ எவ்வளவு குப்பைகளை சேமித்து வைத்திருக்கிறாய்..?’’ கேள்வி புரியாமல் விழித்தான்.

‘’நான் குப்பை என்று சொல்வது, தேவை இல்லாமல் நீ வாங்கி சேர்த்து வைத்திருக்கும் பொருட்கள். ஒரு மனிதருக்கு அதிகபட்சம் பத்து செட் ஆடைகள் போதும். ஆனால், பலருடைய வீடுகளில் ஏழெட்டு பீரோக்களில் துணிகளை திணித்து வைத்திருக்கிறார்கள். இப்போது தேவை இல்லை, உன் பரண் மீது கிடக்கும் பொருட்களை எப்போதாவது எடுத்து பார்த்திருக்கிறாயா..? 3 மாதங்கள் ஒரு பொருள் உனக்கு பயன்படவில்லை என்றால், அந்த பொருள் இல்லாமல் நீ காலம் முழுவதும் வாழமுடியும் என்ற உண்மை தெரியுமா?

கட்டில், மெத்தை, டைனிங் டேபிள், வாஷிங் மெஷின், வாட்டர் ஃபில்டர், கிரைண்டர் கார் போன்றவற்றை அத்தியாவசியமாக நீ நினைக்கிறாய். ஆடைகள் வாங்கி குவிப்பதும், மிகப்பெரிய பள்ளியில் அதிக கட்டணம் கொடுத்து பிள்ளையை படிக்க வைப்பதும் உனக்கு முக்கியமாகிவிட்டது. அரசு பள்ளியில் படிக்க வைப்பதும், பொது போக்குவரத்தை பயன்படுத்துவதும் உனக்கு எத்தனை பணத்தை மிச்சப்படுத்தும் என்பது தெரியுமா?

பக்கத்துவீட்டு மனிதன் சிங்கப்பூருக்கு சுற்றுலா போய்வந்தால், நீயும் ஏதாவது ஒரு நாட்டுக்கு போகவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிவிடுகிறாய். வாரம் ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடுவதும், வீட்டுக்கு உணவு ஆர்டர் செய்வதும் உன் சம்பளத்தில் எத்தனை சதவிகிதம் என்பது தெரியுமா?

இப்படி நீ வாங்கும் ஒவ்வொரு பொருளும் உனக்கு சுமை என்பதை உணர்ந்துகொள். ஒவ்வொரு பொருளும் உன்னை அடிமையாக்கிவிடும். காரில் போய் பழகிவிட்டால், உன்னால் ஒருபோதும் பஸ், ரயிலில் பயணம் செல்ல மனம் வராது. காரை பழுதுபார்க்க எத்தனை செலவழிக்கவும் தயாராகவே இருப்பாய்.

எனவே, முதலில் உன் வீட்டில் இருந்தும் மனதில் இருந்தும் குப்பைகளை வெளியே தூக்கிப்போடு. இந்த குப்பைகள்தான் உன் பணத்தை தின்று கொழுக்கின்றன.

ஒவ்வொரு செலவு செய்யும்போதும், இது தேவைதானா என்று உன்னை நீயே கேட்டுக்கொள். செலவு செய்வதை முடிந்த வரையிலும் தள்ளிவை. அப்படி தள்ளி வைக்கும்போது, அந்த பொருளுக்குத் தேவை ஏற்படாமலே போகும் என்பதை நீயே உணர்ந்துகொள்ள முடியும்.

நீ மிச்சப்படுத்தும் ஒவ்வொரு செலவும், வெளியேற்றும் ஒவ்வொரு குப்பையும் உனக்கான சம்பள உயர்வுதான்” என்றார் ஞானகுரு.

பதில் சொல்ல முடியாமல் திரும்பினான் மகேந்திரன்.

Leave a Comment