ஆண்களின் அயோக்கியத்தனம்
குல தெய்வ வழிபாட்டில் ஆண்களை விட பெண்களே மிகவும் தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு நிரந்தர குலதெய்வம் இல்லை என்பதே கொடூரமான உண்மை.
திருமணம் முடித்து எந்த வீட்டுக்குச் செல்கிறார்களோ, அந்த வீட்டு குலதெய்வத்தையே, அவர்கள் ஏற்கவேண்டியதாகிறது. அதுவரை கும்பிட்ட பிறந்த வீட்டு குலதெய்வத்தை மறந்துவிட்டு, கணவரின் குலதெய்வத்தை ஏற்றுக்கொள்வதே கலாச்சாரம் என்று பெண்கள் நம்ப வைத்திருக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், குலதெய்வம் என்பது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. அதோடு ஜாதியை காப்பாற்றுவதற்கான கட்டமைப்பு. எனவே பெண்களை மதிக்காத குலதெய்வ வழிபாட்டுக்கு பெண்களும் முக்கியத்துவம் தரவேண்டியதில்லை.
ஒருவருக்கொருவர் நட்புக்கரம் நீட்டவும், உதவி செய்யவும் குலதெய்வ வழிபாடு அவசியம் என்று இன்றைய தலைமுறையினர் சொல்வதையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. ஜாதியாக, மதமாக, குடும்பமாக, ஒற்றுமையாக இருப்பது ஆண்களுக்கு வேண்டுமானால் பலமாக இருக்கலாம். பெண்களுக்கு இதில் மதிப்பும், மரியாதையும் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். குலதெய்வத்தை விட சுய கெளரவம் முக்கியம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
