ஞானகுரு தத்துவம்
உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, மலர்கள் மலர்வதும் எனக்காக என்று எம்.ஜி.ஆர். உற்சாகத்துடன் ஆடிப் பாடுவது ஒரு நம்பிக்கையூட்டும் பாடல். இந்த உலகம் எல்லோருக்கும் சொந்தம் என்பது உண்மைதான். அதேநேரம், இந்த உலகம் எனக்கு மட்டுமே சொந்தம் என்று அவசியமில்லாமல் சேதப்படுத்துவது, இயற்கைக்கு செய்யும் அநியாயம்.
பூங்கா, ரோடுகளில் நடந்துசெல்லும் மனிதர்களை கவனித்துப் பாருங்கள். அவர்கள் கை சும்மா இருப்பதில்லை. நடக்கும்போது செடியிலிருந்து இலையைப் பிடுங்கிப் போடுவது, பூவை பறித்து வீசுவது, மரங்களின் கிளைகளை உடைப்பது போன்ற செயல்களை கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல் செய்துகொண்டே இருப்பார்கள். கீழே புல் தரையில் அமர்ந்திருக்கும்போது புல்லைப் பிடுங்கி தூர வீசுவார்கள். கீழே கிடக்கும் கல்லை எடுத்து மரத்தின் மீது எறிவார்கள்.
இலையைக் கிள்ளுவதும் கிளையை உடைப்பதும் செடியின் சுவாசத்திற்கு சிக்கல் உருவாக்கும் என்றெல்லாம் அவர்களுக்கே தெரியாது. இந்த வகையில் ஒவ்வொரு மனிதரும் வாழ்நாளில் லட்சக்கணக்கான தாவரங்களை சேதப்படுத்துகிறார்கள்.
சாப்பிடுவதற்காக காய், கனி, இலை, தண்டு போன்றவைகளைப் பறிப்பது தவறில்லை. ஏனென்றால் ஒன்றைத் தின்று ஒன்று வளரும் வகையிலே இந்த உலகத்தின் அத்தனை உயிர்களும் படைக்கப்பட்டுள்ளன. பசியைப் போக்குவதற்கு ஒரு மானை அடித்துத் தின்னுவது உணவுச் சங்கிலியாகவே பார்க்கப்படும். ஆனால், , காரணமே இல்லாமல் மரத்தின் கிளையை உடைப்பதும், இலையைப் பிடுங்கி வீசி எறிவதும் நிச்சயமாக பொறுப்பற்ற செயல்.
கை துருதுருவென இருந்தால் அழகான இலை, பூ, காயைப் பார்க்கும்போது வருடிக் கொடுக்கலாம். உதிர்ந்துகிடக்கும் இலையை எடுத்து குப்பைக் கூடையில் போடலாம். வாசமான மலரை செடியில் வைத்தே முகர்ந்து பார்க்கலாம். செடி, மரத்தையும் ஓர் உயிராகப் பாவித்து தொந்தரவு செய்யாமல் நடந்துசெல்வதே நல்ல மனிதருக்கு அழகு. ஆயிரம் மலர்கள் மலரட்டும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
