மந்திரச்சொல்
பிரபல பாடகி, மாடல், நடிகை லேடி காகா (Lady Gaga) இன்று உலகப்புகழ் பெற்று விளங்குகிறார். ஆனால், பள்ளிப் பருவத்தில் அவர் பலரால் கேலி செய்யப்பட்டவர். மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருப்பதாக ஒதுக்கப்பட்டவர். ஆனால், அவர்களுடைய விமர்சனங்களுக்காகத் தன்னுடைய விருப்பங்களைக் கைவிடவில்லை.
தனக்கென வித்தியாசமான ஆடை அலங்காரம், மேடைத் தோற்றம், இசை வெளிப்பாடு ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டார். ஆரம்பத்தில் அவருடைய தோற்றமும் செயல்பாடுகளும் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தன. விமர்சனங்களும் எழுந்தன. ஆனாலும், எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய படைப்பாற்றலை மாற்றிக்கொள்ளவில்லை.
ஒரு நேர்காணலில், தான் சாதாரணமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்குள் அடங்கிவிட விரும்பவில்லை என்றும், தன்னைத் தானே வெளிப்படுத்துவதில்தான் மகிழ்ச்சி கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அவருடைய வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் மிக முக்கியமானது. மற்றவர்கள் உங்களை வித்தியாசமானவர் என்று சொல்வதற்காக உங்கள் தனித்துவத்தை மாற்றிக்கொள்ளாதீர்கள்.
இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமான ஓர் அடையாளம் இருக்கிறது. ஆனால், பலரும் தங்களுடைய அடையாளத்தைத் தேடுவதைவிட, அடுத்தவர்களைப் போல வாழ்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒருவருடைய அழகு பிடித்தால் அவரைப் போல மாற விரும்புகிறார்கள். ஒருவருடைய பணம் பிடித்தால் அவரைப் போலச் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஒருவருடைய புகழ் பிடித்தால் அவரைப் போலப் பேசவும், நடக்கவும், சிந்திக்கவும் முயற்சி செய்கிறார்கள். இன்னொருவரைப் போல மாற முயற்சிக்கும்போது, தங்களுக்குள் இருக்கும் தனித்துவத்தை இழக்கத் தொடங்குகிறீர்கள்.
அடுத்தவர்களின் பாராட்டைப் பெறுவதற்காகத் தங்களுடைய இயல்பான குணங்களை மாற்றிக்கொள்கிறார்கள். தனக்குப் பிடிக்காத ஆடைகளை அணிகிறார்கள். தனக்குப் பிடிக்காத கருத்துகளைக்கூட ஆமோதிக்கிறார்கள். தங்களுடைய விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, மற்றவர்கள் எதிர்பார்க்கும் மனிதராக வாழத் தொடங்குகிறார்கள்.
இதன் ஆபத்து என்ன தெரியுமா?
மற்றவர்களுடைய பாராட்டைப் பெறுவதற்காக வாழும் மனிதருக்கு, ஒருபோதும் முழுமையான மனநிறைவு கிடைப்பதில்லை. ஏனென்றால், ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருவருக்காக உங்களை மாற்றிக்கொண்டால், இன்னொருவருக்கு நீங்கள் பிடிக்காமல் போகலாம்.
இப்படியே ஒவ்வொருவருடைய விருப்பத்திற்கும் ஏற்ப உங்களை மாற்றிக்கொண்டே இருந்தால், கடைசியில் உங்களுக்குப் பிடித்தமான மனிதராகக்கூட உங்களால் இருக்க முடியாது.
உலகம் ஏற்கெனவே ஒரு எடிசனை, ஒரு ஐன்ஸ்டீனை, ஒரு ஸ்டீவ் ஜாப்ஸை உருவாக்கிவிட்டது. ஆனால், உங்களைப் போன்ற இன்னொருவரை இதுவரை உருவாக்கவில்லை. அப்படியிருக்கும்போது, இன்னொருவரின் நகலாக மாறுவதற்கு ஏன் ஆசைப்பட வேண்டும்?
இங்கே ஒரு முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள் என்பதன் பொருள், உங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளாதீர்கள் என்பதல்ல.
கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்ல மாற்றம். பிடிவாதத்தைக் கைவிடுவது நல்ல மாற்றம். பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கற்றுக்கொள்வது நல்ல மாற்றம். புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு உங்களை மேம்படுத்திக்கொள்வதும் நல்ல மாற்றம்தான்.
ஆனால், மற்றவர்களுடைய அங்கீகாரத்திற்காக உங்களுடைய அடிப்படை அடையாளத்தையே இழந்துவிடுவது தவறு. உங்கள் குணத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்; உங்கள் தனித்துவத்தை அழித்துக்கொள்ளாதீர்கள்.
ஒரு ரோஜாப்பூ மல்லிகையைப் போல மணக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. மல்லிகைப்பூ ரோஜாவைப் போல அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான அழகும் மணமும் இருக்கிறது. மனிதர்களும் அப்படித்தான்.
உங்களிடம் இல்லாத ஒன்றுக்காக வருத்தப்படுவதைவிட, உங்களிடம் இருக்கும் தனித்துவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்; ஆனால் அவர்களாகவே மாறிவிடாதீர்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
