உயிர் குடிக்கும் பட்டாசு ஆலை தேவையா?

Image

எந்த வகையிலும் மனிதரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவைப்படாத பட்டாசுகள் தயாரிப்பதற்காக கொத்துக்கொத்தாக உயிர்கள் பறி போகின்றன. அந்த ரத்த வாடையைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் மனிதர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியாக பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். என்பது தான் வாழ்க்கை முரண்.

ஒவ்வொரு பட்டாசிலும் ஏழைகளின் ரத்தமும் வியர்வையும் ஒளிந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி தெரிந்தும் அதனை ஒரு வியாபாரம் என்றும் தொழிற்சாலை என்றும் தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்.

இந்த தொழிலை முடக்கிவிட்டால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஆதாரம் பறி போகும் என்று யாரும் கவலைப்படத் தேவையே இல்லை. திடீரென ஜெயலலிதா ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருந்து லாட்டரியை விரட்டியடித்தார். தெருவுக்குத் தெரு லாட்டரிக் கடை வைத்துக்கொண்டு விற்பனை செய்தவர்களும் அதை வாங்கி ஏமாந்தவர்களும் செத்தா போனார்கள்.

மனிதர்கள் எல்லா சூழலிலும் பிழைத்துக்கொள்ளும் தகுதி படைத்தவர்கள். ஆகவே, இந்த வேலை இல்லை என்றால் வேறு வேலை தேடிக்கொள்வார்கள் அல்லது உருவாக்கிக் கொள்வார்கள்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த கொடுமையான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

யாருக்காக இவர்கள் உயிர் இழந்தார்கள் என்பது தான் கேள்வி.

Leave a Comment