மிருகங்களுக்கு மாதவிலக்கு உண்டா..?

மருத்துவ ஆச்சர்யம்

பெண்கள் அனைவருக்கும் மாதவிலக்கு சுழற்சி நடைபெறுகிறது. பெண்களின் கருப்பையின் உட்சுவரில் இருக்கும் எண்டோமெட்ரியம் எனப்படும் நரம்புத்திசுக்கள், கர்ப்பம் ஏற்படாத தருணங்களில் கிழிந்து வெளியேறும் இயற்கை சுழற்சியே மாதவிலக்கு. பெண்களுக்குப் பொதுவாக 25 முதல் 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு நிகழ்கிறது.

மனிதரைப் போலவே விலங்குகள், பறவைகளுக்கும் மாதவிலக்கு உண்டா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு.

பெண்களுக்கு போன்று யூட்ரஸ் எனப்படும் கர்ப்பப்பை பறவைகளுக்குக் கிடையாது. முட்டை இடுவதற்கு ஏற்ற ஹார்மோன் சுழற்சி மட்டுமே உண்டு. எனவே பறவைகளுக்கு மாதவிலக்கு வலி, ரத்தம் போன்றவை ஏற்படுவதில்லை.

அதேநேரம், மனிதரைப் போலவே இருக்கும் குரங்கு இனத்திற்கு மட்டும் மென்ஸ்ட்ரல் சைக்கிள் எனப்படும் மாதவிலக்கு சுழற்சியும் சிறிய அளவுக்கு ரத்தப்போக்கும் காணப்படுகிறது. ஆனால், பெண்களுக்குப் போன்று சீரான ரத்தப்போக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் நிகழ்வதில்லை.  

யானை, குதிரை, மாடு, நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு சிறிய அளவில் ஹார்மோன் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், மாதவிலக்கு சுழற்சி, ரத்த வெளியேற்றம் கிடையாது.

விலங்குகள் தங்கள் வலி, வேதனையை வெளிப்படையாகக் காட்டுவதில்லை. அதனை மருத்துவத்தால் அளவிடவும் முடிவதில்லை. எனவே, மாதவிலக்கு மாற்றத்தால் விலங்குகள் வேதனைப்படுவது இன்னமும் முடிவு காணப்படாத ஆய்வாகவே உள்ளது. மாதவிலக்கு நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை உணர்ந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு காட்டுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment