அண்ணாமலைக்கு பட்ஜெட் குட்டு

Image

எகிறியடிக்கும் தி.மு.க.

’’இது ஒரு நாற்காலி சேமிப்பு பட்ஜெட். இந்த முயற்சிகள் அனைத்தும் நாற்காலியைக் காப்பாற்ற மட்டுமே செய்யப்பட்டுள்ளன’’ என்று பா.ஜ.க.வின் பட்ஜெட்டை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்தது. ‘’தமிழகத்துக்கு இந்த பட்ஜெட்டில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுக்கப்போவதில்லை’’ என்று ஸ்டாலின் எதிர்ப்பை பதிவு செய்தார்.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பட்ஜெட்டில் தமிழகம் என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது. பட்ஜெட் உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என்று கூறியிருந்தார்.

இதற்கு தி.மு.க.வினர் கடுமையாக எதிர்வினை ஆற்றிவருகிறார்கள். ‘’தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது என மோடி – அமித்ஷாவை வேண்டுமானால் அண்ணாமலை ஏமாற்றலாம். தமிழ்நாட்டிற்கு மோடி நிதி ஒதுக்கினார் என்று தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. மோடிக்கு தமிழ்நாட்டை சுரண்ட மட்டும் தான் தெரியும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். 1) 2015 – 16 பட்ஜெட்டில் அருண்ஜெட்லி, தமிழ்நாட்டிற்கு கூடங்குளம் இரண்டாவது அணு உலையை அறிவித்தார். அதே பட்ஜெட்டில் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் ஜூலை, 2016 முதல் மின் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆமாம் அவ்வளவு வேகம் ஆனால் மதுரை AIIMS க்கு சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில ரேபரேலி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்த திட்டத்தொகையான ரூ.832 கோடியில், ரூ.665 கோடியும், ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.1,618 கோடியில் ரூ.1,289.52 கோடியும், மகாராஷ்டிராவிற்கு ரூ.1577 கோடியில் ரூ.1,218.92 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.1,754 கோடியில் ரூ.1,362 கோடியும், உத்தரப் பிரதேசம் கோரக்பூர் எய்ம்ஸுக்கு ரூ.1,011 கோடியில், ரூ.874,38 கோடியும், பஞ்சாப் எய்ம்ஸுக்கு ரூ.925 கோடியில், ரூ.788.62 கோடியும், இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.1,471.04 கோடியில் ரூ.1,407.93 கோடியும் ஒதுக்கீடு செய்த பாஜக அரசு. மதுரை எய்ம்ஸுக்கு 1977.8 கோடி ரூபாயில், வெறும் 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது என்பது 2023 ஆம் ஆண்டு RTI அம்பலப்படுத்தியது.

அணு உலை அறிவித்த அடுத்த ஆண்டே பயன்பாட்டிற்கு வரும், மருத்துவமனைக்கு 10 ஆண்டுகள் கடந்தாலும் காம்பவுன்ட் சுவர் மட்டும் தான். இது தான் பாஜகவின் தமிழ்நாடு பாசம். 2) 2021-22 நிதியாண்டில், தமிழ்நாட்டிற்கு 1,03,000 கோடியை மோடி ஒதுக்கியதாக, மோடியின் காதுகளே கதறும் கதையை தெரிவித்துள்ளார். இதில் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் மட்டும் 63,246 கோடி. திட்டத்தின் அடிப்படையே இதில் 50% குறைவாகவே ஒன்றிய அரசின் நிதி. ஆக, 63,245 கோடி என்பது முதல் பொய். அடுத்ததாக, பொது முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தும் இன்று வரை மோடி அரசு அத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

22/07/2024 அன்று, சென்னை மெட்ரோ திட்டத்தை மாநில அரசு தான் செயல்படுத்துகிறது என்று ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெங்களூர் மெட்ரோவுக்கு 14,788 கோடி, நாக்பூருக்கு 6,708 கோடி, கொச்சிக்கு 1,957 கோடி ஒதுக்கீடு செய்தார் மோடி. 3) 2021 – 22 நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட மற்றொரு திட்டம், கடற்பாசி பூங்கா. ஒன்றிய அரசு ரூ. 78.77 கோடி மற்றும் தமிழ்நாடு அரசு ரூ.48.94 கோடி பங்களிப்பு என மொத்தம் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்க, 02/09/2023 அன்று தான் இராமநாதபுரத்தில் அடிக்கல் நாட்டினார் எல்.முருகன். எய்ம்ஸ் செங்கல்லை போலவே, மற்றொரு செங்கல்லாக அதுவும் நிற்கிறது.  மற்றபடி பெங்களூர் – சென்னை, விசாகபட்டிணம் – சென்னை போன்ற பிற மாநில விரைவுச் சாலைகள் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் நிதி மட்டும் ஒதுக்கப்படவில்லை. இப்படி ஒதுக்காத நிதிக்கு கணக்கு, தொடங்கவேப்படாத திட்டத்திற்கு பெயர் என்று பெயரளவுக்கு தமிழ்நாட்டை ஏமாற்ற திட்டங்களை அறிவித்தார் மோடி. தற்போது ஏமாற்றுவதற்கு கூட திட்டங்கள் இல்லை என்று திமிராக அறிவிக்கிறார். தமிழ்நாடு பாஜக, ஆஹா.. பேஷ், பேஷ் என்கிறது. 4) ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து மற்றொரு கதையை வெளியிட்டுள்ளார் அவர். சங்கிக்கூட்டம் எதிர்த்து சீரழித்த சேது கால்வாய் திட்டம் மட்டும் 20 ஆண்டுகளுக்கு முன்பே, 2500 கோடிக்கும் மேல். வாயெல்லாம் பொய் என்றான பிறகு, வரலாறு எதற்கு ?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்

Leave a Comment