ஆதாரம் காட்டும் உடன்பிறப்புகள்.
மதுவிலக்கு மாநாடு என்றால் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடாமல் அ.தி.மு.க.வுக்கு மட்டும் சிறப்பு அழைப்பு விடுவது ஏன்..? உண்மையிலே நீண்ட காலமாக மதுவிலக்கு கேட்டு போராடும் பா.ம.க.வை அழைக்க மறுப்பது ஏன்..? தி.மு.க. கூட்டணியை உடைத்து அ.தி.மு.க.வுக்கு உயிர் கொடுக்கவே திருமாவளவன் முயற்சி செய்கிறார் என்று தி.மு.க. ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு நிலை எடுத்திருக்கிறார்கள்.
தி.மு.க. ஆதரவாளர்கள் இது குறித்து, ‘’ கூட்டணி தர்மத்திற்காக கட்சியின் கொள்கையில் சமரசம் செய்யத் தேவையில்லை தான். ஆனால் கூட்டணிக் கட்சி ஆட்சியில் நீடிக்க கூடாது. அரசியல் அநாதை ஆகிவிட்ட கட்சிக்கு உயிர் கொடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. திருமாவின் இந்த செயலை ஏற்க முடியாது.
மதுவிலக்கு ஒரேடியாக கொண்டு வரமுடியாது. இதற்கு பதிலாக விசிக சார்பில் மதுவின் ஆபத்துகளை விளக்கு தெருமுனை பிரச்சாரங்கள் நடத்தலாமே? அப்படி நடத்தினால் தங்கள் கட்சிக்கே அது ஆபத்தாகி விடும் என்பதை அறியாதவரல்ல திருமா. பின்பு ஏன் இந்த நெருக்குதல்? ஏற்கனவே அதிமுக மீது சாஃப்ட் கார்னர் உள்ளவர் தான். மீண்டும் மீண்டும் அதை நிரூபிக்க வேண்டாம் திருமா.
கூட்டணியை காயப்படுத்தினால் அதன் விளைவுகளை களத்தில் சந்திக்க நேரிடும். அதிமுகவுக்கு உயிர் கொடுக்க நினைத்தால் உங்கள் கட்சியை கலைத்து விட்டு மொத்தமாக அதிமுகவில் இணைந்து விடுங்கள். உங்கள் நோக்கம் மதுவிலக்கு மாநாடு தான் என்றால் ஏன் பாமகவிற்கு அழைப்பில்லை?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அது மட்டுமின்றி விடுதலை சிறுத்தைகளின் கடந்தகால தேர்தல் வரலாறையும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
2006 சட்டமன்றத் தேர்தல் :
அதிமுகவுடன் கூட்டணி. போட்டியிட்ட தொகுதிகள்: 9 வென்ற தொகுதிகள்: 2 அப்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியவில்லை.
2011 சட்டமன்றத் தேர்தல் :
திமுகவுடன் கூட்டணி. பாமகவும் இந்த கூட்டணியில் இருந்தது. போட்டியிட்ட தொகுதிகள் : 10. எல்லா தொகுதிகளிலும் தோல்வி. திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை.
2016 சட்டமன்ற தேர்தல் :
விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி. போட்டியிட்டது : 25 அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழப்பு.
2021 சட்டமன்றத் தேர்தல் :
திமுகவுடன் கூட்டணி. போட்டியிட்டது : 6 வென்றது : 4
நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்த 2009 தேர்தலில் தான் ஒரு தொகுதியை வி.சி.க. வென்றது. அடுத்து 2019 தேர்தலில் 2 தொகுதிகளும் 2024 தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற எல்லா தேர்தலிலும் தோல்வியே அடைந்துள்ளது.
இதை பார்க்கும்போதே தி.மு.க.வால் மட்டுமே விடுதலை சிறுத்தைகளுக்கு லாபம் என்பது தெரியவரும். விடுதலை சிறுத்தைகளால் தி.மு.க.வுக்கு லாபம் இல்லை. இதற்கு மேலும் எடப்பாடி அல்லது விஜய் என்று முடிவு செய்தால் மீண்டும் ஒரு டெபாசிட் இழப்புக்கு சிறுத்தைகள் தயாராகட்டும் என்று விளாசுகிறார்கள்.