ஞானகுரு பதில்
கேள்வி : வலி, சோர்வில் உடல் ஆரோக்கியக் குறைவை கண்டுபிடிக்கிறோம். அதுபோல், டிப்ரஷனுக்கு அறிகுறிகள் என்ன..?
- எஸ்.அன்பரசன், சென்னை.
ஞானகுரு :
உடல் நலன் போலவே மன நலனும் ஆரோக்கியத்திற்கு முக்கியம். மனநலம் குறைவதை 10 அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
- வழக்கமாக செய்யும் வேலைகளைச் செய்வது கடினமாக அல்லது குழப்பமாக இருக்கும்.
- நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினருடன் பேசாமல் விலகியிருக்கத் தோன்றும்.
- தன்னம்பிக்கை குறைந்து, நம்மால் எதுவும் செய்யமுடியாது என்ற நெகடிவ் மனநிலை நீடிக்கும்.
- முக்கியமான விஷயங்களிலும் மறதி. எதை எங்கே வைத்தோம் என்பதில் குழப்பம்.
- சின்ன சத்தம் கேட்டாலும் பயம், பதட்டம் தோன்றும்.
- சாதாரணமாக ஒருவர் கேள்வி கேட்டாலும் கிண்டல் செய்வதாகத் தோன்றும். .
- உணவு, தூக்கத்தில் அதிக மாற்றம் ஏற்படும்.
- சிந்தனைகளை கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியாது.
- தன்னை யாரும் விரும்பவில்லை, தான் யாருக்கும் தேவையில்லை என்ற எண்ணம் வரும்.
- மகிழ்ச்சி தரும் விளையாட்டு, சினிமா போன்ற பொழுதுபோக்குகளும் எரிச்சல் தரும்.
ஒரு சில நாட்கள் இதுபோன்ற மாற்றம் இருப்பது மனநோய் அல்ல. இந்த மாற்றங்கள் தொடர்ந்து நீடிப்பதும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதும் உடனடியாக கவனிக்க வேண்டிய அறிகுறி. நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் பேசுவதன் மூலம் இந்த பிரச்னையைத் தீர்க்க முடியும்.
அதன் பிறகும் டிப்ரஷன், ஆன்சைட்டி தொடர்ந்தால் தனியாகப் போராடாமல் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
