ஸ்பைடர் மேன் படத்தில் அமெரிக்க நடிகை ஸெண்ட்யாவை பார்த்தபோதே ஏதோ ஒரு மின்னல் அடித்தது. அடுத்து த கிரேட்டஸ்ட் ஷோ மேன் படத்தில் மனதை அள்ளினார். அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் மிரட்டிக்கொண்டேயிருந்த ஸெண்ட்யா, இப்போது அமேசான் பிரைமில் தமிழ் டப்பிங்குடன் காணக் கிடைக்கும் சேலஞ்சர்ஸ் படத்தில் உலுக்கியெடுத்துவிட்டார்.
சேலஞ்சர்ஸ் படத்திற்கு ஸெண்ட்யாவுக்கு சிறந்த நடிகை ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், போட்டிக்குள் இந்தப் படம் நுழையவே இல்லை. இதற்கு அவரது ரசிகர்கள், ‘ஹாட் ஸெண்ட்யாவைப் பார்க்கப் பயந்து சேலஞ்சர்ஸ் படத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள்’ என்று கடுப்பாக கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
ஸ்போர்ட்ஸ் சினிமாக்கள் நிறைய வந்திருக்கின்றன என்றாலும் இப்படியொரு ரொமாண்டிக் ஸ்போட்ஸ் பார்த்ததில்லை. டென்னிஸில் உச்சம் தொடத் துடிக்கும் டஷிக்குத் திடீரென கால் எலும்பு பிசகி விளையாட முடியாத நிலை உருவாகிறது. அதனால், கோச்சாக மாறி யுஎஸ் ஓப்பன் போட்டியில் கணவனை ஜெயிக்க வைக்கப் போராடுகிறாள். இம்புட்டுத்தான் கதை. ஆனால், கதையை விட திரைக்கதை, போட்டோகிராபி, பின்னணி இசையும் வேற லெவல்.
டீன் வயது டென்னிஸ் வீராங்கனையான டஷியை ஒரு போட்டியில் சந்திக்கும் இளம் நண்பர்களான பேட்ரிக், ஆர்ட் டொனால்ட்சன் இருவரும் இம்ப்ரெஸ் செய்ய முயல்கிறார்கள். ஃபயர் அண்ட் ஐஸ் என்று அழைக்கப்படும் இரண்டு பேருமே டஷியை கவர்கிறார்கள். காலச் சூழலில் ஆர்ட்டை திருமணம் முடித்து குழந்தை பெற்றுக்கொள்கிறாள். ஆர்ட் பெரிய சாதனை புரிய வேண்டும் என்றால் பழைய நண்பன் பேட்ரிக்கை ஜெயித்து புத்துணர்ச்சி அடையவேண்டும் என்று 13 ஆண்டுகளுக்குப் பிறகு சேலஞ்சர்ஸ் போட்டியில் இருவரையும் எதிரெதிரே விளையாட வைக்கிறாள்.
இவர்களுக்குள் போட்டி ஆரம்பக்கும் போது படம் தொடங்கி, கடைசி பந்தில் படம் முடிகிறது. இதற்கிடையில் நான் லீனியர் முறையில் கதை அங்கிட்டும் இங்கிட்டும் அல்லாடும் பந்து போன்று துள்ளி விளையாடுகிறது. வழக்கமான முக்கோணக் காதல். ஆனால், மூன்று பேரும் மூன்று பேரையும் காதலிக்கிறார்கள். விளையாட்டு, நட்பு, காதல், காமம் எல்லாமே ஒன்று என்பதை முத்தம் மூலம் மொத்தமாகச் சொல்லித்தருகிறார் ஸெண்ட்யா.
ஹாட் என்றால் செம ஹாட். அதனால் குழந்தைகளுடன் படத்தைப் பார்த்துவிடாதீர்கள்.
உணர்வுபூர்வக் காட்சிக்கு இப்படியும் பின்னணி இசைக்க முடியும் என்பது ரொம்பப் புதுசு. அமேஸானில் இருந்து விரைவில் இந்தப் பணம் காணாமல் போகப் போகிறதாம், சீக்கிரமாப் பாத்துடுங்க. அப்புறம் ரொம்பவும் மிஸ் பண்ணுவீங்க.