கஷ்டம் என்பது வண்ணத்துப்பூச்சி

Image

க்யூட் ஆன குட்டிக் கதை

ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு வகையில் தான் மட்டும் கஷ்டப்படுவதாக நினைக்கிறான். மற்றவர்களுக்கு வரும் கஷ்டங்களுடன் ஒப்பிடும்போது தன்னுடைய கஷ்டம் மட்டுமே மிகவும் துன்பகரமானது என்றும் நினைக்கிறான். உண்மையில் மிகவும் இயல்பாக வாழ்க்கையில் தென்படும் விஷயங்களைத்தான் பெரும் துயரமாகவும், கஷ்டமாகவும், துன்பமாகவும் நினைக்கிறான். இவற்றை புறக்கணிக்க வேண்டுமே தவிர பயப்படக்கூடாது. கஷ்டம் என்பது பூதத்தை போன்றது. பயப்பட பயப்பட அதன் உருவம் வளர்ந்துகொண்டே செல்லும். அதிகம் பயந்தால் ஆபத்துதான்.

கஷ்டம் மனிதனுக்கு மனவலிமையை கொடுக்கிறது என்பதுதான் உண்மை. இந்த உண்மை புரியாமல், என்னுடைய குழந்தைக்கு எந்தத் துன்பமும் கஷ்டமும் வரவே கூடாது என்று பெற்றோர் கடவுளிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள்.. தங்களைப் போன்று படிக்கவும், பள்ளிக்கு சென்றுவரவும் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நிறையவே செலவழிக்கவும், அதற்காக கஷ்டப்படவும் தயாராக இருக்கிறார்கள். சின்ன வயதில் கஷ்டத்தை அனுபவிக்காமல் வளரும் குழந்தைதான் எதிர்காலத்தில் சின்ன கஷ்டத்திற்கும் மரவட்டையைப் போன்று சுருண்டுவிடுகிறது.

ஒரு புழு எப்படி பட்டாம்பூச்சியாக மாறுகிறது என்பதை தன் மகனுக்கு காட்டுவதற்காக, அதன் வளர்ப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார் அப்பா. முட்டையில் இருந்து எத்தனை கஷ்டத்துடன் வெளிவருகிறது என்று பார்க்கச்சொன்னார். முட்டையில் இருந்து வண்ணத்துப்பூச்சி வெளிவருவதற்கு மிகவும் சிரமப்பட்டதை பார்த்த சிறுவனுக்கு மனம் வலித்தது. வண்ணத்துப்பூச்சிக்கு இத்தனை கஷ்டம் வேண்டாம் என்று, அந்த முட்டையை அவனே உடைத்து வண்ணத்துப்பூச்சியை வெளியேற்றினான். வெளியே வந்த வண்ணத்துப்பூச்சி எத்தனை முயற்சி செய்தும் பறக்க முடியவில்லை. சிறகை விரித்து பறக்கமுடியாமல் மரணத்தைத் தழுவியது. அதைக்கண்டு அழுதபடி அப்பாவிடம் விளக்கம் கேட்டான் மகன்.  முட்டையில் இருந்து வெளிவர முயற்சிக்கும்போதுதான் பட்டாம்பூச்சியின் இறகுகள் பலம் பெறுகின்றன. அந்த வாய்பை நீ உடைத்துவிட்டதால், அந்த பட்டாம்பூச்சி இறந்துவிட்டது என்றார் அப்பா.

இந்த பட்டாம்பூச்சி போலத்தான் தன்னுடைய பிள்ளையின் வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள் பெற்றோர்கள். கஷ்டமே இல்லாமல்  வாழ்நாள் முழுவதும் வாழமுடியுமா என்று யோசித்துப்பார்த்தால், வாய்ப்பே இல்லை என்பது புரியும். ஏனென்றால் உறவினர்கள், நண்பர்களின் மரணங்களை நிச்சயம் தரிசிக்கவேண்டிய வாய்ப்பு வரும். என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும் உடல் நலம் கெட்டுப்போகும். ஏமாற்றம், துரோகம், அவமானம் போன்ற எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலைமை எல்லோருக்கும் வரவே செய்யும். அதனால் சின்ன வயதிலிருந்தே கஷ்டங்களை எதிர்கொள்ளும் மனப்பான்மையுடன் பிள்ளையை வளர்பதுதான் நல்லது.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்