தெளிவான குழப்பம்
இந்தப் பிரபஞ்சம் தோன்றியது பிக் பேங் எனப்படும் பெருவெடிப்பு மூலம் என்று அறிவியலாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள். அந்த பெருவெடிப்பு நொடி தாண்டி நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் அறிவியல் தெளிவாக வரையறுத்து இருக்கிறது. ஆனால் அது துவங்கிய exact நொடியில் என்ன நடந்தது, அல்லது துவங்குவதற்கு முந்தைய கணங்களில் என்ன நடந்தது; அந்தப் பெருவெடிப்பை எது துவக்கியது என்பது குறித்து இன்று வரை நமக்குப் புரிதல் இல்லை. அதாவது அறிவியலுக்கு இல்லை. அதற்கான தேடலில் அறிவியலாளர்கள் இன்றுவரை முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர்.
அப்படியானால் அதைக் கடவுள்தான் துவக்கினார் என்று நம்பிக் கொள்வதில் என்ன பிரச்சினை..?
இந்த கேள்விக்கு இயற்பியல் விஞ்ஞானி பிரையான் கிரீன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
சரி, அப்படி சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி சொல்வது பிக் பேங் குறித்த நமது புரிதலை ஏதாவது வகையில் மேம்படுத்துகிறதா?’ இந்த இரண்டு பதில்களை சொல்லிப் பாருங்கள்:
- ‘பிக் பேங் எப்படி துவங்கியது என்று நமக்குத் தெரியாது.’
- பிக் பேங்கை துவக்கியது கடவுள்
முதல் வாக்கியத்தை விட இரண்டாவது வாக்கியம் எந்த அளவிலும் நமது புரிதலை ஆழப்படுத்தவில்லையே? முதல் பதில் போலவே இரண்டாவது பதிலும் அர்த்தமற்ற வாக்கியம்தான். சரி, கடவுள் துவக்கினார் என்றால் எந்தக் கடவுள்? விஷ்ணுவா, யாஹ்வேவா, இயேசுவா, அல்லாஹ்வா? அல்லது வழக்கொழிந்து போன கிரேக்க, மாயன் கடவுளர் எவராவதா? அந்தக் கடவுளும் கூட எதற்காக இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினார்? எப்படி உருவாக்கினார்? பிக் பேங்குக்கு முன் பெரிதாக ஒன்றுமே இருக்கவில்லை எனில் ஒன்றுமே இல்லாததில் இருந்து எப்படி எதையோ உருவாக்கினார்?
இந்த எந்தக் கேள்விகளுக்கும் அந்த இரண்டாவது பதில் விளக்கம் கொடுக்கப் போவதில்லை. முதல் பதிலிடமும் விளக்கம் இல்லை. அதாவது முதல் பதிலுக்கும் இரண்டாவது பதிலுக்கும் பொருளில் எந்த வித்தியாசமும் இல்லை.
இதற்கெல்லாம் ஒவ்வொருவரும் தத்தமது மதங்கள் முன்வைத்த கற்பனைகள் சார்ந்து சில பதில்களை கொடுக்கக் கூடும். ஆனால் அவை எல்லாமே எந்த ஆதாரமும் அற்ற கற்பனைதான். மகாவிஷ்ணுதான் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஒரு இந்து சொல்வார். அல்லாஹ்தான் படைத்தார் என்று ஒரு முஸ்லிம் சொல்வார். பாகிஸ்தானில் ஒரு இயற்பியல் புத்தகத்தின் முதல் அத்தியாயம் ’14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பிரபஞ்சத்தை அல்லாஹ் படைத்தார்,’ என்று துவங்குகிறது.
ஆனால் அதை சொல்வது இன்றுதான். இவர்கள் எழுதிய மத நூல்கள் எதுவுமே பிரபஞ்சம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பதை சொல்லவில்லை. பூமி 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று எந்த இறைத் தூதரும் சொல்லவில்லை. ஒரே ஒரு இயற்பியல் விதியைக் கூட ஒரு புனித நூலும் சுட்டிக் காட்டவில்லை. அவ்வளவு கூட வேண்டாம்: பூமியில் மொத்தம் ஏழு கண்டங்கள் உள்ளன என்ற எளிய தகவலைக் கூட ஒரு புனித நூலும் தெரிவிக்கவில்லை. காரணம் அந்த நூல்களை எழுதியவர்களுக்கு தாம் பிறந்து வளர்ந்த பழங்குடி கலாச்சாரங்கள் தாண்டி வேறு எதைப் பற்றியும் எந்த அறிவும் இல்லை. அந்தப் பழங்குடி கலாச்சார அறிவுகள் மட்டுமே அவரவர் புனித நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
அதாவது, அறிவியல் முன்னேற்றத்துக்கு என ஒரே ஒரு குந்துமணி அளவுக்குக் கூட எந்த உலக மதமும் பங்களிக்கவில்லை. சொல்லப் போனால், அறிவியல் முன்னேற்றத்தை பல மதங்கள் கோபமுடன் தடுத்தே கூட இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் நவீன உலகில் ஏதாவது அறிவியல் முன்னேற்றம் நிகழ்ந்தால் அதைத் தனதாக சொந்தம் கொண்டாடுவதற்கு மட்டும் மதங்கள் தயங்குவதில்லை. பெரு வெடிப்பில் பிரபஞ்சம் துவங்கியதா? ஓகே, அதைத் துவக்கியதே எங்கள் கடவுள்தான். பரிணாம வளர்ச்சியில்தான் உயிர்கள் தோன்றிப் பல்கிப் பெருகினவா? அடடா, அதற்கு வித்திட்டதே எங்கள் இறைவன்தான். இப்படி சொல்லிக்கொள்வதால் ஏதேனும் மாறிவிடப் போகிறதா.. இல்லையே..’’ என்று கூறினார்.
ஆம்., தெரியாது என்பதை தெரியாது என்றே சொல்வோம்.