ராஜாஜியால் தோற்றாரா பெருந்தலைவர்?

காமராஜர் நினைவலைகள் – 10

இன்று திமுக தோல்வி அடைந்ததும், அதன் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் சிதறி ஓடிவிட்டன. ஒருவருக்கொருவர் தோல்விக்குப் பழி போடுகிறார்கள். அதேநேரம், பெருந்தலைவர் காமராஜர் தோல்வியை எப்படி எடுத்துக்கொண்டார், கூட்டணிக்கு எப்படி மரியாதை கொடுத்தார் என்பது கல்வெட்டியில் பொறிக்கவேண்டிய நிகழ்வு.

காங்கிரஸ் தோல்வி

1954 முதல் 1963 வரை ஒன்பது வருடங்கள் முதல்வராக இருந்த காமராஜர், அந்த பதவியில் இருந்து தாமகவே விலகி அவர் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டு டெல்லி சென்று விட்டார். காமராஜருக்குப் பதிலாக தமிழக முதல்வரான பக்தவத்சலத்துக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.

அதோடு தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு பஞ்சம் ஏற்பட்டது. இந்த சூழலில்1967 தேர்தலில் திமுகவும் ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியும் கூட்டு சேர்ந்து காங்கிரஸை தோற்கடித்தனர். காமராஜர் முதல்வர் பதவியில் அமரமாட்டார் என்பதாலே தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தார்கள்.

ராஜாஜியுடன் கூட்டணி

இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்திரா காந்திக்கும் மொராஜி தேசாய்க்கும் இடையிலான மோதலில் காங்கிரஸ் உடைந்துபோனது. கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட காமராஜரின் காங்கிரஸ் கட்சியும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் அப்போது கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

இந்த நேரத்தில், ‘ராஜாஜியுடன் கூட்டணி வைத்ததால் தோற்றுவிட்டோம்’ என்று கூறிய நிர்வாகிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் கூறிய பதில் என்ன தெரியுமா..?

‘தோத்துட்டோம்கிறதுக்காக எல்லாத்தையும் மறந்துடறதா? நம்ம தோத்ததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல்லே கையிலே பணம் இல்ல. ஏமாத்தறவங்களைத்தான் ஜனங்க நம்புறாங்கன்னு ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் சேத்து ராஜாஜி தலை மேலே பழியைப் போடச் சொல்லறீங்களா?

ஜெயிப்போம்னு நெனச்சு தானே அவரோட சேந்தோம்னேன்! ஜெயிக்கணும்னா வேண்டியவரு; ஜெயிக்காட்டி வேண்டாதவரா? அவர் என்ன கெடுதல் செய்துப்புட்டாரு? அவரும் நானும் நிறைய விஷயங்கள்லே ஒத்துப் போறதிலலே. ஆனா தேசம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும்னு அவருந்தானே விரும்பறாருன்னேன்? அதை ஒத்துக்கிட்டுத்தானே கூட்டு சேர்ந்தோம்?”
இது எல்லாத்துக்குமா சேர்த்து ராஜாஜியாலேதான் தோத்துட்டோம்னு நினைச்சிக்கிட்டா யாரை ஏமாத்தப் போறோம்? அவரு நம்ம கூட இருக்காருங்கறத்துக்காவே, அந்த மரியாதைக்காகவேகூட நமக்கு அதிகமா ஓட்டு வந்திருக்கலாம் இல்லியா?” என்று கேள்வி எழுப்பினார்

இதுதான் காமராஜரின் பெருந்தன்மை.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment