சர்வதேச நீரிழிவு தினம்
இன்று சர்வதேச நீரிழிவு தினம். இந்நாளில் நீரிழிவு நோய் எனும் அமைதியான ஆட்கொல்லியின் கோரப்பிடியில் இருந்து நம் சமூகத்தைக் காக்கும் நமது கூட்டுப் பொறுப்பைப் பற்றி ஒவ்வொரு நபரும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது. உலகிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
எனவே குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது நீரிழிவுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். நீரிழிவு நோயை ஒரு விழிப்புணர்வு எச்சரிக்கை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கட்டுப்பாடான வாழ்க்கைக்கு மாறிவிட முடியும். கட்டுப்படுத்தப்பட்ட சர்க்கரை நோய் ஒருபோதும் ஆபத்து தருவதில்லை. எனவே, நீரிழிவு நோயை நேர்முறையாக அணுகுவதே இன்றைய தினத்தில் ஒவ்வொரு நபரும் ஏற்க வேண்டிய சபதம்.
இதுகுறித்து தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. ‘’இன்று உலக நீரிழிவு நாள் நீரிழிவு என்பது நோயல்ல; குறைபாடு உட்கார்ந்திருப்பவனுக்கும் வரலாம்; உழுபவனுக்கும் இது வரலாம் பெரும்பாலும் இது கணையத்தின் வேலைநிறுத்தம்; ஆனால் அஞ்சற்க.
முறையான உணவுக்கொள்கை மூச்சுவாங்கும் உடற்பயிற்சி சரியான மருந்தெடுப்பு இந்த மூன்றினாலும் இதைக் காணாமற் செய்யலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் நீரிழிவு கொரில்லா மாதிரி; ஓடிவிட்டது என்று பெருமூச்சு விட்டால் பதுங்கி உங்கள்மீது பாயும் சட்டென்று நீரிழிவு என்பது ஒரு வாழ்க்கை முறை அதற்குத் தயாரித்துக்கொண்டால் தற்காக்கலாம் நீரிழிவு கொண்டோர் நிலைகுலையத் தேவையில்லை தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம்’’ என்று கூறியிருக்கிறார்.
