சர்க்கரை நோயாளிகளுக்கு நோ
பேலியோ டயட், இண்டர்மிட்டண்ட் டயட் என்றெல்லாம் ஆளுக்கொன்றை பரிந்துரை செய்யும் நேரத்தில் சத்தமில்லாமல் மக்கள் ஆதரவைப் பெற்றூள்ளத் டீடாக்ஸ் டயட். அதாவது, டீடாக்ஸ் என்பது, உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான மற்றும் சுத்தமான உணவுகளின் மூலம் வெளியேற்றும் புது வகையான டயட்.
அந்தக் காலத்தில் நம் முன்னோர் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது முதல் விரதம் இருப்பது வரை மேற்கொண்ட அனைத்துமே டீடாக்ஸ் முறைகள்தான். இந்த முறையை, 45 ஆண்டுகளுக்கு முன் ஸ்டான்லி பரோஸ் என்பவர் வடிவமைத்தார். இன்று டீடாக்ஸ் டயட்டில் பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வெறும் பழச்சாறுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளுதல், ஒருவேளை அல்லது இருவேளை சாப்பிடாமலேயே வயிற்றை காயப்போடுதல், உடலில் நச்சு நீக்க மஞ்சள், மிளகு உள்ளிட்டவற்றை எடுத்தல் என டீடாக்ஸில் நிறைய முறைகள் உள்ளன.
உணவை முழுமையாக தவிர்த்துவிட்டு ஜூஸ், டீ, மேப்பிள் சிரப் சாப்பிடுவது மாஸ்டர் க்ளென்ஸ் டீடாக்ஸ் டயட் எனச் சொல்லப்படுகிறது. இதன்மூலம் உடலில் உள்ள நச்சுகள் முழுவதுமாக நீங்குகின்றன, என்கின்றனர், மருத்துவர்கள். பெரும்பாலான டீடாக்ஸ் முறை ஒன்றுமுதல் மூன்று நாள்களுக்கு விரதம் இருப்பதில் இருந்து தொடங்கும்.
புதிதாக தயாரிக்கப்பட்ட காய்கறி அல்லது பழ ஜூஸ், ஸ்மூதீஸ், டீ மற்றும் தண்ணீர் சேர்த்த எலுமிச்சைப் பழச்சாறு இவற்றை மட்டுமே அருந்துவது. மூலிகைகளையும் சேர்த்துக்கொள்வது, முறையாக உடற்பயிற்சி செய்வதே ஆகும். மேலும் மது, சிகரெட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதுபோல், ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளையும், செயற்கை உரங்கள் சேர்த்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
டீடாக்ஸ் டயட்டைப் பின்பற்றும்போது திரவ உணவுகள் மட்டுமே எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும். அதாவது காய்கறி அல்லது பழ ஜூஸ், ப்ரூட் வாட்டர், எலுமிச்சைச்சாறு கலந்த கிரீன் டீ போன்றவையே பிரதானம். திட உணவுகளை தவிர்க்க வேண்டி இருக்கும். சில நேரங்களில் டீடாக்ஸ் டயட்டில், தேநீர், மலமிளக்கிகள், இனிமா போன்றவையும் பரிந்துரைக்கப்படலாம். இதன்மூலம் திட உணவுகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பதால் செரிமான மண்டலத்துக்கு ஓய்வு கிடைக்கிறது. அது, இந்த ஓய்வைப் பயன்படுத்திக்கொண்டு தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்கிறது. முன்பைவிட நன்றாக இயங்க தன்னை தயார்படுத்திக் கொள்கிறது. கல்லீரலில் தேங்கும் நச்க்சுகள் வெளியேற்றப்படுகின்றன. சிறுநீரின் வழியே நச்சு வெளியேற்றம் நடப்பது தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது.
நம் உடலில் இயற்கையிலேயே ‘டீடாக்ஸ் மெக்கானிசம்’ உள்ளது. சருமம், செரிமான மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்றவை உடலின் நச்சுக்களை வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேற்றுகின்றன. இதைத்தாண்டி உடல் கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற பிரத்யேக செயல்முறைகள் தேவையில்லை. நம் உடலில் உள்ள அதிசயமான ஓர் உறுப்பு கல்லீரல். பெரிய தொகையைச் செலவழித்து டீடாக்ஸ் முறைகளைப் பின்பற்றுவதற்கு பதில் முழு தானியங்கள், பல வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்வதன்மூலம் நச்சு நீக்கும் வேலையை கல்லீரல் இயற்கையாகச் செய்துவிடும்.
தயிர், பழைய சாதம் போன்றவற்றையும், பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் ஓட்ஸ் போன்றவற்றையும், நார்ச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா அதிகரிக்கும். உடலின் நச்சு நீக்க வேலையையும் சிறப்பாகச் செய்து விடும்.
முறையான உணவு, கூடவே கொஞ்சம் உடற்பயிற்சி இந்த இரண்டும் உங்கள் எடையைச் சரியான அளவில் வைத்திருப்பதோடு நோய்களையும் அண்டவிடாமல் பாதுகாக்கும். என்றாலும், அடிக்கடி இப்படியான டயட்களைப் பின்பற்றினால் பக்கவிளைவுகள் இருக்கும் என எச்சரிக்கை செய்கின்றனர், மருத்துவர்கள். ஆகையால், சர்க்கரை, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் இத்தகைய டயட்டை பின்பற்றக்கூடாது.