சாலை விரிவாக்கத்தில் காட்டிய உறுதி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 196

சென்னை மக்கள் அனுபவிக்கும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மேம்பாலங்கள் கட்டுவதை விட சாலையை அகலப்படுத்துவது நல்ல தீர்வு தரும் என்று மேயர் சைதை துரைசாமி கூறிய ஆலோசனை சிறப்பான ஒன்று என்றாலும் அதை ஏற்பதற்கு யாருமே தயாராக இல்லை.

முன்னதாகவே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தனது இரண்டாவது திட்ட அறிக்கையில், சென்னை மாநகரின்  பேருந்து சாலைகள் எதிர்கால போக்குவரத்தைக் கணக்கிட்டு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய அறிக்கை மேயர் சைதை துரைசாமியின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும், இந்த அறிக்கையைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்பதற்கு ஏன் யாருமே முன்வரவில்லை என்பது சைதை துரைசாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இதுகுறித்து ஆலோசனை நடத்திய நேரத்தில் தயக்கத்துடன் அதிகாரிகள் பேசினார்கள். சாலை விரிவாக்கம் சிறப்பான தீர்வு என்பது தெரியும். ஆனால், இதில் நடவடிக்கை எடுப்பதற்கு இறங்கினால் சாதாரண பொதுமக்கள் தொடங்கி பல்வேறு வி.ஐ.பி.களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும். சிறிய வீடு கட்டியிருப்பவர்களும் பங்களா கட்டியிருப்பவர்களும் தங்கள் இடத்தை மனமுவந்து கொடுப்பதற்கு வரவே மாட்டார்கள். சாலையோர ஏழைகளின் வீடுகளை இடித்தால் பொதுமக்களும் புரிந்துகொள்ளாமல் அரசு மீதும் அதிகாரிகள் மீதும் கோபம் கொள்வார்கள். அதனால் சாலை விரிவாக்கம் பற்றி யோசிக்கவே இல்லை என்று உண்மையைப் பேசினார்கள்.

அதோடு, சாலை விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும்போது, இடம் கொடுப்பவர்களுக்கு அதிக பணம் கொடுக்கவேண்டிய நிலை இருக்கிறது. அதற்கு மாநகராட்சி நிதியில் இருந்து தான் கொடுக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறையும் இருப்பதால் இதனை செயல்படுத்த வழியும் வாய்ப்பும் இல்லை. எனவே, வேறு வழிகளைத் தேடுவோம் என்று சொன்னார்கள்.

ஆனால், சாலை விரிவாக்கம் செய்தே தீரவேண்டும் என்பதில் சைதை துரைசாமி பிடிவாதமாக இருந்தார். அதேநேரம், நிதிப் பிரச்னையை சமாளிப்பதற்கு ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment