ராக்பெல்லர் சக்சஸ் டிப்ஸ்
மிகப்பெரிய பங்களாக்களில் வசிப்பவர்கள், பெரிய கார்களில் செல்பவர்களைப் பார்க்கையில் அவர்கள் சொகுசாக வாழ்வதாகத் தோன்றலாம். அதேநேரம், அவர்கள் அந்த நிலைக்குச் செல்வதற்கு நிச்சயம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதே உண்மை.
கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளை என்றாலும் கஷ்டப்பட்டு பணத்தைப் பாதுகாக்கவில்லை என்றால், எத்தனை பெரிய அளவுக்குப் பணம் இருந்தாலும், அது காணாமல் போய்விடும்.
கஷ்டப்பட்டு உழைத்தவர்களே மிகப்பெரும் உயரத்தை அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் ராக்பெல்லர்.
அவர் இரண்டு டாலர் கூலிக்காக முப்பது மணி நேரம் உருளைக்கிழங்கு வயலில் வேலை செய்தவர் என்பது ஆச்சர்யமான உண்மை. ராக்பெல்லர் ரொம்பவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். விவசாயத் தொழிலில் அவருக்கு நிறைய ஆர்வம் இருந்தது. வாழ்க்கையை நடத்த அவர் முதலில் உருளைக்கிழங்கு வயலில் வேலை செய்து வந்தார்.
முப்பது மணி நேரம் வயலில் அவர் வேலை செய்தால் இரண்டு டாலர் கூலி கிடைக்கும். வேலை அதிகமாகவும் கூலி குறைவாகவும் இருக்கிறதே என்று அவர் பார்க்கவில்லை. அதற்குப் பதில் தம்முடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.
உருளைக்கிழங்கு வயலில் வேலை போன பிறகு, அவர் பல தொழில்களை முயற்சி செய்தார். ஒவ்வொரு வேலையிலும் அவர் முழுக் கவனத்தை செலுத்தி, செய்யும் தொழிலைப் பற்றி நன்கு கற்றுக் கொண்டார்.
நாளடைவில் அவர் சொந்தமாக ஒரு தொழில் நடத்த திட்டமிட்டார். அதுவரை அவர் வேலை பார்த்த பல்வேறு அனுபவங்களையும் அலசிப் பார்த்து, எண்ணெய் கம்பெனிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார். இதையடுத்தே ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனி என்ற ஒரு மோட்டார் எண்ணெய்க் கம்பெனியை ஏற்படுத்தினார்.
அவருடைய விடா முயற்சியாலும், அயராத உழைப்பாலும் அக்கம்பெனி சிறிது காலத்திலேயே மிகப் பெரியதாக மாறியது. அந்த நிறுவனமே உலகத்தின் எண்ணெய் ஏற்றுமதியையும், விலையையும் நிர்ணயிக்கக்கூடிய வகையில் வளர்ந்து உன்னதமான நிலைக்கு வந்தது.
ராக்பெல்லர், வாழ்க்கையில் தாம் வெற்றி பெற்றதற்குக் கடைப்பிடித்த முறையை அவரே வெளிப்படையாகக் கூறிருக்கிறார். அதை எல்லோரும் பின்பற்றி, எல்லோரும் வெற்றி அடையவேண்டும் என்று விரும்பினார். அவர் எங்கு சென்றாலும், அவரது வெற்றி ரகசியத்தை பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
ராக்பெல்லரின் முக்கியமான பத்து வெற்றி ரகசியங்கள் இங்கே.
1. வெற்றிப் பாதையைத் திட்டமிட்டு தேர்வு செய்து கவனம் மாறாமல் பயணியுங்கள்.
2. உண்மையாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள்.
3. மனதைத் தளர விடாதீர்கள்.
4. உண்மையைக் கடைப்பிடியுங்கள்.
5. நீங்கள் இல்லாவிட்டால், முதலாளிக்குப் பெருத்த நஷ்டம் என்று அவர் எண்ணும் படியாகச் சாமர்த்தியமாக வேலையைச் செய்யுங்கள்.
6. சிறு உத்தியோகத்தில் சேர்ந்து பெரிய பதவிக்கு வரவேண்டும்.
7. பிறர், உங்களிடம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகச் செய்யுங்கள்.
8. செய்யும் தொழிலைப்பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
9. கஷ்டப்பட்டு வேலை செய்யாவிட்டால் வாழ்க்கையில் சந்தோஷத்தையே காண முடியாது.
10. விளையாட்டுகளில் மனதை ஓடவிடக்கூடாது.
இந்தப் பத்து விஷயங்களையும் ஒருவர் கடைப் பிடித்தால் கட்டாயம் வாழ்க்கையில் அதிக பண சம்பாதிக்க முடியும் என்று ராக்பெல்லர் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.
