என்ன செய்தார் சைதை துரைசாமி – 412
தமிழகத்தில் இப்போது புது வகையான காய்ச்சல் வெகுவேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசுகையில், மேயராக இருந்த காலத்தில் சைதை துரைசாமி டெங்கு காய்ச்சலுக்கு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை குறித்து பேச்சுவந்தது.
இந்த தொடரில் அதுகுறித்து முன்பு பதிவு செய்திருக்கிறோம் என்றாலும், அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இப்போது விரிவாக பதிவு செய்யப்படுகிறது.
மக்களிடையே பல்வேறு நோய்களைப் பரப்பிவரும் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி தீவிரம் காட்டிவந்த நேரத்தில், சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவியது. கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டு வலியால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
டெங்கு எனும் வைரஸ் கிருமியால் ஏற்படுவதால் இதனை டெங்குக் காய்ச்சல் என்கிறார்கள். இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலியும் வேதனையும் தோன்றும். பொதுவாக கருப்பு நிறமும் சிறகுகளில் வெள்ளைப் புள்ளியும் உள்ள ஏடிஸ் எஜிப்தி எனும் கொசுக்களாலே டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.
டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்பட்டு கடுமையான காய்ச்சல், தலைவலி, கண் விழி சிவந்து கூசுதல் மற்றும் மூட்டு வலிகளில் அவதிப்பட்டார்கள்.
டெங்கு காய்ச்சலை விட, டெங்கு காய்ச்சல் வந்துவிடுமோ என்ற பயம் மக்களிடையே அதிகரித்தது. இந்த நிலையைக் கண்டு மேயர் சைதை துரைசாமி மிகவும் வேதனை அடைந்தார். உடனே இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
- நாளை பார்க்கலாம்.












