சாலை விரிவாக்கத்திற்கு டி.டி.ஆர்.

என்ன செய்தார் சைதை துரைசாமி – 197

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் மேயர் சைதை துரைசாமி. எந்த ஒரு பிரச்னை என்றாலும் அதற்கு நிச்சயம் தீர்வு இருக்கும் என்ற மன உறுதியுடன், அதற்கான வழியைத் தேடுவாரே தவிர, பிரச்னையைக் கண்டு ஒதுங்கிப் போகமாட்டார். சாலை விரிவாக்கம் செய்வது என்றால் இழப்பீடாக அதிக நிதி தேவைப்படும் என்பது உண்மை. இதற்காக மக்கள் மீது புதிய வரி எதுவும் விதிக்கவும் கூடாது, பழைய வரியை உயர்த்தவும் கூடாது என்ற சிந்தனையுடன் புதிய வழியைத் தேடினார்.

அப்போது தான் அவருக்கு டி.டி.ஆர். முறையைப் பயன்படுத்தும் யோசனை உதித்தது. அரசுக்கு இடம் கொடுப்பவர்களுக்கு பணமாக மட்டுமே நஷ்ட ஈடு தரவேண்டும் என்பது கிடையாது. டி.டி.ஆர். முறையில் ஈடுகட்டலாம். அதாவது சாலை விரிவாக்கம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தனியார் நிலங்களை கையகப்படுத்தும்போது, பணமாக மட்டுமே தர வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக புதிய இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தின் பரப்பைக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழைக் கொண்டு வேறு இடத்தில் கட்டிடம் கட்டிக்கொள்ளலாம். சொந்த இடம் இல்லாதவர்கள் இந்த உரிமையை பிறருக்கு விற்பனை செய்துகொள்ள முடியும்.

இப்படி ஒரு திட்டம் இருப்பதை சைதை துரைசாமிக்கு முன் இருந்தவர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை, பயன்படுத்தவும் இல்லை. இடம் கொடுப்பவர்களுக்கும் இந்தத் திட்டம் ஓரளவுக்கு பயன் தரக்கூடியது. நிதி பற்றிய கவலை தீர்ந்துபோனதால் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினார். டி.டி.ஆர். நடைமுறையில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு முதல் கட்டமாக ஒரு தனியார் நிறுவனம் பணியமர்த்தப்பட்டு,  நில அளவைப்  பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 நில  எடுப்பு அட்டவணை  தயார்  செய்தபோது,  முதல் தொகுப்பில்  14 சாலைகளில் விரிவாக்கத்திற்கு 143763.9  சதுர மீட்டர் பரப்பளவு  நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டும் என தெரிய வந்தது.  இத்தனை நிலத்தை எப்படி கையப்படுத்த முடியும் என்று எல்லோரும் மலைத்துப் போனார்கள். ஆனாலும், மேயர் சைதை துரைசாமி உறுதியுடன் இருந்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment