என்ன செய்தார் சைதை துரைசாமி – 245
பெருநகர சென்னையில் வேகத்தடைகளை மாற்றியமைத்த மேயர் சைதை துரைசாமிக்கு எழுத்தாளர் பாலகுமாரன் பாராட்டியிருந்த கடிதத்தை வெளியிட்டு இருந்தோம். அதேபோல் தினத்தந்தி அதிபர் இளையவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதற்காக மேயர் சைதை துரைசாமிக்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.
ஏனென்றால் அந்த அளவுக்கு வேகத்தடைகள் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். விபத்துகளைக் குறைக்கவும் தடுக்கவும் அமைக்கப்படும் வேகத்தடையே ஏராளமான விபத்துகள் நடப்பதற்கு சென்னையில் காரணமாக இருந்தன. ஒரு அடி அகலத்திற்கு அரை அடி அகலத்திற்கு, எந்த ஒரு முறையான அளவுக் குறிப்பும் இல்லாமல் மொத்தமாக தார்க் கலவையைக் கொட்டி, திண்டுகள் போன்று அமைக்கப்பட்டதால் ஏராளமான விபத்துகள் எற்பட்டன. புதிய மாடல் கார்களால் இந்த வேகத்தடைகளில் இடிக்காமல் செல்ல முடியாத நிலை இருந்தது.
இதனால் விபத்துகள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அத்தனை வேகத்தடைகளையும் உடனடியாக அகற்றினார் மேயர் சைதை துரைசாமி. அதோடு, இந்திய சாலைகள் ஆணையகமான ஐ.ஆர்.சி.யின் வழிகாட்டுதல்படி வேகத்தடைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.
ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் முழுமையாக சுரண்டி எடுக்கப்பட்டன. அதன்பிறகு ஒரே மாதிரியான உயரம், அகலத்துடன் புதிய வேகத்தடைகள், இரவில் ஒளிரும் ஸ்டட்ஸ் பொருத்தப்பட்டன. பகலில் செல்பவர்களுக்கு பளீச்சென தெரியும் வகையில் வெள்ளை நிறத்தில் எச்சரிக்கை பெயின்ட் அடிக்கப்பட்டன.
சென்னை மாநகரின் உட்புற சாலைகள் மற்றும் பேருந்து சாலைகளில் 2,584 வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இதனால் வேகத் தடைகளால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை சட்டென குறைந்தது. வாகன ஓட்டுனர்களுக்கு பெருத்த நிம்மதி ஏற்பட்டது. மக்களுடைய பிரச்னைகளை அறிந்து, நடவடிக்கை எடுப்பவர் என்று சைதை துரைசாமிக்கு மக்களிடம் நல்ல பெயரும், பாராட்டுகளும் கிடைத்தன. இதுகுறித்து தினத்தந்தி அதிபர், இளையவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் பாராட்டு தெரிவித்தது மட்டுமின்றி தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிட்டு பாராட்டவும் செய்தார். அதேபோல் தினமலர், தினமணி உள்ளிட்ட அனைத்து நாளிதழ்களும் பாராட்டின.
வேகத் தடையைப் பற்றிகூட ஒரு மேயர் சிந்தித்து நடவடிக்கை எடுத்தார் என்பதை நினைக்கும்போதே ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனென்றால் சைதை துரைசாமி தவிர எந்த அரசியல்வாதியும் இதுகுறித்து சிந்தித்ததுகூட இல்லை.
- நாளை பார்க்கலாம்.