என்ன செய்தார் சைதை துரைசாமி – 247
ஒரு காலத்தில் சென்னை நகரமெங்கும் சைக்கிள், ரிக்ஷா போன்றவையே முக்கியப் போக்குவரத்து சாதனங்களாக இருந்தன. வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதை பெருமையாக நினைத்தார்கள். ஆனால், லைஃப்ஸ்டைல் மாற்றம் காரணமாக சைக்கிள் பயணத்தை மக்கள் முழுமையாகக் குறைத்துவிட்டார்கள். சைக்கிள் இருந்த இடத்தை மோட்டார் சைக்கிள்களும் ரிக்ஷாவுக்குப் பதிலாக ஆட்டோக்களும் பெருகிவிட்டன.
சுற்றுப்புறச் சூழல், தனி மனிதப் பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிதிவண்டி பயணமே உகந்தது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி சென்னையை மீண்டும் சைக்கிள் நகரமாக மாற்றுவதற்கு மேயர் சைதை துரைசாமி கனவு கண்டார். மக்கள் சைக்கிள் ஓட்டத் தொடங்கினால் சென்னையின் சுற்றுச்சூழல் மேம்படுவது மட்டுமின்றி, வாகன நெரிசல்கள் குறைந்துவிடும், பொதுமக்கள் ஆரோக்கியம் மேம்படும் என்று நினைத்தார்.
தினமும் சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சியாகவும் அமையும் என்பதால் ரத்தவோட்டத்தை சீராக்கி இதயத்தை வலிமையாக்கும். அதோடு மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும். உடல் எடை குறையும். சைக்கிள் ஓட்டுவதால் வியர்வை வெளியாகும் என்பதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும் என்ற நன்மைகளை எல்லாம் மருத்துவர்கள் மூலம் அறிந்துகொண்டார்.
கால மாற்றத்தையும் விஞ்ஞான புரட்சியையும் தடுத்து நிறுத்த முடியாது என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்றாகவே தெரியும். மக்கள் இப்போது டூவீலர் ஓட்டிப் பழகிவிட்டார்கள் என்றாலும், சைக்கிளின் நன்மைகளை எடுத்துச்சொல்லி புரிய வைக்க வேண்டியது ஒரு மேயரின் கடமை என்றே உணர்ந்தார். மிகப்பெரிய மாற்றம் வரவில்லை என்றாலும் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது நன்மை பயக்கும் என்றே நினைத்தார்.
சைக்கிள் பயணத்தை வலியுறுத்துவதற்குத் திட்டமிட்ட நேரத்தில் சைக்கிள் வாங்குவது மட்டுமின்றி, அதனை பராமரிப்பது, பாதுகாப்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் இருப்பதையும் மேயர் சைதை துரைசாமி அறிந்திருந்தார். ஆகவே, அதற்கு தீர்வு தரும் வகையில் சைக்கிள் அறிமுகம் செய்ய விரும்பினார்.
- நாளை பார்க்கலாம்.