திறமையை புரிந்துகொண்டால் வெற்றிக்கு நிச்சயம்
திறமை பிறப்பால் வருகிறது. அந்த திறமையை பட்டை தீட்டிக்கொள்பவர்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடுகிறார்கள். போட்டிகளில் தன்னுடைய திறமையைப் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு குட்டி கதை.
முயல் ஆமை கதை எல்லோருக்கும் தெரிந்தது. இது கொஞ்சம் வேறு ஸ்டைல்.
எப்போதுமே ஆமையை பார்த்தால் முயலுக்கு கேலியும் கிண்டலுமாக இருக்கும். ஆடி அசைந்து ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நகர்வதை பார்த்து சிரிப்பதுதான் முயலுக்கு பொழுதுபோக்கு. தன்னைப் பார்த்து முயல் சிரிப்பதை பார்த்து ஆமை எப்போதும் சங்கடப்பட்டதில்லை. அது தானுண்டு தன்னுடைய பயணம் உண்டு என்று நகர்ந்துகொண்டே இருக்கும்.
எத்தனை சிரித்தாலும் கண்டுகொள்ளாமல் நகரும் ஆமையை அவமானப்படுத்த ஆசைப்பட்டது முயல். அதனால் அதனிடம் போய் என்னுடன் போட்டிக்கு வருகிறாயா என்று கேட்டது. ஆமை சிரித்துக்கொண்டே நகர்ந்தது. அப்படியென்றால் நீ என்னிடம் தோற்றுவிட்டாய் என்று எழுதிக்கொடுத்துவிட்டு இந்த காட்டைவிட்டு வெளியேறு என்று சொன்னது.
அதற்கு ஆமை, ‘’போட்டியில் கலந்துகொள்ளாமல் நான் தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீ ஆசைப்பட்ட படி உன்னுடன் போட்டிக்கு வருகிறேன். ஆனால் போட்டி என்னவென்று நான் சொல்கிறேன். இந்த குளத்தில் யார் வேகமாக நீச்சலடித்து மறுபக்கம் போகிறார்களோ, அவர்களுக்கே வெற்றி’’ என்றது.
முயலுக்கும் நீச்சல் தெரியும். தன்னால் நீரிலும் வேகமாக நீந்தமுடியும் என்று முயல் நினைத்து பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டது. இந்த போட்டியை யானை தொடங்கிவைத்தது.
தண்ணீரில் விழுந்ததும் முயல் கஷ்டப்பட்டு நீந்தத் தொடங்கியது. தண்ணீருக்குள் விழுந்த ஆமையைக் காணவே இல்லை. தரையில் போலவே தண்ணீரிலும் ஆமை மெதுவாகவே வரும் என்று முயல் நீந்திக்கொண்டு சென்றது. ஆனால், முயல் பாதித் தூரம் போகும் முன்னரே அந்த பக்கம் ஆமை கரையை அடைந்துவிட்டது. இதை பார்த்து காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் கூச்சல் போட்டன.
அவமானப்பட்டு நின்றது முயல். நான் உன்னிடம் தோற்றுவிட்டதை ஒப்புக்கொள்கிறேன், நான் என்ன செய்யவேண்டும், இந்த காட்டைவிட்டு போகவேண்டுமா என்று ஆமையிடம் கேட்டது.
இனியாவது உன் திறமை மீது மட்டும் நம்பிக்கை வைக்காதே, அனைத்து மிருகங்களையும் மதிக்க கற்றுக்கொள் என்று சொல்லிவிட்டு கிளம்பியது ஆமை.
இந்த கதை சொல்லவரும் கருத்து எளிதாகவே அனைவருக்கும் புரியும். ஆம், தன்னுடைய திறமை என்னவென்று அறிந்துகொண்டு அதில் கவனம் செலுத்தினால் வெல்ல முடியும் என்பதுதான்…’’
இதுதான் வெற்றி ரகசியம்.












