கிரிகெட் பிதாமகன்
சச்சின் டெண்டுல்கர் – இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் நிலைத்திருக்கும். இவரது ஒருநாள் போட்டிகளினது சாதனைகளை இன்னொருவர் தாண்டுவாரா என்பதற்கான பதில் மிகமிக சாத்தியக்குறைவு என்பதுதான். சச்சினை பிடிக்காதவர் இருக்கலாம், சச்சினை விமர்சிக்கலாம், ஆனால் சச்சினை எவராலும் புறக்கணித்து கிரிக்கட்டை நேசிக்க முடியாது! இந்தியாவில் கிரிக்கட் ஒரு மதம், சச்சின் அதன் கடவுள் என்பார்கள்; உண்மைதான், ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் சச்சின் நிச்சயமாக பிதாமகன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
சச்சின் ரசிகர்கள் யாரும் 1993 ஆம் ஆண்டு ‘ஹீரோ கப்’ அரையிறுதிப் போட்டியை இன்னமும் மறந்திருக்க முடியாது. தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இறுதி ஓவரில் தென்னாபிரிக்காவிற்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அனுபவம் மிக்க வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் ஆடிக்கொண்டு இருந்தனர் என்பதால், நிச்சயம் தோல்விதான், மூட்டையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குப் போகவேண்டியதுதான் என்பது அப்போதே இந்திய வீரர்கள் முகத்தில் தென்பட்டது.
கையில் நிறைய விக்கெட்டும், குறைந்த ரன்களும் மட்டுமே தேவை என்ற நிலையில், கடைசி ஓவர் வீசுவது என்பது பவுலர்களுக்கு தரப்படும் தண்டனை. யார் அந்த தண்டனையை ஏற்கப்போவது என்று கபில்தேவ், ஸ்ரீநாத், பிரபாகர் போன்றோர் தடுமாறிக்கொண்டு இருக்க, பந்தை தானே பிடுங்கிக்கொண்டு, பந்து வீசினார் சச்சின். ஆம், அந்த ஓவரில் மொத்தம் மூன்றே ரன்கள் கொடுத்து இந்தியாவை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்றார் சச்சின். அந்த நம்பிக்கைதான் சச்சின்.
24 ஆண்டுகள் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடி ஓய்வு பெற்றாலும், இன்னமும் அதே காதலோடும், ஈர்ப்போடும் கிரிக்கெட் விளையாடி வருகிறார் சச்சின். காரணம், அவரது இதயமும் முழுவதும் கிரிக்கெட்டே ஊறியிருக்கிறது. ஏப்ரல் 24, பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் அவரைப் பற்றிய சில குறிப்புகள்…
சச்சின், மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் 1973ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை ரமேஷ் டெண்டுல்கர், மராத்திய மொழியில் நாவல்கள் பல எழுதியுள்ளார். பிரபல இசை அமைப்பாளர் சச்சின் தேவ் வர்மன் மீதான ஈர்ப்பின் காரணமாக, தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் எனப் பெயரிட்டார்.
சச்சின், பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்து சாதனை படைத்து, உலகையே வியக்க வைத்தனர். ஆரம்பத்தில், வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்றுதான் சச்சின் விரும்பினார். ஆனால் போதிய உயரம் இல்லாததால், ஆஸ்திரேலிய பவுலர் டெனிஸ் லில்லி, சச்சினை பேட்டிங்கில் கவனம் செலுத்தும்படி ஆலோசனை வழங்கினார்.
மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் முதன்முதலாக 15-வது வயதில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி, 16-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்.
சச்சினின் சிறுவயது பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேகர், ஸ்டெம்பின் மீது ஒரு ரூபாய் நாணயத்தைவைத்து, சச்சினை அவுட்டாக்கும் பவுலர்களுக்கு அது பரிசு என்பார். பவுலர்கள் தோல்வி அடைய, சச்சின் அந்த நாணயங்களை பரிசாகப் பெற்றார். தன்னுடைய ஆசிரியர் குறித்து சச்சின், ‘ஆசிரியர்கள் படிப்பு மட்டுமில்லாமல், மதிப்பையும் கற்றுகொடுக்கிறார்கள். அச்ரேகர் களத்திலும், வாழ்விலும் எப்படி நேராக ஆட வேண்டும் என கற்றுத் தந்தார்’ என்றார். சச்சின் 14 வயதில் இருந்தபோது, கவாஸ்கர் தனது பேடுகளை’அவருக்குப் பரிசாக வழங்கினார். தவிர,ரஞ்சிக் கோப்பையில் முதன்முதலாக களமிறங்கியபோது, திலீப் வெங்சர்க்கார் தனது பேட்டை சச்சினுக்கு பரிசளித்தார்.
16 வயதில் சின்னப் பொடியனாக பாகிஸ்தான் மைதானத்துக்குள் நுழைந்தபோது, முதல் போட்டியில் 15 ரன்கள் அடித்து அவுட்டானார். அப்போது அவர், ‘நான் என்னவெல்லாம் திட்டங்களோடு மைதானத்துக்குள் நுழைந்தேனோ, அது எதுவுமே நிறைவேறவில்லை என விரக்தியடைந்தேன். சர்வதேச கிரிக்கெட் விளையாட நான் தகுதியானவனல்ல என்ற எண்ணம் அப்போது எழுந்தது. மறுபக்கம் அடுத்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன் என்று எண்ணமும் தோன்றியது என்றார், சச்சின்.
தன்னைவிட 5 வயது மூத்த அஞ்சலியை கடந்த 1995 ம் ஆண்டு காதலித்து மணந்தார். காதல் குறித்து அப்போது மனம் திறந்த சச்சின், ‘ஆக்ரோஷமான ஒரு வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வதைவிட, காதலை சொல்வதுதான் எனக்கு பெரிய கஷ்டம்’ என்றார். இவர்களுக்கு, சாரா என்ற மகளும், அர்ஜூன் என்ற மகனும் உள்ளனர்.
சச்சினை காதலித்தது குறித்து அவரது மனைவி அஞ்சலி, ‘சச்சினிடம் பேச வேண்டும் என்பதற்காக பயத்தை மறைத்துக்கொண்டு செல்வேன். கடிதம் எழுதுவதுதான் அப்போது பெஸ்ட் வழியாக இருந்தது’ என்கிறார்.
ஒரு முறை பி.பி.சி., தொலைக்காட்சியில் பேட்டி அளித்த சச்சினிடம், ‘உங்கள் கனவுப் பெண் யார்’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சச்சின், ’எனது மனைவி அஞ்சலிதான்’ என்று பதிலளித்தார். அவருடைய அம்மா, அத்தை, மனைவி அஞ்சலி, மனைவியின் தாயார், அவருடைய மகள் சாரா என ஐந்து பேரே அவருடைய வாழ்வின் முக்கியமான 5 பெண்கள் என்று டெண்டுல்கர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் வலதுகை பழக்கம்கொண்டவர் சச்சின். ஆனால் எழுதுவதும், ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் வழங்குவதும் இடது கையில்தான்.
டென்னிஸ் எல்போ பிரச்னையால் சச்சின் சிக்கித்தவித்தபோது, `எண்டுல்கர்’ எனத் தலைப்பிட்டு ஆங்கில நாளிதழ் ஒன்று முதல் பக்க செய்தி வெளியிட்டது. ஒட்டுமொத்த மீடியாவும் அவர் ஓய்வுபெறலாம் என கட்டுரைகள் வெளியிட்டன.
அப்போது அவர், `கடவுளே என்னை கிரிக்கெட் விளையாட விடு. இல்லையென்றால் கொன்றுவிடு. கிரிக்கெட் விளையாடாமல் என்னால் ஒரு நாள், ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது எனக் கதறி அழுதேன். கிரிக்கெட்டைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது’ என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
1999ஆம் ஆண்டு உலககோப்பை தொடரின்போது, சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மரணமடைந்தார். தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பின், மீண்டும் இங்கிலாந்து திரும்பினார் சச்சின். கென்யாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அதனை தந்தைக்கு சமர்ப்பித்தார்.
24 ஆண்டுகளாக விளையாடியவர், அதுவரை கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்தார். டெஸ்ட் போட்டியில் 13 முறை, ஒருநாள் போட்டியில் 60 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 முறை டெஸ்ட் போட்டிகளிலும் 14 முறை ஒருநாள் போட்டிகளிலும் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சச்சின் சிறந்த பேட்ஸ்மென் மட்டுமல்ல, சிறந்த பந்துவீச்சாளரும் கூட. சுழல் பந்து வீச்சை மேற்கொண்ட சச்சின் டெண்டுல்கர், தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 200 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் 44 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அவற்றில் மிகச் சிறந்த பவுலிங் சாதனையையும் படைத்துள்ளார்.
சச்சின் சதமடிக்கும் போட்டிகள் தோல்வியில் முடிவடையும் என்பதும், சச்சின் போட்டிகளை இறுதிவரை கொண்டுசென்று முடிப்பதில்லை என்பதும் சச்சின் மீது சொல்லப்படுகின்ற முக்கிய குற்றச்சாட்டுகள். சச்சின் சதமடித்த 49 போட்டிகளில் 33 போட்டிகள் இந்தியாவால் வெற்றி கொள்ளப்பட்டவை; இந்த 33 என்னும் எண்ணிக்கையில் இதுவரை வேறெந்த வீரரும் மொத்தமாகவேனும் சதங்களை எட்டவேயில்லை. வெற்றிபெற்ற போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலிலும் சச்சின்தான் முதலிடம்; 56.63 என்னும் சராசரியில் 11157 ஓட்டங்களை வெற்றி ஓட்டங்களாக குவித்த சச்சின் 62 தடவைகள் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
சதமடித்த எந்தப்போட்டியிலும் சச்சின் தேவைக்கு குறைவான ஓட்ட வேகத்தில் சுயநலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை; தேவைகேற்ப ஆக்ரோஷமான் ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் சதமடிக்கும் போட்டிகளில் பந்துவீச்சாளர்களும், சக துடுப்பாட்ட வீரர்களும் சொதப்புமிடத்தில் சச்சின் எப்படி அந்த தோல்விகளுக்கு பொறுப்பாக முடியும்? மற்றும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது பணியை சரியாக செய்யும் சச்சினை 50 ஓவர்களின் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறுதான். ஆனாலும் சச்சின் மீதான நம்பிக்கை அப்படி.
சச்சின் ஆட்டத்தில் காணப்படும் ஒழுங்கு, துல்லியம், நேர்த்தி, தனித்துவம் வாய்ந்த பாணி இவற்றால் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை வசப்படுத்தியவர். இவரது பெயரில் காமிக்ஸ்கள்கூட வெளிவந்தன.
மாநிலங்களவை நியமன உறுப்பினராக 2012-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கவுரவ கேப்டன் என ஏராளமான விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். 2014-ல் ‘பாரத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் இவரது ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை நூல் வெளிவந்தது.
சச்சின் ஆட்டம் குறித்து மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன், ‘சச்சின் ஆட்டத்தை நேரில் பார்த்ததில்லை. பலமுறை, டிவியில் பார்த்துள்ளேன். அவர் என்னைப்போலவே விளையாடுகிறார். தற்போது நான் விளையாடவில்லை என்றாலும் எனது ஆட்டத்தை சச்சினிடம் பார்க்கிறேன்’ என்றார்.
‘நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். வாழ்க்கையில் பயணத்தை எப்படி ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமில்லை. பயணத்தை எப்படி பூர்த்தி செய்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது’ என்பதே சச்சினின் தன்னம்பிக்கை வரிகள்.