என்ன செய்தார் சைதை துரைசாமி – 161
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களிடம் மேயர் சைதை துரைசாமி பேசுகையில், ‘’தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று உங்களாலும் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைக்க முடியும். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவதற்கு சென்னை மாநகராட்சி சார்பாக மேயராக நானும், அனைத்து ஆசிரியர்களும் உங்களுக்குத் துணை நிற்கிறார்கள். எனவே, அதிக ஊக்கத்துடன் படியுங்கள்’’ என்று நம்பிக்கை கொடுப்பது வழக்கம்.
சைதை துரைசாமி வாக்கு பலிக்கும் என்பதை சொல்வதைப் போன்று 2013-14 கல்வியாண்டில் திருவான்மியூரைச் சேர்ந்த சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவி செல்வஜோதி புவியியல் பாடத்தில் 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் மாணவி என்ற சாதனையைப் படைத்தார். தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட சாதனைகள் நிகழ்த்த முடியும் என்று எல்லோரும் நம்பிக்கொண்டு இருந்த நேரத்தில், சரியான வாய்ப்பும் வசதியும் கொடுக்கப்பட்டால் மாநகராட்சி மாணவர்களும் மாபெரும் சாதனை படைக்க முடியும் என்ற சைதை துரைசாமியின் நம்பிக்கை நிறைவேறியது.
அதேபோன்று மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்றால் தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே முடியும் என்று மக்களிடம் நிலவிய நம்பிக்கையை உடைக்கும் வகையிலும் மேயர் சைதை துரைசாமி காலத்தில் ஒரு சாதனை நடந்தேறியது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவியான அனுசுயா 200க்கு 199.25 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்து மருத்துவ மாணவியானார்.
கல்வி சீர்திருத்தத்திற்காக மேயர் சைதை துரைசாமி எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிகச்சிறந்த பலன் அளிப்பதைக் கண்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
- நாளை பார்க்கலாம்.