என்ன செய்தார் சைதை துரைசாமி – 304
பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் வளாகம் மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் மேயர் சைதை துரைசாமி தீவிரமாக செயலாற்றினார். ஒரு மேயராக இதையெல்லாம் அவர் நேரில் நின்று செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுத்தார். முதல் கட்டமாக பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை வளாகத்தில் லாரிகள் உள்ளே வரை சென்று திரும்பும் வகையில் நல்ல ரோடு வசதி செய்து தரப்பட்டது. இதன் காரணத்தால், வாசலில் குப்பையைக் கொட்டிவிட்டுச் செல்லும் அவலம் நின்று போனது.
இந்த நேரத்தில் இன்னொரு பிரச்னை மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. அதாவது, குப்பைகளுடன் கட்டிடக் கழிவுகளையும் சேர்த்து ஏற்றிக்கொண்டு வந்து கொட்டிவிட்டுச் செல்லும் அவலம் நடந்தது. முன்பு, குப்பை அள்ளும் தனியார் நிறுவனங்கள் கட்டிடக் கழிவுகளை அதிக அளவில் குப்பை லாரியில் ஏற்றி வந்து கணக்கு காட்டி வந்தனர். இது தொடரக்கூடாது என்பதற்காக புதிய தொழில்நுட்பங்களை எல்லாம் குப்பை வளாகத்திற்குக் கொண்டுவந்தார். குப்பைகளையும் கட்டிடக் கழிவுகளையும் தனித்தனியே கொட்டப்பட வேண்டும் என்று வரையறை செய்தார்.
விஞ்ஞான முறையில் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக குப்பை வளாகத்தில் குப்பை எடை கணக்கிடும் எடை மேடை நிறுவினார். அதோடு, குப்பை வளாகங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் கட்டப்பட்டன. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் குப்பை வளாகம் ஆய்வு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்தார்.
குப்பை வளாகத்துக்கு கண்காணிப்புக் கேமரா தேவையா என்று கிண்டல் செய்தவர்களை எல்லாம் பிரமிக்கும் அளவுக்கு அதன் மூலம், முறைகேடுகள் தடுக்கப்பட்டன. அதனாலே, மேயர் சைதை துரைசாமியை ஹைடெக் மேயர் என்று அதிகாரிகள் பாராட்டினார்கள்.
- நாளை பார்க்கலாம்.