என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 133
பெருநகர சென்னை மாநகராட்சி மேயரான சைதை துரைசாமி ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் தினமும் பணியாற்றியதைக் கண்டு அதிகாரிகள் திக்குமுக்காடிப் போனார்கள். காலையில் அலுவலகத்திற்கு சீக்கிரம் வருபவராகவும், நேரம் கழித்து கிளம்புபவராகவும் மேயர் சைதை துரைசாமியே இருந்தார்.
தினமும் புகார் மனுக்கள் வாங்குவது மட்டுமின்றி, ‘நேற்று எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன, மற்ற மனுக்கள் நிலை என்ன?’ என்று முழு விளக்கம் கேட்டு பெறுவது சைதை துரைசாமியின் பழக்கம். ஆகவே, ஏனோதானோவென்று பதில் சொல்லி தப்பித்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொண்ட அலுவலர்கள் தங்கள் கடமையை சிறப்பாகச் செய்யத் தொடங்கினார்கள். அதனால் புகார் மனு மீதான நடவடிக்கை மிகச்சிறப்பாக இயங்கத் தொடங்கியது.
இந்த விஷயத்துடன் மேயர் சைதை துரைசாமி திருப்தி அடையவில்லை. ஏனென்றால், நேரில் வந்து புகார் மனு கொடுப்பவர்களுடைய பிரச்னையை மட்டும் தீர்ப்பது முக்கியமல்ல, நேரில் வந்து கோரிக்கை மனு தர முடியாத நபர்களின் பிரச்னைகளும் களையப்பட வேண்டும் என்று விரும்பினார். எனவே, மாநகராட்சி சார்பில் இயங்கிவந்த புகார் பிரிவு தொலைபேசி எண் 1913 மூலம் வரும் புகார்கள் மீதும் முழு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த நேரத்தில் ஒரு நபர்,, ‘1913 எண்ணுக்கு புகார் செய்தால் நீண்ட நேரம் யாரும் எடுப்பதே இல்லை. மீண்டும் மீண்டும் போன் செய்தாலும் அரிதாக எப்போதாவது ஒரு முறையே எடுக்கிறார்கள். ‘உங்கள் புகார் ஏற்கப்பட்டது’ என்று பதில் சொல்கிறார்களே தவிர, வேறு எந்த தீர்வும் கிடைப்பதில்லை. சம்பந்தப்பட்ட புகார் குறித்து அடுத்து எத்தனை நாட்கள் கழித்து புகார் செய்தாலும், அதே பதில் கிடைக்கிறதே தவிர, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை’ என்று புகார் சொன்னார்.
இதனை சரிபார்ப்பதற்காக மேயர் சைதை துரைசாமியே 1913 என்ற புகார் எண்ணுக்குப் போன் செய்தார். போன் எடுக்கப்படவே இல்லை. மீண்டும் மீண்டும் போன் செய்த பிறகும் அதே நிலையே நீடித்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியான மேயர் சைதை துரைசாமி அதிரடி நடவடிக்கைக்குத் தயாரானார்.
- நாளை பார்க்கலாம்