தொழிலாளர் கைதில் வில்லங்கமாகும் தீக்கதிர் சம்பளம்
ஆட்சியில் பங்கு என்பதை முன்வைத்து திருமாவளவன் கூடுதல் சீட்டுக்குப் போராடுவது போன்று சாம்சங் போராட்டத்தை கம்யூனிஸ்ட்கள் முன்னெடுப்பதாக தி.மு.க. நிர்வாகிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இணைந்து தி.மு.க.வுக்கு செக் வைப்பதை எதிர்கொள்ளஏ தொழிலாளர்கள் கைது நடந்திருக்கும் நிலையில் தீக்கதிர் நாளிதழில் தொழிலாளர்களுக்கு என்ன சம்பளம், என்ன உரிமைகள் என்று உடன்பிறப்புகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
திருமாவளவனின் குரலாக ஒலித்துவரும் ஆதவ் அர்ஜூனா, ‘’தங்கள் உரிமைகளைக் கேட்டு போராட்டம் நடத்திவரும் சாம்சங் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தொடர் நடவடிக்கை எடுத்துவருவது வேதனைக்குரியது. இன்று போராட்ட களத்தில் வைத்தே நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த தொழிலாளர்களின் நிலையை அறியவும், அவர்களின் போராட்ட குரலுக்கு ஆதரவு தெரிவிக்கவும் அவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் தலைவர் தங்கபாலு ,மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தோழர்.கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தோழர்.முத்தரசன்,சிஐடியு மாநில தலைவர் தோழர்.சவுந்தரராஜன், தோழர். முத்துகுமார், மமக-கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட தலைவர்களுடன் திருமாவளவன் அவர்களும், நானும் இணைந்து தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்’ என கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலபாரதி, ‘’ சாம்சங்தொழிலாளர்கள் அதிகபட்சமாக ஊதியம் பெறுகிறார்கள் என தொழில்துறை அமைச்சர் கூறுகிறார். ம்ற்ற நாடுகளில் சாம்சங் வழங்குகிற ஊதியம் இங்கே நம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?’’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
இதற்கு தி.மு.க.வினர், ‘’மற்ற பத்திரிகை, மீடியாவில் வழங்கப்படும் சம்பளம் தீக்கதிர் நாளிதழில் வழங்கப்படுகிறதா.? சாம்சங் போராட்ட விவகாரம் ஒரு நிறுவனம் மற்றும் 2000 தொழிலாளர்களின் பிரச்னை மட்டும் அல்ல. தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்னை. சாம்சங் தொழிலாளர்கள் நலனோடு சேர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு தொழிலாளர்களின் நலனையும் மனதில் வைத்து அரசு செயல்படுகிறது.
இந்த விவகாரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கும் செய்தி சொல்லும். தொழிலாளர்களின் நலனை அரசு எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காது. போராடிய தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளில் ஏற்படும் பாதிப்புகள் தமிழ்நாட்டின் தொழிலாளர்களைப் பாதிக்கும் என்ற கவனத்தோடு இந்தப் பிரச்னையை அரசு கையாள்கிறது. தொழிலாளர்களின் நலன் எல்லா வகையிலும் காக்கப்படும். 12 மணி நேர வேலை மசோதாவிற்கு தொழிலாளர்களிடம் எதிர்ப்பு வந்த போது தயக்கமின்றி திரும்பப் பெற்ற ஜனநாயக உணர்வு கழகத்திற்கு உண்டு. எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அரசியலை செய்யாதீர்கள்…’ என்று எதிர்க் குரல் கொடுக்கிறார்கள்.
அதேநேரம் இந்த விஷயம் குறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’போராட்டம் சுமுகமாக முடிவுக்கு வராவிட்டால் தமிழக தொழில்துறைக்கு ஆபத்து என்கிறார்கள். சிஐடியு சங்கத்தை சாம்சங் நிறுவனத்தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக பதிவு செய்ய வேண்டும் என CITU கோருகிறது. ஏற்கனவே தங்கள் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கென நலச்சங்கம் இருப்பதால் CITUவை பதிவு செய்ய முடியாது என சாம்சங் நிறுவனம் மறுக்கிறது. அரசியல் கட்சி சார்ந்த சங்கம் உள்ளே வந்தால் எல்லாவற்றிலும் பிரச்சனை செய்வார்கள் என சாம்சங் நிர்வாகம் பயப்படுகிறது. சாம்சங் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது CITUவை பதிவு செய்ய வேண்டும் என்பதைத் தவிர பிற அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டி CITU பதிவு விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டாம் என சாம்சங் நிறுவனம் கேட்டுக் கொண்டது.
இதற்கிடையே உத்தரப்பிரதேசமும், ஆந்திராவும் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்துக்கு வந்துவிட அழைப்பு விடத் தொடங்கியுள்ளன. குஜராத்தும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல். தொழிற்சங்க பிரச்சனையை முன் வைத்து 2000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் சாம்சங் போன்ற பன்னாட்டு நிறுவனம் இடம் மாறினால் பிற நிறுவனங்களும் அதையே பின்பற்ற வாய்ப்பு உண்டு என்றும், மற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே தயங்குவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு கவலைப்படுகிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு மோசமாக பாதிக்கப்படும். அரசு நினைப்பதும் நியாயம்தான். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டுமானால் தொழிற்சங்க பிரச்சனைகள் வரக்கூடாது. சாம்சங் நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்து இடம் மாறும் மோசமான முடிவை எடுத்துவிடக் கூடாது. கோரிக்கைகள் அனைத்தும் நிறைவெற்றியதால் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடியும் வரை இரு தரப்பும் அமைதி காப்பதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நல்லது…’’ என்கிறார்கள்.
நல்லதே நடக்கட்டும்.