• Home
  • யாக்கை
  • மஞ்சள் என்றால் வெப்பம், ஊதா என்றால் குளிர்ச்சி..!

மஞ்சள் என்றால் வெப்பம், ஊதா என்றால் குளிர்ச்சி..!

Image

வண்ண மருத்துவம் அறிவோம்.


மருந்தில்லா மருத்துவ முறைகளில் வண்ண மருத்துவத்திற்கு முக்கிய இடம் உண்டு. பண்டைய காலத்திலிருந்தே எகிப்தியர்கள் வண்ண சிகிச்சையைப் பின்பற்றும் வழக்கத்தை மேற்கொண்டனர். எகிப்தியர்கள் ஒளியின் சக்தியை நம்பினர்.  குணப்படுத்துவதை ஊக்குவிக்க ஒளியின் வெவ்வேறு வண்ணங்களை பயன்படுத்தினர். இன்றைக்கும் ஒருசில கலாசாரங்களில் வண்ண சிகிச்சை தொடர்ந்து முக்கிய பங்கை வகித்து வருகிறது.

சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது. வண்ண சிகிச்சையிலும் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு என ஏழு நிறங்கள் உள்ளன.  இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக VIBGYOR என்று அழைப்பார்கள். இதில் ஊதா, கருநீலம், நீலம் ஆகிய மூன்று நிறங்களும் குளிர்ச்சித் தன்மை கொண்டவை. பச்சை நடுநிலையான தன்மை கொண்டது. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய மூன்று நிறங்களும் வெப்ப தன்மை கொண்டவை.


உடல் மற்றும் உணர்ச்சி சிக்கல்களைக் குணப்படுத்துவதற்காக, வண்ணங்களையும் அவற்றின் அதிர்வெண்களையும் பயன்படுத்தும் ஒரு மாற்றுச் சிகிச்சையே வண்ண சிகிச்சை ஆகும். இதன்மூலம் உடலியல் மற்றும் உளவியல் ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யப்படும். உதாரணமாக, நீங்கள் மனச்சோர்வடைந்தால், வண்ண சிகிச்சையானது உங்களை உற்சாகப்படுத்தவும் உங்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கவும் பயன்படும். இதனால் உங்கள் உளவியல் சமநிலையை மீண்டும் பெற முடியும்.
ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு விளைவைக் கொண்டிருக்கின்றன, எனவே வெவ்வேறு மனநிலைகள் மற்றும் மனநிலை பிரச்னைகளுக்கு வெவ்வேறு வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வண்ண சிகிச்சையை மேற்கொள்பவர்கள், தங்ளுக்குத் தேவையான வண்ணம்கொண்ட சுத்தமான கண்ணாடி குடுவையை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான வண்ணத்தில் கண்ணாடி குடுவை இல்லையென்றால், கடைகளில் கிடைக்கும் ஒளி ஊடுருவக்கூடிய வண்ண நெகிழிக் காகிதங்களை வாங்கி குடுவையின்மேல் சுற்றிக்கொண்டு பயன்படுத்தலாம். அதில் காய்ச்சி ஆறவைத்த சுத்தமான நீரை ஊற்றி மூடியிட்டு நன்றாக சூரியஒளி படும் இடத்தில் ஐந்து முதல் ஆறு மணிநேரம் வைக்கவும். பின்னர் இதை எடுத்து நோயின் தீவிரத்தைப் பொருத்து அரை அல்லது ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை 50 மிலி வீதம் நோய்க்கு தக்கவாறு பருகலாம்.
வண்ண நீரால் தீரும் நோய்கள் :


ஊதா:

இதன் சக்கரம் சகஸ்காரம். வண்ண சிகிச்சையில், அமைதி மற்றும் தளர்வு உணர்வுகளைத் தொடங்க ஊதா பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நரம்பு சார்ந்த நோய்கள் குணமாகும், நரம்பு மண்டலம் வலிமை பெறும். எலும்பு, எலும்பு மஜ்ஜை, வழுக்கை, கண் சார்ந்த நோய்கள், பிரசவகால வேதனைகள் குறையும்.


கருநீலம்:

இதன் சக்கரம் ஆக்ஞை.  வாய், கண், மூக்கு, தொண்டை சம்பந்தமான நோய்கள். சுவாச நோய்கள், அனைத்து வகையான தலைவலிகள், ஆஸ்துமா, காசநோய், மலச்சிக்கல், ஜீரண மண்டலக் கோளாறு, வலிப்பு மற்றும் மனநோய்கள் போன்றவை குணமாகும்.


நீலம்:

இதன் சக்கரம் விசுக்தி. நீல நிறம் உடலில் உள்ள விஷத்தை உரிஞ்சும் தன்மை கொண்டது. வெப்பம் சார்ந்த நோய்கள், மலேரியா, காய்ச்சல், மூட்டுவலி, தோல் நோய்கள், கொப்பளம், மூக்கில் நீர் வடிதல், மனஅழுத்தம், காயங்கள் மற்றும் அனைத்து விதமான வலிகள் தீரும்.


பச்சை :

இதன் சக்கரம் அனாகதம். வண்ண சிகிச்சையாளர்கள் பொதுவாகப் பச்சை நிறத்தைப் பாதுகாப்பான நிறமாகக் கருதி, அதிலிருந்து வண்ண சிகிச்சையை தொடங்குவார்கள். இது  நம்பிக்கையையும் வலிமையையும் அமைதியையும் தரும். இதயம் சம்பந்தமான கோளாறுகள், புற்றுநோய், குளிர்கால காய்ச்சல், தொற்றுநோய், ரத்த அழுத்தம், கர்ப்பப்பை நோய்கள், குடல் புண் போன்றவை குணமாகும். தாது விருத்தி, பார்வைத் திறன் அதிகரிக்கும்.


மஞ்சள்:

இதன் சக்கரம் மணிப்பூரகம். மஞ்சள் நிறம் சிகிச்சையில் ஆற்றலைக் கொண்டுவருவதற்கும் செயலை ஊக்குவிப்பதற்கும் பயன்படுத்துவர். நீரிழிவு நோய், சிறுநீரக நோய்கள், கல்லடைப்பு, மஞ்சள்காமாலை, அஜீரணம், தொழுநோய், முடக்குவாதம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.


ஆரஞ்சு:

இதன் சக்கரம் சுவாதிஸ்டானம். இது மனதுக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்பு உணர்வை அதிகரிக்கும். சிறுநீரக, பித்தப்பை கற்களை நீக்கும். சிறுநீரக மற்றும் குடல் வீக்கம், குடல் இரக்கத்தைச் சரிசெய்யும். மனதிற்கு உற்சாகம் தரும். பால் சுரப்பை அதிகரிக்கும்.


சிவப்பு:

இதன் சக்கரம் மூலாதாரம். இது பெரும்பாலும் உடல்ரீதியான சிகிச்சை முறைக்குப் பயன்படுத்தப்படுகிறது, ரத்த சோகை, ரத்த அழுத்தம், பக்கவாதம், காசநோய், உடல் பலகீனம், சோர்வு, உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் மற்றும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். உணர்ச்சிகளை தூண்டிவிடும்.


உடலில் வண்ண ஒளிகளைப் பாய்ச்சுதல்:
1. வண்ண கண்ணாடிகளைக் கொண்டு சூரிய ஒளி மூலம் உடலில் வண்ணங்களைப் பாய்ச்சுதல்,
2. வண்ண மின்விளக்குகளைப் பொருத்தி உடலில் வண்ணங்களைப் பாய்ச்சலாம்.
3. டார்ச் லைட்டில் வண்ணத்தாள்களை சுற்றி அதன்மூலம் உடலில் வண்ணங்களை பரவச் செய்யலாம் .
4. நோய் குறியுள்ள இடங்களில் வண்ணங்களை பரப்புவதன் மூலம் நோய்களை தீர்க்கலாம்.
5. ஹார்மோன் சுரப்பிகளைத் தூண்டி அதைச் சமநிலைப்படுத்தலாம்.
6. நமது உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களில் வண்ணங்களை பரப்புவதன் மூலம் சக்கரங்களுக்கு ஆற்றலைப் பெருக்கி நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
ஒளி சிகிச்சையைப் பயன்படுத்த கையாளப்படும் ஒரு வழி, வண்ணத்தை எளிமையாகக் காண்பது. இதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே இம்முறையை தேர்ந்த சிகிச்சையாளர்களிடம் பெற்றுக்கொள்வது சிறந்தது. உங்கள் உடல் நலனுக்கு ஏற்ற வகையில் வண்னங்களை பார்த்துக்கொண்டிருப்பதும் மனதை சாந்திப்படுத்தும்.

Leave a Comment