கரப்பான் பூச்சி பந்தயம்!

Image

விளையாட்டு அறிவோம்



ஆதிகாலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளில் தொடங்கிய பந்தயங்கள், இன்று கார், பைக் ஆகியவற்றில் வந்து நிற்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பூச்சியினங்களைக் கொண்டும் போட்டி நடத்தப்படுவதுதான் ஆச்சர்யமான விஷயம். ஆம், அழகுநிறைந்த ஆஸ்திரேலிய மண்ணில் ஆண்டுதோறும் கரப்பான் பூச்சிகளை வைத்து ஒரு விநோதப் பந்தயம் நடத்தப்படுகிறது.

வருடம்தோறும் ஜனவரி 26ம் தேதியன்று  ஆஸ்திரேலியாவின், ஸ்டோரி பிரிட்ஜ் என்ற ஹோட்டலில் ஆஸ்திரேலியா தினம் (1788, ஜனவரி 26, முதன்முதலாக ஐரோப்பியர் ஆஸ்திரேலிய மண்ணில் அதிகாரபூர்வமாகக் குடியேறிய தினம்) கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது கரப்பான் பூச்சி பந்தயம். ஆரம்ப காலத்தில் (1982ம் வருடம்) இரண்டு மதுப்பிரியர்களால் நடத்தப்பட்ட  கரப்பான் பூச்சி பந்தயம், இன்று பெரியளவில் ஒரு  ஜாலி கொண்டாட்டமாக வருடாவருடம் ஜனவரி 26 அன்று தவறாமல் நடைபெறுகிறது.

இதற்காக அந்த ஹோட்டல் வளாகம் காலையிலிருந்தே களைகட்ட ஆரம்பித்துவிடும். பார்வையாளர்களும், பங்கேற்பாளர்களும் குடியும், கும்மாளமுமாகக் குழுமிவிடுவார்கள். காலை 11 மணிக்கு ஆரம்பித்து, மாலைவரை 14 பந்தயங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். பந்தயங்களில் பங்கேற்கும் கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கை ஐநூறைக்கூடத் தாண்டுமாம். சுமார் நான்கு மீட்டர் பரப்பளவுதான் கரப்பான் பூச்சிகளுக்கான பந்தயக் களம். போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு கரப்பான் பூச்சியின் முதுகிலும் அடையாள எண் குறிப்பிடப்படும்.

போட்டி நடத்துவதைவிடவும், கரப்பான் பூச்சியின் முதுகில் அடையாள எண்ணைக் குறிப்பிடுவதுதான் பெரிய வேலை என்கிறது இப்போட்டியை நடத்தும் நிறுவனம். அடையாள எண்ணிடப்பட்ட கரப்பான் பூச்சிகளை, ஒரு பெரிய கண்ணாடிக் குவளையில் போட்டு எடுத்துவந்து, களத்தின் மையத்தில் கவிழ்ப்பார்கள். கரப்பான் பூச்சிகள் எந்த திசையிலும் ஓடலாம். ஆனால் பறக்கக் கூடாது. பறக்காமல் ஊர்ந்துவந்து,  வட்டத்தின் சுற்றெல்லையை எது முதலில் தொடுகிறதோ, அதுவே வெற்றியாளராக அறிவிக்கப்படும். இப்போட்டிக்கான நடுவர்கள், முதல் மூன்று கரப்பான் பூச்சிகளைப் பிடித்து போட்டியின் வெற்றியை உறுதிசெய்வார்கள்.


ஒரு கரப்பான் பூச்சி ஒருமுறை மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும். போட்டிகளில் பங்கேற்க, வீடுகளில் உள்ள கரப்பான் பூச்சிகளையும் கொண்டுவரலாம். போட்டி நடக்கும் வளாகத்தில் போட்டிக்கென வளர்க்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை விலைக்கும் வாங்கலாம். ஒரு கரப்பான் பூச்சியின் விலை, ஐந்து டாலர்கள். போட்டியில் கலந்துகொள்வதற்கும் கட்டணம் உண்டு.  இப்பந்தயம் மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி, சமூக நல மேம்பாட்டுக்காகச் செலவிடப்படுகிறது என்பதுதான் ஹைலைட்டான விஷயம்.
வெற்றிபெற்ற கரப்பான் பூச்சிக்கு, முதல் பரிசாக வெற்றிக்கோப்பையும் 200 டாலர் பணமும் வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசாக 25 டாலர்களும், மூன்றாம் பரிசாக 15 டாலர்களும் வழங்கப்படுகிறது. இதற்காக, கரப்பான் பூச்சிகளுக்கு விசித்திரமான பெயர்களும் சூட்டப்படுகின்றன. டெசர்ட் ஸ்ட்ரோம், மில்லினியம் பக், கேப்டன் காக்ரோச், நாட் எ பிராப்ளம், ட்ரெய்ன் லவர் உள்ளிட்ட பெயர்களைக் கொண்ட கரப்பான் பூச்சிகள், இதுவரையிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக்கோப்பைகளை வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொண்டாட்டத்தின்போது இன்னொரு அம்சமாக அழகிப்போட்டியும் நடைபெறுவதுண்டு. வெற்றிபெற்ற அழகிக்கு மிஸ் காக்கி என்ற பட்டம் சூட்டப்பட்டு பரிசளிக்கப்படும். ஒரு வருடத்துக்கு இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக இவர் செயல்படுவார். இப்படி, விறுவிறுப்பாய் நடைபெறும் பந்தயம் இறுதியில் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிடும் என்பதுதான் கொடுமையான விஷயம். ஆம், போட்டி முடிந்தபிறகு அந்த களத்தைச் சுற்றி பூச்சிமருந்து அடித்துவிடுவார்கள். இதன் விளைவு, களத்துக்குக் கொண்டுவரப்பட்ட கரப்பான் பூச்சிகள் மட்டுமின்றி, வெற்றிக் கோப்பையை வென்று தந்த கரப்பான் பூச்சியும் மரணத்தைத் தழுவிவிடும்.
வெற்றிபெற்ற பின் வீரர்களைக் கொல்வதும், வெற்றிக்காகப் போராடியவர்களையும் கொல்வது எந்த விதத்தில் நியாயமோ..?

Leave a Comment