மீண்டும் சிவில் சட்டம்… மோடி ரெடி

Image

மல்லுக்கட்டும் காங்கிரஸ்

சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மீண்டும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பேசியிருப்பது நாடு முழுக்க அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதுள்ள சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டம் என்று கூறி நாட்டுக்கு தேவை மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்றும் கூறியிருக்கிறார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, ‘இந்து தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தம் தேவையென்று டாக்டர் அம்பேத்கர் 1949 இல் கூறியபோது அதற்கு எதிராக 79 கண்டன பொதுக்கூட்டங்களை ஆர்.எஸ்.எஸ். நடத்தி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்து தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தங்களை எதிர்த்தவர்கள், தற்போது பொது சிவில் சட்டம் தேவை என்று இதுவரை பேசியவர்கள் தற்போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்று பேசுவது மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலாகும்.

இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். இன் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற பதுங்கு திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று பிரதமர் மோடி விரும்புகிறார். ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். இன் சித்தாந்தங்களான பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் உறுப்பு 370ஐ நீக்குவது ஆகியவற்றை பிரதமர் மோடி ஏற்கனவே நிறைவேற்றி விட்டார். இப்போது மூன்றாவது கோரிக்கையான பொது சிவில் சட்டம் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.

பிரதமர் மோடி பேசுகிற பொது சிவில் சட்டத்தை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மாநிலமாக பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிறது. இதில் மலைவாழ் பழங்குடியினர் சேர்க்கப்படவில்லை. இதன்மூலம் பாரம்பரியமான பழங்குடியின மக்களின் பழக்க வழக்கங்களை பாதுகாக்க வேண்டுமென்று பா.ஜ.க. கூறுவது அதன் இரட்டை வேடத்தை உறுதிப்படுத்துகிறது.

அதேபோல, மற்ற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டிருக்கிறது. இதை தேசிய அளவில் வலியுறுத்துகிற வகையில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறியது. ஆனால், அதை நிறைவேற்றுகிற வகையில் பா.ஜ.க.வுக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மையை கொடுக்காமல் பாடம் புகட்டினார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிற ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேச கட்சியும் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை.

மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி மக்கள் புகட்டிய பாடத்தின் மூலம் தன்னை திருத்திக் கொள்ள அவர் தயாராக இல்லை. குஜராத் முதலமைச்சராக இருந்து எத்தகைய நோக்கத்திற்காக செயல்பட்டாரோ, அதை தேசிய அளவில் நிறைவேற்ற வேண்டுமென்று அவர் முற்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Leave a Comment