காதலுக்கும் தேவை சாக்லேட்
குழந்தைகளுக்கு பொம்மையும், சாக்லேட்டும் எப்போதும் பிடித்தமான பொருட்களாகும். அதிலும் சாக்லேட் என்றால் சொல்லவே வேண்டாம். அதனால்தான் ஏழைக் குழந்தைகளைக் கவரும் வகையில் மிகவும் குறைந்தவிலையிலும், பணக்காரக் குழந்தைகளுக்காக மிக அதிக விலையிலும் சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சாக்லேட் என்பது ஒரு உணவுப்பொருளாக மட்டும் இல்லாமல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஓர் உலகளாவிய பொருளாகவும் உள்ளது.
ஆம், நம் வாழ்வில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் எது நடைபெற்றாலும் அதனை நமது உறவுகளிடமும் நண்பர்களிடமும் பகிர சாக்லேட் என்ற இனிப்பு பண்டத்தையே நாம் பயன்படுத்துகிறோம். மேலும் காதலர்கள் தங்கள் காதலியிடம் அன்பை வெளிப்படுத்த உதவும் ஒரு கருவியாகவும் சாக்லேட் இருந்துவருகிறது. இப்படி, குழந்தைகள் தவிர பெரியவர்களையும் கவர்ந்து இழுக்கும் சாக்லேட்டின் வரலாறு நீண்டகால தொடர்புடையது.
சாக்லேட் முதன்முதலில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கி.மு 450வது நூற்றாண்டுக்கு முந்தையது. சாக்லேட் என்ற வார்த்தை, கிளாசிக்கல் ‘நஹுவால்’என்ற வார்த்தையிலிருந்து வந்தது. அதுதான் சோகோலட். இது அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னரே பிரபலமடையத் தொடங்கியது. கோகோ விதைகள் ஞானத்தின் கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு என்று அமெரிக்காவில் வாழ்ந்த ஆஸ்டெக்குகள் நம்பினர், அது சீராக மிகவும் பிரபலமடைந்தது. மேலும், ஆஸ்டெக் சாம்ராஜ்ஜியத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது.
சாக்லேட் ஆரம்பத்தில் பான வடிவில் மட்டுமே உட்கொள்ளப்பட்டது. அது மிகவும் சுவையாகவும் கசப்பாகவும் இருந்தது. இதனை அடுத்து மசாலா மற்றும் சோளப் கூழ் கலந்த ‘சிலேட்’ என்ற பானம் அதில் இருந்து தயாரிக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஒரு பானமாக உருவாகிய சாக்லேட் பின்னர் திடவடிவம் பெற்றது. 17 டிகிரி செல்சியஸ் தொடங்கி 36 டிகிரி செல்சியஸ் வரை உள்ள ஒவ்வொரு வெப்பநிலையிலும் சாக்லேட்டுகள் உருகும் அதன் வெப்பநிலைக்கு ஏற்றவாறு உருகாமல் பாதுக்காக்கப்படுகின்றன. 20ம் நூற்றாண்டில் நன்றாக பிரபலமடைந்த சாக்லேட்கள், அமெரிக்கா ராணுவ வீரர்களுக்கு அத்தியாவசிய உணவாகக் கருதப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு அத்தியாவசியப் பொருளாக சாக்லேட் பரிணாம வளர்ச்சியடைந்தது.
இனிப்பூட்டப்படாத சாக்லேட், கரும் சாக்லேட், பால் சாக்லேட், மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்லேட், கசப்பு – இனிப்பு சாக்லேட், வெள்ளை சாக்லேட், கோகோ தூள் எனப் பல வகைகளில் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. சாக்லேட்டை அதிகம் உற்பத்தி செய்வதில் இன்னமும் அமெரிக்க நாடுகள்தான் முன்னிலை வகிக்கின்றன. கி.பி 1948-ல் இந்தியாவில் சாக்லேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிரிட்டன் கம்பெனியான கேட்பரி, ‘ கேட்பரி இந்தியா’ என்ற பெயரில் உள்ளே நுழைந்தது. இந்தியர்களிடையே சாக்லேட்டுக்கென ஒரு சந்தையை முதன்முதலில் உருவாக்கியது கேட்பரிதான். ஆரம்பத்தில் கேட்பரி சாக்லேட்கள் இறக்குமதி மட்டுமே செய்யப்பட்டன. கேட்பரி இந்தியா நிறுவனம், இப்போது மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு, இந்தியாவில் ஐந்து இடங்களில் தொழிற்சாலைகளை நடத்திவருகிறது.
சாக்லேட் நுகர்வு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2016ல் இந்தியாவில் சாக்லேட் மிட்டாய் சந்தை மதிப்பு ரூ.11,260 கோடியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் சாக்லேட் விற்பனை குறித்து, இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுப் பொருட்களில், சாக்லேட் சுமார் 50% இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் உணவுப் பொருள் ஆர்டர்களில் டாப் இடங்களில் இருப்பதில் 60% சாக்லேட் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெண்களின் பங்கு 25% அதிகம் ஆகும். 18-24 வயதுக்கு உட்பட்டவர்கள் சாக்லேட்களை அதிகம் ஆர்டர் செய்கிறார்கள். அதில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்டவை காணப்படுகின்றன என்கிறது அந்த ஆய்வு.
2018ம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டின் டேனியல் கோமஸ் என்பவர் மிக விலை உயர்ந்த சாக்லேட் ஒன்றைத் தயாரித்தார். இனிப்புப் பண்டம், குங்குமப்பூ, மணமூட்டும் காளான் ஆகியவற்றால் தங்க நிறத்திலான மேற்பூச்சுகளுடன்கூடிய அந்த சாக்லேட்டை கண்காட்சிக்கு வைத்தார். டைமண்ட் வடிவிலான இந்த சாக்லேட்டின் விலை, இந்திய மதிப்பில் 6 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் ஆகும். உலகிலேயே இந்த சாக்லேட்தான் விலை உயர்ந்தது என கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது. சாக்லேட் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும், பக்கவாதத்தை தடுக்க உதவுகிறது, இருதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன், வயிற்றில் பூச்சி உள்ளிட்ட சில தீமைகளும் உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தோஷத்தின் மறுமுகம் சாக்லேட்!