சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள்
கேள்வி : சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோ அப்லோடு செய்வதும் அதை பார்ப்பதும் குற்றமா?….இதற்கான தண்டனை என்ன? ஆபாச வீடியோக்களைத் தடுப்பது எப்படி?
- ஏ எஸ் ராஜேந்திரன். வெள்ளூர்

நிலா :
சைல்டு போர்னோகிராஃபி’ எனப்படும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றை செல்போனில் வைத்திருப்பது, ஆபாச உணர்வுகளைத் தூண்டும் விதமாக, பாலியல் ஈடுபாட்டை மிகவும் அதிகரிப்பதாக நடந்துகொள்வது, மனதைக் கெடுக்கும் விதமாக ஆபாச வீடியோ அல்லது புகைப்படப் பதிவுகளை விற்பது, வாடகைக்கு விடுவது, பொது இடங்களில் காட்சிப்படுத்துவது, பலருக்குப் பகிர்வது, லாபம் சம்பாதிப்பது, விளம்பரப்படுத்துவது, தயாரிப்பது உள்ளிட்ட அனைத்துமே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு292, 293, 294 படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67ஏ, 67பி மூலம் ஒருவர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும், பகிர்வதும் குற்றம். இதன் கீழ் தவறு செய்பவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும்.
2019ல் திருத்தப்பட்ட போக்ஸோ சட்டத்தின்படி, குழந்தைகளை வைத்து நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும், குழந்தைகளின் படத்தை எடிட் செய்தாலும், போலியாக குழந்தைகள் போல் உருவாக்கினாலும் `சைல்டு போர்னோகிராஃபி’ எனும் வகைப்பாட்டில் குற்றம் ஆகும். மேலும், குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த குற்றங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கு தேசியக் குற்றத்தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் சிறப்பாக பணிபுரிந்து வருகிறது.
கேள்வி : கீழ் கோர்ட் மேல் கோர்ட் இத்தகைய கோர்ட்டுகளின் பணி என்ன ?எந்த மாதிரியான. கோர்ட்டுகள் உள்ளன ?
- ஆர். மாடசாமி .சூலக்கரை மேடு
நிலா :
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றால் அனைத்து வகையான வழக்குகளையும் விசாரித்து தீர்ப்பு அளிக்க முடியாது என்பதற்காகவே மாநில அளவில் மெட்ரோபாலிடன் நீதிமன்றங்களும் மாவட்ட மற்றும் சேவை நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இவற்றின் கீழ் சிவில் கோர்ட், கிரிமினல் கோர்ட் என்றும் அவற்றின் கீழ் சிட்டி சிவில் கோர்ட், செசன்ஸ் கோர்ட், சிறிய வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், டிஸ்ட்ரிக்ட் கோர்ட், செசன்ஸ் கோர்ட், மாஜிஸ்டிரேட் கோர்ட், சிறிய வழக்குகளுக்கான நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. பொதுவாக சிறிய வழக்குகள் எல்லாம் கீழ் கோர்ட்டிலும் ஒரு கோடி ரூபாய்க்கு மேலான வழக்குகள் மேல் கோர்ட்டிலும் நடைபெறும் என்று எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் சாட்சிகள் விசாரணை இருக்காது என்றாலும் அரிதாக புதிய ஆதாரங்கள் சேர்க்கப்படும் நிலையில் விசாரணைகள் நடைபெறுவதுண்டு.
கேள்வி : எந்தெந்த காரணங்களால் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள் ?
- எம். ரேணுகாதேவி சாத்தூர்
நிலா :
ஆயிரம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது எனும் வகையில் நீதிமன்றங்கள் இயங்குகின்றன என்றாலும் அரிதாக நிரபராதிகள் தண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஐ விட்னஸ் எனப்படும் நேரடி சாட்சிகள் ஏதேனும் காரணங்களால் தவறாக அடையாளம் காட்டுவதால் நிரபராதிகள் தண்டிக்கப்படலாம். பணம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தாங்களே குற்றம் செய்ததை ஒப்புக்கொள்வதன் மூலம் நிரபராதிகள் தண்டிக்கப்படலாம். காவலர்கள் அல்லது அரசியல்வாதிகள் திட்டமிட்டு சாட்சியங்கள் உருவாக்கி அப்பாவிகளை சிக்க வைப்பதன் மூலம் நிரபராதிகளுக்குத் தண்டனை கிடைக்கலாம். குற்றப்பரம்பரையினர் என்று சொல்லப்படுவது போன்று முத்திரை குத்தப்பட்ட குற்றவாளிகள் சம்பந்தமில்லாத வழக்குகளில் தண்டிக்கப்படுவதுண்டு. சட்டம் அறியாமல் அல்லது குற்றம் என்பது தெரியாமல் சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளாலும் நிரபராதிகள் பாதிக்கப்படலாம். நீதிமன்றங்களில் ஒப்படைக்கப்படும் சாட்சியங்கள் அடிப்படையிலே தீர்ப்புகள் கொடுக்கப்படுவதால், கொடுக்கப்படும் அனைத்து தீர்ப்புகளும் சரியானவை என்று அர்த்தம் இல்லை.
எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling
mnilaw15@gmail.com.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
சென்னை & மதுரை