என்ன செய்தார் சைதை துரைசாமி – 293
மேயர் சைதை துரைசாமி வீட்டில் இருந்து மாநகராட்சிக்கு வரும் வழிகளில் எல்லாம் குப்பைத் தொட்டி எந்த நிலையில் இருக்கிறது, சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை எல்லாம் பார்வையிட்டுக்கொண்டே வருவார். வேறு எந்த வேலைக்கு வெளியே செல்வது என்றாலும், அவரது கண்கள் குப்பைத் தொட்டிகளை கண்காணித்துக்கொண்டே இருக்கும்.
எல்லா நேரத்திலும் குப்பைத் தொட்டிக்கும், குப்பைக்கும் புதிய தீர்வுகள் காணவேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே இருப்பார். வெளிநாட்டு நண்பர்களிடம் பேசுகையில் அங்கிருக்கும் குப்பை மேலாண்மை பற்றி கேட்டு அறிவார். அதன்படி, அவர் மேற்கொண்ட ஆலோசனை அடிப்படையில் ஒரு புதிய முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வந்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் குப்பைத் தொட்டி பயன்படுத்துவதற்க்குப் பதிலாக தார்ப்பாலின் பை மூலம் குப்பை சேகரம் செய்வது பயனுள்ளதாக அமையுமா என்ற யோசனையை மேயர் சைதை துரைசாமி முன்வைத்தார். இதன் மூலம் குப்பைத் தொட்டில் இல்லாத சென்னைக்கு கனவு கண்டார்.
தார்ப்பாலின் பைகளில் குப்பையை சேகரிக்கும்போது, அதனை கையாள்வது மிகவும் எளிது. குப்பைத்தொட்டி எனும் அமைப்பு தேவைப்படாது. வீடுகளுக்கு வந்து மாநகர பணியாளர்கள் குப்பையை சேகரம் செய்வார்கள். சேகரம் செய்யப்படும் குப்பையை தார்ப்பாலின் பைக்குள் போடுவார்கள். தார்ப்பாலின் பை நிறைந்ததும், அதனை இறுக்கமாகக் கட்டி ஓரத்தில் வைத்துவிடுவார்கள்.
அந்த தார்ப்பாலின் பைகளை குப்பை லாரி எடுத்துக்கொண்டு, வேறு தார்ப்பாலின் பைகளை அந்த இடத்தில் விட்டுச்செல்லும். தார்ப்பாலின் பைக்குள் குப்பை போடுவதால், துர்நாற்றம் வெளியேற வாய்ப்பு இல்லை, குப்பை சிதறவும் செய்யாது. மேலும் இதனை கையாளும் செலவும் மிகவும் குறைவு என்பதால் கூடுதலாக நிறைய தார்ப்பாலின் பைகளைப் பயன்படுத்த முடியும் என்று திட்டமிட்டார். அதேநேரம், நமது ஊரில் குப்பைகளுடன் சேர்ந்து திரவக் கழிவுகள், உடைந்த பாட்டில் போன்றவை போடப்படுவதும் தெரியவந்தது. ஆகவே, இதனை நடைமுறைப்படுத்துவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று தள்ளி வைத்தார்.
- நாளை பார்க்கலாம்.