என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 109
சென்னை மேயராக சைதை துரைசாமிக்கு 2011ல் கிடைத்த தேர்தல் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் துணையின்றி அ.தி.மு.க. தனித்து நின்று வெற்றிபெற்றது.
முந்தைய 2011 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியாக நின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி, ஃபார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியவை இணைந்து போட்டியிட்டு 203 தொகுதிகளில் வென்று மாபெரும் சாதனை படைத்தது.
ஆனால், 2011 அக்டோபரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. ஆகவே, முதன்முறையாக அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு தங்கள் பலத்தைக் காட்டுவதற்குப் போட்டியிட்டன. மக்களே நேரடியாக மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை தேர்வு செய்யும் நடைமுறையை முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கொண்டுவந்திருந்தார்.
ஆகவே, இந்த தேர்தலில் குறிப்பாக சென்னை மேயர் முடிவு தமிழகம் முழுக்க ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையில் அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமியும், தி.மு.க. சார்பில் மா.சுப்பிரமணியனும் போட்டியிட்டனர். இங்கு தி.மு.க.வே ஜெயிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிப்பு கூறிவந்தார்கள்.
ஆனால், மக்களின் பேராதரவுடன் சைதை துரைசாமி 5,19,747 வாக்குகள் அதிகம் பெற்று சாதனை வெற்றி படைத்தார். இந்த தேர்தலில் 31 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தோல்வி அடைந்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தோல்வி அடைந்த 31 வார்டுகளிலும் கூட சைதை துரைசாமிக்கு மா.சுப்பிரமணியனை விட கூடுதல் வாக்குகள் கிடைத்திருந்தன. சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து 1.69 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார்கள். ஆனால் 5.19 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்திருந்தார் சைதை துரைசாமி.

தி.மு.க.வின் கோட்டை என்று கூறப்பட்ட சென்னையின் அத்தனை வார்டுகளிலும் அத்தனை சட்டமன்றத் தொகுதிகளிலும், அத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகள் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது. சைதை துரைசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட 32 வேட்பாளர்களில், தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு மட்டுமே டெபாசிட் தொகை கிடைத்தது. மற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகளும் டெபாசிட் தொகையைப் பறிகொடுத்தார்கள் என்பதை இந்த பட்டியலில் அறிந்துகொள்ளலாம். சைதை துரைசாமியை எதிர்த்து நின்ற 24 சுயேட்சை வேட்பாளர்களும் 98,439 வாக்குகள் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் செல்வாக்குடன் சைதை துரைசாமிக்கு மக்களிடம் இருந்த தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவே இத்தனை பெரிய வெற்றி கிடைத்தது. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைத் தேடிப் போய், அவர்களின் தேவையைக் கேட்டறிந்து சேவை செய்யும் சைதை துரைசாமியின் உழைப்புக்கும், நேர்மைக்கும் தூய்மைக்கும் மக்கள் கொடுத்த அங்கீகாரமே இந்த வெற்றி. பொதுமக்களும், மற்ற கட்சியினரும் கூட ஒரு தகுதியான வேட்பாளருக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நிரூபித்துக் காட்டிய தேர்தல் இது. இந்த வெற்றியின் மூலம் சென்னையை முதன்முதலாக அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிக் காட்டினார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.