நிர்வாக சாம்ராட்
டிசிஎஸ் நிறுவனம் என்பது மிகப்பெரும் கனவு. அங்கே நிர்வாகப் பொறுப்பு வருவது அத்தனை சுலபமில்லை. அதேநேரம், திட்டமிட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று ஒரு மாபெரும் பொறுப்புக்கு வந்த நபர் இருக்கிறார். அவர் டிசிஎஸ் நிறுவனத்தில் ஒரு சாதாரணமான புரோகிராமராக வேலைக்கு சேர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உயர்ந்த சந்திரசேகரன்.
நாமக்கல் அருகே இருக்கும் மோகனூரில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சந்திரசேகர். இவர் ஆரம்ப கல்வியை அரசு பள்ளியில் தமிழ் வழியில்தான் கற்றார். அதன்பிறகு கோவையில் பி.எஸ்.சி. படிப்பையும் திருச்சியில் எம்.சி.ஏ. படிப்பும் முடித்தார்.
1987-ம் ஆண்டு ஒரு சாதாரண புரோகிராமர் வேலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தார் சந்திரசேகர். தன்னுடைய வேலையை சிறப்பாக செய்துவந்தார். நிறுவனத்தின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அதனால் அவருடன் வேலை பார்த்த நண்பர்களில் பெரும்பாலானவர்கள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு நல்ல சம்பளத்தில் சேர்ந்தார்கள். ஆனால் சந்திரசேகர் பணத்தை பெரிதாக எண்ணாமல் டிசிஎஸ் நிறுவனத்தில் தொடர்ந்து கடுமையாக பணி புரிந்தார். அவரது அர்ப்பணிப்பு, உழைப்பு, திட்டமிடல் போன்றவை அவரை முன்னேற்றியது. ஆம், எந்த பதவியையும் எதிர்பாராத சந்திரசேகருக்கு தலைமை செயல்பாட்டு அதிகாரி பதவி 2007ம் ஆண்டு கிடைத்தது. அதன்பிறகு தலைமை செயல் அதிகாரியாகவும் மாறினார் சந்திரசேகர். குறைந்த வயதில் டிசிஎஸ் நிறுவனத்தில் சிஇஓ பதவிக்கு வந்தது சந்திரசேகர் மட்டும்தான். இவரது தலைமையில் டிசிஎஸ் நிறுவனம் ஆழமாகவும் அகலமாகவும் வளர்ச்சி அடைந்தது மட்டுமின்றி மில்லியன் டாலர்களில் வருமானமும் கொட்டியது.
இவரது திட்டமிட்ட சீரிய உழைப்பு மற்றும் நிர்வாகத் திறமையால் டிசிஎஸ் நிறுவனத்தின் வருமானம் பல மடங்கு உயர்ந்தது. நிறுவனத்தின் நிகர லாபம் ஏழாயிரம் கோடியில் இருந்து 25 ஆயிரம் கோடியாக மாற்றினார் சந்திரசேகர். இந்தியாவின் மரியாதைக்குரிய டாடா சன்ஸ் நிறுவனத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருமானம் மட்டுமே 70 சதவிகிதத்திற்கும் அதிகம். நிர்வாகத்தில் இத்தனை திறமையாக செயலாற்றினாலும் தன்னை எங்கேயும் முன்னிலை படுத்தியதில்லை சந்திரசேகர். தன்னைவிட நிறுவனம் சிறப்பாக முன்னேற வேண்டும் என்றே நினைத்தார். அதனால்தான் டாடா குடும்பத்தை சேராத சந்திரசேகர் அந்த நிறுவனத்திற்கே தலைவராக பதவி ஏற்றுள்ளார். ஒரு புரோகிரமாக டிசிஎஸ் நிறுவனத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய சந்திரசேகர், தன்னுடைய 53 வயதுக்குள் அதே நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார் என்றால், அவரது உழைப்பும், திட்டமிடலும் எத்தனை சிறப்பாக இருந்திருக்க வேண்டும்?
சந்திரசேகர் அடைந்திருக்கும் பதவி சாதாரண ஒன்றல்ல. ஏனென்றால் இந்த பதவியை அடைவதற்கு பெப்சிகோ இந்திரா நூயி, வோடபோன் அரூன் சரீன், நோயல் டாடா போன்ற பிரபலங்கள் போட்டியிட்டார்கள். ஆனால் உழைப்பால் உயர்ந்து, டிசிஎஸ் நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்தும் சந்திரசேகர்தான் டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் தேர்வுக் குழுவுக்கு இருந்ததால், எளிதில் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார் சந்திரசேகர். இவருடைய வெற்றியால் ஒவ்வொரு தமிழனும் சந்தோஷப்பட முடியும் என்பதுதான் தனிச்சிறப்பு.
ஒரு கிராமத்தில் பிறந்து தமிழ் மொழி வழியாக படித்து சாதாரண வேலையில் சேர்ந்த ஒருவரால், அந்த நிறுவனத்தின் தலைவராக மாறமுடிகிறது என்றால் அதற்கு காரணம் அவரது திட்டமிட்ட உழைப்புதான். இந்த திட்டமிட்ட உழைப்பு சந்திரசேகருக்கு மட்டுமல்ல, உண்மையாக உழைக்கும் அத்தனை பேருக்கும் சீரிய உயர்வு தரும் என்பதுதான் உண்மை.
தன்னுடைய வெற்றிக்கும் நிறுவனத்தின் வெற்றிக்கும் காரணமாக சந்திரசேகர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்.
- மிகப்பெரிய நிறுவனம் என்றாலும் இன்னமும் புதிது புதிதாக கற்றுக்கொண்டு இருக்கிறோம்.
- மக்களை மட்டுமின்றி அவர்களது கலாச்சாரத்தையும் தெரிந்துகொண்டால்தான், அவர்களை வெற்றிகொள்ள முடியும்.
- நிறுவனத்தில் நிறைய சாதனைகள் புரிய வேண்டும் என்றால் நிறைய தலைவர்கள் இருக்கவேண்டும்.
- திறமையான தலைமையும் சரியான குழுவும் இணைந்துவிட்டால் நிச்சய வெற்றியை அடைந்துவிட முடியும்.
- திறமையாக பணியாற்றுபவர்கள் நிச்சயம் கவனிக்கப்படுவார்கள். உடனடியாக இல்லையென்றாலும் விரைவில் அங்கீகாரம் பெறுவார்கள்.