எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்தை தைரியமாக வெளிப்படையாக அறிவித்து வருகிறார்கள். இது போலி விவாகரத்தாக இருக்கலாம்.
நண்பர் ஒருவரது பரிந்துரையில் சுகந்தி சந்திப்பதற்கு வந்தார். விவாகரத்து தொடர்பான விஷயம் என்று தொலைபேசியில் தெரிவித்திருந்தார். ஆகவே, பிரச்னை என்னவென்று கேட்டதும் தயக்கமின்றி பேசத் தொடங்கினார்.
‘’சொந்த ஊர் பட்டுக்கோட்டை. தூரத்து உறவினர் ஆறுமுகத்தைத் திருமணம் செய்துகொண்டார். சுகந்தியின் நகையை வைத்து பிசினஸ் செய்யப்போவதாகச் சொல்லி சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் சுதாரித்துவிட்டார். மெஷின்களுக்குத் தேவையான சின்னச்சின்ன பொருட்கள் தயார் செய்து தரும் யூனிட் வைத்திருக்கிறார். சென்னைக்கு வந்து ஏழெட்டு வருடமாகிவிட்டது. சொந்தமாக இரண்டு வீடு வாங்கிவிட்டார். ஊரில் இடம் வாங்கிப் போட்டிருக்கிறார். தொழிலும் பெரிதாகிவிட்டது. இரண்டு பிள்ளைகளும் இப்போது பள்ளியில் படிக்கிறார்கள்.
கொரோனா சமயத்தில் யூனிட் நடத்த முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு பெரிய பிரச்னை இல்லை என்றாலும் தட்டுத்தடுமாறி பிசினஸ் செய்து வருகிறார். போன வாரம் என்னிடம் மிகவும் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றும் யாரிடமும் இதை பகிர வேண்டாம் என்றும் கூறினார்.
என் பெயரில் இருக்கும் இரண்டு வீட்டையும் உனக்குக் கொடுத்துவிட்டு நம் நிறுவனத்தில் இருந்து கொஞ்சம் பணமும் கொடுத்துவிடுகிறேன். நாம் டைவர்ஸ் செய்துகொள்ளலாம் என்று சொன்னார். நான் அழுது புலம்பினேன்.
அவரோ, ‘இது பிசினஸ் நஷ்டத்திலிருந்து தப்புவதற்கு மட்டும் தான். பிசினஸ் பிரச்னையால் நமது வீடு, சொத்துக்களுக்கு எந்த பிரச்னையும் வந்துவிடக் கூடாது. அதனால் நீ விவாகரத்து வாங்கிவிட்டு என்னிடமிருந்து இரண்டு வருடங்கள் விலகியிரு. அதற்குள் பிரச்னை சரியாகி பிசினஸ் நன்றாக வந்துவிட்டால் எந்த பிரச்னையும் இல்லாமல் நாம் மீண்டும் இங்கேயே சேர்ந்து வாழ்வோம். ஒரு வேளை பிசினஸ் சிக்கலாகி என்னுடைய நிறுவனத்தை மூட நேர்ந்தால் அதனால் உன்னிடம் இருக்கும் சொத்துக்களுக்கு எந்த பிரச்னையும் வராது. இது நமது எதிர்காலத்துக்கான ஒரு சின்ன இடைவெளியாக இருக்கட்டும். அதேநேரம், நான் யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது வந்து போகிறேன்.
நான் அதிகநேரம் தொழிற்சாலையில் வேலை செய்வதால் வீட்டுக்கு வருவதில்லை, உன்னையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்வதில்லை, சரியாக வீட்டுக்குப் பணம் கொடுக்கவில்லை என்று சொல்லி டைவர்ஸ் நோட்டீஸ் நீ அனுப்ப வேண்டும். அதாவது என்னுடைய லாயரே உனக்கு அப்படியொரு நோட்டீஸ் தயார் செய்து கொடுப்பார். உடனே நாம் மியூட்சுவலாக பிரிந்துகொள்ளலாம் என்று சொல்லி, உனக்கு நான் சொத்துக்களையும் பணத்தையும் பிரித்துக் கொடுத்துவிடுகிறேன். நிறைய பேர் சொத்துக்களை பாதுகாப்பதற்காக இப்படி செய்வது சகஜம் என்று சொன்னார்.
எனக்கு இது உண்மையா என்பதே புரியவில்லை. என்னை ஏமாற்றி அனுப்பிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக இப்படி ஒரு நாடகம் ஆடுவதாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதேநேரம், அவர் அப்படிப்பட்ட மனிதர் இல்லை. என் மீது ரொம்பவும் பாசமானவர் இல்லை என்றாலும் குழந்தைகள் மீது மிகவும் அன்பாக இருக்கிறார். ஆகவே, குழப்பமாக இருக்கிறது. இப்போது நான் என்ன செய்வது என்று புரியவில்லை’’ என்று நிறுத்தினார்.
’’உங்கள் கணவருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது, தொழில் எப்படி நடக்கிறது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா..?’’
‘’அதெல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது. சரஸ்வதி பூஜை போன்ற தினங்களில் மட்டும் தான் ஃபேக்டரிக்கு அழைத்துச்செல்வார். அடிக்கடி வெளியூர் செல்வார். ஆனால், எங்கே போனாலும் அங்கிருந்து போன் பேசுவார். அவருக்கு குடி, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் கிடையாது. அவரது அலுவலகத்தில் பெண்கள் யாரும் வேலை செய்வதும் இல்லை…’’
‘’அவரது நடவடிக்கையில் ஏதாவது விசித்திரமாக இருக்கிறதா..?’’
‘’அப்படியெல்லாம் எதுவுமில்லை. கொரோனா காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். ஆனால் எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்துவிட்டார். அவ்வப்போது சிலர் ஏமாற்றிவிட்டார்கள் என்றும் கொஞ்சம் நஷ்டம் என்றும் சொல்வார். நாலைந்து வருடங்களாக அவர் எந்த சொத்தும் வாங்கவில்லை. தொழில் நடத்த கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்… இப்படி நிறைய பேர் டைவர்ஸ் செய்துகொள்வதாகச் சொல்கிறார். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து கூட இதுக்காகத் தான் என்று சொன்னார். அவர் சொல்வதும் நம்பும்படி இருக்கிறது..’’ என்றார்.
‘’அரசு விதிக்கும் வரியில் இருந்து தப்புவதற்காக வெளிநாட்டில் இதுபோன்ற விவாகரத்துகள் அதிகம் நடப்பதுண்டு. நம் நாட்டைப் பொறுத்த வரையிலும் இப்படி விவாகரத்தும் நடப்பது மிகவும் குறைவு. எந்த ஆதாரமும் இல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் மீது இப்படி குற்றம் சாட்டக்கூடாது…’’
‘’பிறகு எதுக்கு இத்தனை வயசுக்குப் பிறகு டைவர்ஸ் செய்கிறார்கள்…’’
‘’இதனை ஆங்கிலத்தில் கிரே டைவர்ஸ் என்பார்கள். அதாவது 50 வயதுக்குப் பிறகு பெரிய சண்டை இல்லாமலே பிரிவதையே கிரே டைவர்ஸ் என்கிறார்கள். இந்த காலகட்டத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து உழைத்திருப்பார்கள். நன்றாக வாழ்ந்திருப்பார்கள். பிள்ளைகளை வளர்த்திருப்பார்கள். அதேநேரம், இத்தனை காலம் சேர்ந்து வாழ்ந்தும் தங்களுக்கென சந்தோஷம் எதையும் அனுபவிக்கவில்லை என்று உணர்வார்கள். அதாவது குடும்பம், பிள்ளைகள் என்பதற்காக இரண்டு பேரும் நிறைய தியாகம் செய்திருப்பார்கள். அதேநேரம், தனிமனித சுதந்திரத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள்.
அதனால், மீதமிருக்கும் வாழ்க்கையை தங்கள் விருப்பப்படி வாழ்வதற்காக சுமுகமாக கணவனும் மனைவியும் பிரிந்துவிடுகிறார்கள். பொதுவெளியில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்த மாட்டார்கள். உண்மையில் இருவர் பக்கமும் எந்த குறையும் இருக்காது. அதேநேரம், வெறுமையை அனுபவித்த காரணத்தாலே இப்படியொரு முடிவு எடுத்திருப்பார்கள். குறிப்பாக பிள்ளைகள் வளர்ந்து பள்ளிக்குப் போன பிறகு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவர்களைக் கவனிப்பதற்கு அதிக நேரம் செலவழிக்கத் தேவை இருக்காது. அதனால் வாழ்க்கையில் வெறுமையை அனுபவிப்பார்கள்.
இந்த நேரத்தில் கணவன் அல்லது மனைவிக்கு நீண்ட நாள் ஆரோக்கியக் குறை இருக்கலாம். அதாவது நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, மூட்டுவலி போன்ற நோய் காரணமாக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அவசியம் இருக்கலாம். இதனை மற்றவர் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார். எப்போதும் ஏதாவது பிரச்னைன்னு சொல்லிக்கிட்டே இருப்பது வழக்கம் தான் என்று அசட்டை காட்டுவார்கள். இதனால் வெறுப்படையும் தம்பதியர்கள் பிரிந்து வாழ முடிவெடுக்கிறார்கள்.
இந்த வயதுக்குப் பிறகு வேறு ஒருவருடன் காதல் ஏற்பட்டு அதற்காக பிரிவது மிகவும் குறைவான எண்ணிக்கையே. அதேபோல் கணவன், மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சேர்ந்து தான் வாழ வேண்டும் என்று ஒரு காலம் இருந்தது. இப்போது அது உடைந்துவருகிறது. காதலித்துத் திருமணம் செய்துகொண்டாலும், இருவருக்கும் இடையில் பிரச்னை வருகிறது என்றால் பிரிந்து போகலாம் என்று தைரியமாகப் பிரிகிறார்கள்.
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், சைந்தவி பிரிவை இப்படித்தான் சொல்ல வேண்டும். அவர்கள் காதலும் உண்மை, சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்திருப்பதும் உண்மை. குழந்தைகளுக்காக அல்லது மற்றவர்களுக்காக பிடிக்காத வாழ்க்கையை தொடர்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. வாழ்வது ஒரு முறை. அந்த வாழ்க்கையை நம் விருப்பத்துக்கு வாழலாம் என்ற கருத்து இப்போது அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் ஏற்கெனவே மக்கள் இந்த எண்ணத்தில் தான் இருக்கிறார்கள். அங்கே அதனால் தான் விவாகரத்து அதிகம். அதே பாணி இந்தியாவுக்கும் வந்துவிட்டது.
பிரபலங்கள் பிரிவதைக் காணும் தனி நபர்களும் தைரியமாக முடிவு எடுக்கிறார்கள். சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா, நாக சைதன்யா – சமந்தா, ஜெயம் ரவி – ஆர்த்தி என பட்டியல் பெரிதாகிக்கொண்டே போகிறது. இந்த சமுதாய மாற்றம் சாதாரண மக்களிடமும் எதிரொலிக்கிறது. அதனால் விவாகரத்து என்பது தவறு கிடையாது’’
‘’நான் ஒருவேளை விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் என் கணவர் என்ன செய்ய முடியும்?’’
‘’நீங்கள் சம்மதிக்கவில்லை என்றாலும் அவர் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றுவிட முடியும். பணத்தை பாதுகாப்பதற்குச் செய்யப்படும் விவாகரத்து ஸாம் டைவர்ஸ் என்பார்கள். நம் நாட்டில் இது இன்னமும் பிரபலமடையவில்லை என்பதால் அதிகம் வழக்குகள் பதிவாகவில்லை. வெளிநாடுகளில் இந்த ஸாம் டைவர்ஸ் என்பதும் குற்றம். ஆகவே, உங்கள் கணவரிடம் பேசுங்கள். பணம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் தான். அதற்காக வாழ்க்கையை விட பணம் முக்கியமல்ல.
சட்டத்தை ஏமாற்றி விவாகரத்து செய்வது உங்களுடைய நன்மைக்காகவும் குழந்தையின் நன்மைக்காகவும் எடுக்கப்படும் முடிவு என்றாலும் சரியான செயல் அல்ல. ஆகவே, உங்களுக்கு கணவர் முக்கியமா அல்லது பணம் முக்கியமா என்ற முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் திருமணம் முடித்த நேரத்தில் கொஞ்சமே நகை வைத்திருந்தீர்கள். சொந்த வீடு இல்லை. அதேபோன்று மீண்டும் வாழ்வதற்கும் தயார் என்றால் நீங்கள் கணவருக்கு துணையாக நிற்கலாம்.
இனி, வீடு, கார், வசதி போன்றவை இல்லாமல் வாழ முடியாது. உங்கள் எதிர்காலம் பிள்ளைகள் எதிர்காலத்துக்குப் பணம், சொத்து முக்கியம் என்றால் அதை தேர்வு செய்யலாம். உங்கள் கணவர் உங்களிடம் பின்னர் திரும்பிவரலாம், வராமலும் போகலாம். ஆகவே, கணவர் வேண்டுமா அல்லது பணம் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்’’ என்று அனுப்பினேன்.
பின்னர் ஒரு நாள், சுகந்தி பணத்தை தேர்வு செய்தார் என்பது தெரியவந்தது.
தொடர்புக்கு : 9840903586