ஆண்களை ஏமாற்றும் மோசடி
காலம்காலமாக பெண்ணின் மனசு எத்தனை ஆழமானது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக சொல்லப்படும் இந்தக் கதையை கேட்டிருப்பீர்கள். நம்ம ஊரு ஆசாமி ஒருத்தன் மிகவும் கடுமையான தவம் இருந்தான். கடவுள் வருவதாகத் தெரியவில்லை என்றதும், தன்னுடைய தலையை வெட்டி அக்னிகுண்டத்தில் ஆகிருதியாக கொடுக்கத் துணிந்தான். அவனுடைய பக்தியைக் கண்டு மெச்சிய கடவுள், உடனே தரிசனம் கொடுத்தார்.
சாமி, என்னுடைய வீட்டுத் தோட்டத்துல எடுக்க எடுக்க குறையாத தங்கப்புதையல் கிடைக்கணும். அதைவைச்சு நான் உலகத்திலேயே பெரிய பணக்காரனா மாறணும்னு வரம் கேட்டான்.
கடவுள் தலையை சொரிஞ்சுக்கிட்டு யோசிச்சார். என் கம்ப்யூட்டர்ல இருந்து பணமா கொட்டணும்னு பில்கேட்ஸ் முந்தியே ஒரு வரம் வாங்கியிருக்கான். அவனை மிஞ்சு உன்னை எப்படி பணக்காரனா மாத்தமுடியும், வேற ஏதாவது கேளுப்பா என்று கெஞ்சிக்கேட்டார் கடவுள்.
கடவுள் கெஞ்சுறதைப் பார்த்ததும் ஆசாமிக்கு பாவமாப்போச்சு. சரி, சாமி. எனக்கு பெரிசா ஒண்ணும் வேணாம். ஒவ்வொரு நேரமும் என் பொண்டாட்டி ஒரு மாதிரி பேசுறா. அவ எந்த நேரத்துல எப்படிப் பேசுவா, என்ன செய்வான்னு புரியவே மாட்டேங்குது. அதனால என் பொண்டாட்டி மனசை மட்டும் புரிஞ்சுக்கிற வரம் குடுங்கன்னு கேட்டான்.
அம்புட்டுத்தான். அம்பேல் ஆயிட்டாரு நம்ம கடவுள். அதைவிட சிம்பிளா ஏதாவது கேட்பேன்னு பார்த்தா, ரொம்ப பெரிய விஷயம் கேட்கிறே. உண்மையைச் சொல்றதுன்னா என் பொண்டாட்டி மனசைக்கூட என்னால புரிஞ்சுக்க முடியாது. சரி விடு, உன் வீட்டு தோட்டத்துல புதையல் தங்க நகையா கிடைக்கணுமா இல்லைன்னா தங்கக்காசா கிடைக்கணுமான்னு சொல்லு. நான் எப்படியாவது பில்கேட்ஸை சமாளிச்சிக்கிடுறேன்னு சொன்னாராம் கடவுள்.
அதாவது பெண்ணின் மனம் கடலைவிட ஆழமானது என்றும் யாராலும் பெண்ணை புரிந்துகொள்ள முடியாது என்பதையும் சொல்வதற்கான கதை இது. ஏன் இப்படி சொல்கிறார்கள்? உண்மையில் பெண்ணை யாராலும் புரிந்துகொள்ள முடியாதா என்பதை யோசித்துப்பார்த்தால், இந்தக் கூற்றுக்குப் பின்னே இருக்கும் மாபெரும் மோசடி புரியும்.
இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தனித்தன்மை வாய்ந்தது. தானே சிந்திக்கக்கூடிய எந்த ஓர் உயிரும் தன்னிஷ்டத்துக்குதான் செயல்படும். ஐந்து வயது குழந்தையிடம் ஒரு பொம்மையைக் கொடுத்தால், அதைவைத்து நிச்சயம் விளையாடும் என்று உறுதி கூறமுடியாது. விளையாடலாம், தூக்கிப்போடலாம், கண்டுகொள்ளாமல் இருக்கலாம், உடைக்கவும் செய்யலாம். அதேபோல் தனிப்பட்ட மனிதன் ஒவ்வொரு சூழலிலும் எப்படி நடந்துகொள்வான் என்பது அவனுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. வீரமாக, தைரியமாகப் பேசும் ஒருவனை, திடீரென இரண்டுபேர் சேர்ந்து தாக்குவதற்கு முற்பட்டால் பயந்து ஓட்டம் பிடிக்கலாம். ஏனென்றால் மனிதனின் ஆழ் மனம் நேரத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப முடுவெடுக்கக்கூடியது. அதனால் ஒருவனைப் பற்றிய எந்த ஒரு தனிப்பட்ட கருத்தும் நிச்சயம் சரியாக இருக்காது.
கீழே பத்து ரூபாய் கிடக்கும்போது, அதை எடுத்து உரியவரிடம் நேர்மையாக ஒப்படைக்கும் மனிதன், ஆயிரம் ரூபாய் நோட்டு கிடைத்தால் ரகசியமாக பதுக்கிக் கொள்ளலாம். யாருமே இல்லாத தனியறையில் இருக்கும்போது, ஒருவன் மனம் என்னவெல்லாம் யோசிக்கும் என்பதை அறுதியிட்டு யாராலும் கூறமுடியாது. இதில் ஆண், பெண் என்ற பேதத்திற்கு இடமே இல்லை. மனம் என்பதே புதிர் மட்டும்தான். ஏன் மனதை புரிந்துகொள்ள முடிவதில்லை என்றால், மனதை படிப்பதற்கு யாரும் முற்படுவதில்லை.
சாப்பிடுவதற்கு என்ன பிடிக்கும், எப்படிப்பட்ட நிறத்தில் ஆடை பிடிக்கும், எந்த மாதிரியான இசை பிடிக்கும், யாருடன் பழகப்பிடிக்கும் என்பதை எல்லாம் தெரிந்துகொள்வதே வாழ்க்கைக்கு போதும் என்பதுதான் மனிதர்களின் எண்ணம். உண்மையில் தான் யார், தன்னுடைய நிஜமான ஆசை என்ன, ஏன் கோபப்படுகிறோம், எதற்காக ஆத்திரப்படுகிறோம், எதற்காக வருத்தப்படுகிறோம் என்று ஆழமாக யாரும் யோசிப்பதில்லை. யோசிக்க மட்டுமில்லை, சிந்திப்பதும் இல்லை. அதனால்தான் மனம் எப்படி நடந்துகொள்ளும் என்பதை அறிந்துகொள்ள முடியாமல் மனிதர்கள் மேம்போக்காக வாழ்கிறார்கள்.
பெண் புதிரானவள் என்றால், ஆணும் புதிரானவனே. பெண்ணின் நடவடிக்கைக்கு அர்த்தம் தெரியாது என்றால் ஆணின் நடவடிக்கைக்கும் அர்த்தம் தெரியாது என்றுதான் அர்த்தம். அதனால் பெண் என்பவள் புதிரும் அல்ல புரியாதவளும் அல்ல. பெண்ணுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுத்தால் அவள் நிஜமாகத் தோன்றுவாள்.