நம்பிக்கைப் போராளி நடிகை கெளதமி.
பிரபலங்கள் குறிப்பாக திரையுலகப் பிரபலங்கள் இப்போது தான், தங்களுடைய வந்த நோய் குறித்தும் அதிலிருந்து மீண்டு வந்த சிகிச்சை வழிமுறைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இது, சாதாரண மக்களுக்கு மிகப்பெரும் விழிப்புணர்வூட்டும் செயல். குறிப்பாக புற்று நோய் என்றாலே பயந்து நடுங்கும் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார் நடிகை கெளதமி.
இது குறித்து நடிகை கெளதமி, ‘’புற்று நோயைக் குணப்படுத்த முடியும். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க முடியும். புற்றுநோயை தவிர்க்க முடியும். புற்றுநோய் தொடர்பாக பயம், வலி, மரணம், உருவ சிதைவு என்ற சில வார்த்தைகள் உண்டு. ஆனால் அது பழைய கதை. இப்பொழுதைய உண்மை நிலை – தவிர்ப்பது, சிகிச்சை, குணபடுத்துதல் மற்றும் ஆதரவு.
புற்றுநோய் சிகிச்சைகளில் இப்பொழுது மிகப்பெரிய முன்னேற்றங்கள் பலரது உயிரை காப்பாற்றி கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கான முதல் அடி எடுத்து வைப்பது நமது பொறுப்பாகும். விழிப்புணர்வோடும் செயலூக்கத்துடன் நாம் இருக்க வேண்டும். ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டு நாம் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கவனமாக செயல்டுவது. அதாவது ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக ஏற்படுத்தி கொள்ளுங்கள். மன அழுத்தத்தை குறைக்க திறம்பட முற்படுங்கள். முறையான உடல் ஆரோக்கிய சோதனைகளை எடுத்து கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துடுங்கள். நச்சுத் தன்மை கொண்ட வீட்டு உபயோக பொருட்களை தவிர்த்து இயற்கையான பொருட்களை உபயோகப்படுத்துங்கள். ஊட்டச்சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
நாம் இப்பொழுது உண்ணும் குப்பைகளை ஒதுக்கி விட்டு பாரம்பரிய உணவுகளை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட சக்கரை வகைகள், உப்பு மற்றும் எண்ணெய் வகைகளை முற்றிலும் புறக்கணித்து விடுங்கள். இதையெல்லாம் செய்ய தொடங்கினால் நாமும் நமது அன்பிற்குரியர்களும்முழுமையான ஆரோக்கியமான, சந்தோஷமான, சக்தியூட்டபட்ட வாழ்க்கையை வாழ முடியுங்கள். இப்படி வாழ்வதற்கு நமக்கு முழு தகுதி உள்ளது. வாருங்கள்! புற்றுநோயில்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்…’’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
நடிகை கெளதமிக்கு ரேடியோதெரபி சிகிச்சை நடந்த தருணங்களில் நடிகர் கமல்ஹாசன் ஆறுதலாக உடன் இருந்திருக்கிறார். இது குறித்து ஒரு பதிவு பரவலாக அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பதிவாகவே அதையும் பார்க்கலாம்.
அந்த பதிவில், ‘’சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்மதியப் பொழுதில் அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு உள்ளறையில் அமர்ந்திருந்தேன். முப்பது பேர் அமரத்தக்க அந்தக் குளிரூட்டப்பட்ட அறை முழுவதும் வடநாட்டவர்களும், வெளிநாட்டவர்களும்தான்.. அதன் ஒரு பின்வரிசை மூலையில் நான் அமர்ந்திருக்க, முதல்வரிசையில் இன்னொரு மூலையில் கமல்ஹாசன் அமர்ந்திருந்தார். அது ஒரு ரேடியோதெரபி கதிரியக்கச் சிகிச்சை அளிக்கும் அறையின் காத்திருப்பறை.
ரேடியோதெரபி எனில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு கதிரியக்கச் சிகிச்சை. நோயைவிட அதற்கான சிகிச்சை கொடுமையானது என நான் நேரில் கண்டு அறிந்துக் கொண்ட காலக்கட்டம் அது. சிகிச்சைக்காக அடுத்து உள்ளே செல்லவிருக்கும் ஒரு சிலரில் எனது அம்மாவும் ஒருவர். மரணத்தின் வாசல் என்பார்களே! அதை நோயுற்றோர் முற்றும் முதலுமாக உணரும் நேரமும், இடமும் அது. எனது ஆதர்ச நாயகன் கண் எதிரே அமர்ந்திருக்க, எழுந்து சென்று அவரிடம் உரையாட, புகைப்படம் எடுத்துக் கொள்ள எனக்குத் தன்னிச்சையாக எழுந்த ஆவலை அந்தச் சூழலின் மாண்பு கருதி அமைதி படுத்திக் கொண்டு காத்திருந்தேன்.
உள்ளறையின் கதவு திறக்க, செவிலியர் இருவர் தாங்கிப் பிடிக்க கவுதமி அவர்கள் பிழிந்தெடுத்த ஈரத்துணியைப் போல மிகத் தளர்வாக நடந்து வெளியே வந்தார். கமல் சடாரென எழுந்து வேகமாகச் சென்று அவர் துணைவியாரை அணைத்தபடி வாங்கிக் கொண்டவுடன், செவிலியர்கள் மீண்டும் உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டனர். இப்போது கமல் அவரைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வெளியேற முயன்றார்.
நான் எழுந்து வேகமாக கமல்ஹாசனிடம் சென்று, சார், நான் சென்று வீல்சேர் கொண்டு வரவா? என்றேன். வேண்டாங்க! நன்றி.. இப்படி அழைத்துச் செல்வதுதான் இவருக்குப் பிடிக்கும் என்றவர் சற்றே நிறுத்தி என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி, எனக்கும் பிடிக்கும் என்றார்.
அன்று இரவு நண்பனிடம், எத்தனை வயதானால், எத்தனை இலக்கியம் படித்தால் இப்படியொரு காதல் எனக்கு வரும்னு தெரியலைடா என்றேன். அம்மி மிதித்து, அக்னி சாட்சியாகக் கைப்பிடித்த மனைவியை பொது இடத்தில் கை நீட்டி அடிக்கும் அற்பர்களும், ஐம்பது பவுன் வரதட்சணை கொண்டு வந்த மனைவியை ஐந்து பவுன் கூட வாங்கிவரவில்லை என தீவைக்கும் அயோக்கியர்களும் வாழும் சமூகத்தில், தாலிக் கட்டாமல் ஜஸ்ட் உடன் இணைத்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை அவரின் நோய்க்காலத்தில் பேணிப்பாதுகாத்த அந்த மனிதனை இந்த நூற்றாண்டின் மகத்தானக் காதலன் என்பேன்..’’ என்று கூறியிருந்தார். இதிலிருந்து புற்றுநோய் போன்ற நோய்களுக்கு எத்தனை பெரிய ஆறுதல் தேவைப்படும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
இனி, புற்று நோய் பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாம். சென்னையில் ஒரு லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு இருப்பது அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஆய்வறிக்கையொன்றின்படி, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு பத்து நிமிடங்களில் இரண்டு பெண்களுக்கு மார்பகப்புற்று இருப்பதும், அவர்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில் இருப்பதும் கண்டறியப்படுவதால், இருவரில் ஒருவர் இறந்துவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால், இந்திய அளவில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும்தாம் 23.3% பெண்கள் கருப்பைவாய் புற்றுநோயினால் இறந்துபோகிறார்கள். புகையிலைப் பயன்பாட்டினால் 68 இந்திய ஆண்களில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது.
பொதுவாக, புற்றுக்கட்டிகள் அவைத் தோன்றுமிடத்தைக் கொண்டு கடினப்புற்று அல்லது நீர்மப்புற்று கட்டிகள் என்று பிரிக்கப்படுகின்றன. கடினமான செல்களைக்கொண்ட உறுப்புகளான எலும்பு, மார்பகம், நுரையீரல், மண்ணீரல் போன்ற உடலுறுப்புகளில் உருவாகும் திண்மப்புற்றுக்கட்டிகளை கார்சினோமா என்றும், சற்று மெல்லிய அல்லது இணைப்புத்திசுக்களைக் கொண்ட தசைகள், எலும்புச்சவ்வுகள், கொழுப்புப்படலம் மற்றும் இரத்தக்குழாய்ச் சுவர்களில் தோன்றுபவற்றை சர்கோமா புற்றுகள் என்றும் கூறுவார்கள். அதோடு ரத்தம், எலும்பு, நிணநீர் நீர்மங்களில் புற்றுக் கட்டிகள் உருவாகின்றன.
புற்று நோய்க்கு கீமோதெரபியே அதிக பயனுள்ளதாக இருக்கிறது. அதேநேரம், புற்றுசெல்களை அழிப்பதோடு நல்லசெல்களையும் அழிப்பதால், புற்றுசெல்களைப்போல வேகமாக வளரும் முடி மற்றும் நகச்செல்கள் உதிர்வது தவிர்க்கமுடியாத பக்கவிளைவுகளாகும். ஆனாலும், அதைத் தொடர்ந்து, ஒவ்வாமை, வாந்தி, இரத்த உற்பத்தி குறைந்து உடல் நலிதல், பசியின்மை, நினைவாற்றல் குறைபாடு, உயிரிழப்பு போன்ற தீவிரமான பக்கவிளைவுகளை உண்டாக்குவதால் கீமோதெரபிக்கு நோயாளிகள் அஞ்சுகிறார்கள். இப்போது புதிய வகை மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனவே, தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியும்.