தேனீ கடி வைத்தியம் செய்யலாமா..?

Image

அவ்வப்போது புதுசுபுதுசாக சில வைத்திய முறைகள் அறிமுகமாவதுண்டு. இப்போது மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் தேனீ கடி வைத்தியம் எப்படி என்று பார்க்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு கால்களுக்கு மீன்களைக் கொண்டு மசாஜ் செய்யும் ஃபிஷ் ஸ்பா பரபரவென பெருகின. கால்களில் இருக்கும் செத்துப்போன செல்கள், பாக்டீரியாக்களை இந்த மீன்கள் சுத்தம் செய்து அகற்றி விடுவதால் பாதத்திற்கு அழகும் மனதிற்கு நிம்மதியும் கிடைக்கிறது என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால், அதன் பிறகு பக்கவிளைவுகள் தெரியவந்தன. அதாவது அதே மீன்கள் அடுத்தடுத்து வெவ்வேறு நபர்களின் கால்களைக் கடிப்பதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு, ஹெச்.ஐ.வி. பாதிப்பும் ஏற்படலாம் என்று சொல்லப்பட்டது. இதையடுத்து இந்த பிசினஸ் பெரிய அளவுக்கு வளரவில்லை.

இப்போது மார்க்கெட்டில் புதிதாக வந்திருப்பது தேனீ கடி வைத்தியம். அதாவது தேனீயைக் கொட்டவைத்து, அதன் விஷத்தின் மூலம் மூட்டுவலி, காயம், புற்று நோய், எய்ட்ஸ் உள்ளிட்ட பல நீண்ட கால நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே தேனீ கடி வைத்தியத்தின் மகத்துவம். .  

ஒரு காலத்தில் தேனீ என்பது காட்டுக்குள், தோட்டத்துக்குள் தானாகவே கூடு கட்டுவதாக இருந்தன. இப்போது சின்னச்சின்ன தோட்டத்திலும் தேனீ வளர்த்து லாபம் ஈட்டலாம் என்று பெட்டி பெட்டியாக விற்பனை செய்கிறார்கள். வீட்டில்,. தோட்டத்தில், மொட்டை மாடியில் இரண்டு தேனீ கூடுகள் வைத்துவிட்டால் எந்த செலவும் செய்ய்யாமலே லாபம் பார்க்க முடியும் என்று விளம்பரம் செய்யப்படுவதால், நிறைய பேர் பொழுதுபோக்குக்காகவும் லாபம் பார்க்கவும் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தேனீ வளர்ப்பில் தேன், தேன் மெழுகு, ராயல் ஜெல்லி போன்றவை கிடைக்கிறது. அதோடு தேனீயைக் கொட்ட வைத்து வலி நீக்கும் அபிதெரபி என்ற சிகிச்சையும் செய்கிறார்கள். சீனா, ஜப்பானில் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படும் சிகிச்சை இது.

தேனீயின் நஞ்சு என்பது மெலிட்டின் மற்றும் பாஸ்போலிப்பேஸ் புரதங்கள் நிரம்பியது. அபிமின் என்று அழைக்கப்படும் இந்த புரதம் மனிதர்களின் நரம்பு செல்களில் நன்கு செயல்படுவதற்குத் தூண்டக் கூடியது. நுண்ணுயிர்க்கொல்லியாகச் செயல்படும் இந்த நஞ்சு ஆர்த்ரைடிஸ் நோயைக் குணப்படுத்துகிறது என்கிறார்கள்.

ஆனால், தேனீ விஷத்தை நேரடி மருந்தாக இன்னமும் அலோபதி மருத்துவம் ஏற்கவில்லை என்பதே உண்மை. இந்த வைத்தியம் குறித்து பேசும் அலோபதி மருத்துவர்கள், ‘’தேனீ விஷத்தில் உள்ள புரதங்களுக்கு வலியை நீக்கும் தன்மை இருக்கிறது என்றாலும், இதில் நன்மையை விட தீமையே அதிகம். பொதுவாக தேனீ கொட்டியதும் ஏற்படும் வலி, வீக்கம், சிவந்து போதல், அரிப்பு போன்றவை ஒரு சில நாட்களில் மறைந்துவிடும்.

ஒரு சிலருக்கு இந்த விஷம் ஒவ்வாமையை உருவாக்கும். தேனீ கொட்டிய இடம் மட்டுமின்றி தோலின் வெவ்வேறு பகுதிகளில் வீக்கம், வலி உள்ளிட்ட பிரச்னையும் மூச்சுத் திணறலும் ஏற்படலாம். இவர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம். இந்த மூச்சுத் திணறலுக்கு உடனடியாக சிகிச்சை தரவில்லை என்றால் உயிர் போகும் அபாயமும் உண்டு.

சிலருக்கு மூச்சுத் திணறல் மட்டுமின்றி மூக்கடைப்பு, முகம் மற்றும் நாக்கு வீக்கம், இதயத் துடிப்பு குறைதல். கொட்டிய இடத்தில் தொற்று போன்ற பிரச்னைகள் உருவாகலாம். சில நாட்கள் தேனீயின் விஷத்தை தொடர்ந்து உடலில் ஏற்றிக் கொள்பவர்களுக்கு வலிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பாம்பு விஷத்தில் மருத்துவத் தன்மை இருக்கிறது என்பதற்காக உடலில் அதனை ஏற்றிக் கொள்வது எப்படி ஆபத்தானதோ, அதே அளவுக்கு தேனீ கடியும் ஆபத்தானது’’ என்கிறார்கள்.

பொதுவாக, கொடுக்கு எனப்படும் ஸ்டிங்கர் மூலம் தோலில் விஷத்தை தேனீ செலுத்துகிறது. இந்த விஷத்தில் தோல் செல்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும் புரதங்கள் அதிகம் இருப்பதாலே வலி மற்றும் வீக்கம் உருவாகிறது. எனவே, தேனீ கடித்துவிட்டால் அடுத்த சில மணி நேரங்கள் உடல் மாற்றங்களைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

ஸ்டிங்கரை எடுத்திவிட்டு சோப்பு போட்டு கடித்த பாகத்தை நன்கு கழுவ வேண்டும். ஐஸ் பேக் ஒத்தடம் கொடுக்கலாம். கடிபட்ட இடத்தில் உள்ள சிவப்பு, வீக்கம், வலி போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக 24 மணி நேரத்தில் குறைய வேண்டும். இதற்கு மாறாக வலி அதிகரித்தல், உடல் வெப்பமாதல், முகம், உதடு, தொண்டை வீக்கம், மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆய்வுக்கு உட்படுத்தப்படாத அனைத்து சிகிச்சை வழிமுறைகளும் ஆபத்தாக மாறலாம், ஆகவே விலகி நில்லுங்கள்.

Leave a Comment