எம்.ஜி.ஆருக்கு விமர்சனம், உதயநிதிக்கு ஜால்ரா
கலைவாணர் அரங்கில் கருணாநிதி பற்றி அமைச்சர் எ.வ.வேலு எழுதிய, கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியிட்ட ரஜினிகாந்த் 24 நிமிடங்கள் தி.மு.க.வைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் பேச்சின் இடையில் எம்.ஜி.ஆரை சிறுமைப்படுத்தியும் உதயநிதிக்கு ஜால்ரா போட்டும் பேசியது பெரும் எதிர்ப்பை சம்பாதித்துவருகிறது.
ரஜினிகாந்த் பேசுகையில், ‘’எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. 1986 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி முற்றிலும் எதிர் எதிர் திசையில் இருக்கும் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினார். ஒன்று சாம் பிட்ராடோ மூலம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்தார். இன்னொன்று கிராமங்கள் தன்னிறைவு பெற பஞ்சாயத்து ராஜ் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இங்கே உள்ளாட்சித் தேர்தலே நடத்தவில்லை என்றதும், தேர்தல் நடத்தினால் தான் மத்திய அரசின் நிதி தரப்படும் என்று அதிகாரிகள் மூலம் தெரிவித்தார். எனவே எம்ஜிஆர் வேறு வழியின்றி உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தார்.
அந்த சமயத்தில் திமுக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. 1984 இல் அடித்த இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட மற்றும் எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்ட அனுதாப அலையில் திமுகவிற்கு 22 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். சில எம்பிக்கள் மட்டும் தான். தேர்தலை எதிர்கொள்ள பொருளாதார வசதி திமுகவிடம் அப்போது இல்லை. அதிமுகவினர், ஏகப்பட்ட பிரச்சார போஸ்டர்கள் அடித்தார்கள்.
எல்லா சுவர்களிலும் இரட்டை இலை. அப்போது சைக்கிள் என்பது ஒரு லக்சூரி ஐட்டம். அரசு ஊழியர்களே பத்து மாத தவணையில் சைக்கிள் வாங்கியது வரலாறு. அதிமுகவினர் அப்போது சைக்கிள் பேரணி வேறு நடத்தினார்கள். இங்கே கை வலிக்க பூத் சிலிப் எழுதியவர்களுக்கு ஒரு டீ கூட வாங்கித் தரவில்லை. அப்படியாப்பட்ட சூழலில் அந்த உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது திமுக. காரணம் தொண்டர்களின் அசுர உழைப்பு. வீடு வீடாக படியேறி பேசினார்கள். தெரு முக்குகளில் மைக் செட் கூட இல்லாமல் அந்த அளவிற்கு சத்தத்தோடு பேசிய தொண்டர்களை பார்த்திருக்கிறேன்’’ என்று பேசியது எம்.ஜி.ஆர். ரசிகர்களை வேதனைப்படுத்தியிருக்கிறது.
அதேநேரம், “கொஞ்ச நாளுக்கு முன் அரசியலுக்குள் நுழைந்து பெயர், புகழ் பெற்று அரசியலில் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை நிரூபிக்கும் உதயநிதி ஸ்டாலின்” என பாராட்டிப் பேசியிருப்பது அவரது ரசிகர்களிடம் பெரும் வருத்தத்தை உருவாக்கியிருக்கிறது. ஏனென்றால், அரசியலுக்கு வருவதாக ரஜினி சொன்ன காலத்தில் உதயநிதி ரஜினியை நையாண்டி செய்ததை இன்னமும் அவரது ரசிகர்கள் மறக்கவில்லை என்பது தான்.