• Home
  • ஞானகுரு
  • இறப்பு வருவதை அறிந்துகொள்ள முடியுமா..?

இறப்பு வருவதை அறிந்துகொள்ள முடியுமா..?

Image

ஞானகுரு தரிசனம்



’’ஆன்மிக குரு என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் அத்தனை பேரும் ஆன்மிக வியாபாரிகள் தான். எந்த ஒரு மனிதனுக்கும் குரு என்பவர் தேவையே இல்லை’’ என்றார் ஞானகுரு.

‘‘இன்றைய நிலையை வைத்துத்தானே இப்படிச் சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
‘‘இல்லை… இந்த உலகம் ஆரம்பமான காலத்தில் இருந்து, ஆன்மிக குருவென அவதரித்தவர்கள் அத்தனை பேருமே மக்கள் பிரச்னைகளைத் தீர்த்ததில்லை. ஆனால், அவர்களுக்கேத் தெரியாதவற்றைச் சொல்லி மக்களை நம்ப வைத்தார்கள். அந்த நம்பிக்கையினால் மக்கள் திருப்தி அடைந்து ஏமாறத் தொடங்கினார்கள். அதனால் ஏதாவது பிரச்னை வந்தால், தாங்களே தீர்த்துக் கொள்ள நினைக்காமல் ஜோதிடர், சாமியார், மருத்துவர் என்று தேடிப்போனார்கள்…’’
‘‘யாருமே சரியில்லை என்று சொல்லும் நீங்களாவது நல்ல குருவாக இருக்கலாமே’’
‘‘எனக்கு எல்லாம் தெரிந்திருந்தால், புரிந்திருந்தால் மட்டுமே குருவாக இருக்க முடியும். ஆனால் எனக்கு எல்லாம் தெரியும் என்று எப்போது நினைக்கிறோனோ, அப்போதே எதுவும் தெரியவில்லை என்ற அர்த்தமாகிவிடும்’’ என்று முடித்தபோது சாரல் நின்று வெளிச்சம் வரத் தொடங்கியது.
‘‘அப்படியென்றால் யாருமே குருவாக இருக்க முடியாதா?’’
‘‘ஆம்… யாரும் யாருக்கும் குருவாக இருக்க முடியாது. யாராவது ஒருவரை பின்பற்றத் தொடங்கி விட்டால், உண்மையை அறிந்து கொள்ளும் முயற்சியை பாதியில் கைவிட்டதாக ஆகிவிடும்.’’
‘‘அப்படியென்றால் நீங்கள் என்னதான் செய்கிறீர்கள்?’’
‘‘இந்த உலகத்தின் மூலத்தைத் தேடிப் பார்க்கிறேன். அதுவரை நான் சந்திக்கும் மனிதர்களுக்கு எல்லாம் சுதந்திரம் அடையும் வழியாக எனக்குத் தெரிந்ததை சொல்லித் தருகிறேன். ஒவ்வொரு மனிதனும் அவனுடன் பிறந்த எல்லாவிதமான அச்சங்களில் இருந்தும், உடம்போடு ஒட்டிப் பிறந்த கருத்துகளில் இருந்தும் விடுதலை பெறவேண்டும். இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த அத்தனை ஆதாரங்களையும் மறுபரிசீலனை செய்யும் துணிச்சல் வரவேண்டும்’’
‘‘இவற்றை வெளிப்படையாக மேடை போட்டு நீங்கள் பேசலாமே!’’
‘‘சொல்லப்பட்ட வார்த்தைகள் எல்லாமே தவறாக மாறிவிடும்…’’
‘‘புரியலையே சாமி’’
‘‘எழுதப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு அர்த்தம் தரக்கூடியவை. நான் சொல்லும் வார்த்தைகள் மிகச்சரியாக 100 சென்டிகிரேட் வெப்பத்தில் இருக்கிறது என்றால், அதை கேட்கும் உன்னால் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைவான வெப்பத்தில் மட்டுமே அதனை எடுத்துக் கொள்ள முடியும். அதனால்தான் இதுவரை இருந்த அத்தனை குருமார்களும் தோல்வியடைந்தார்கள்…’’
‘‘அப்படியானால் யாரும் யாருக்கும் எதுவும் சொல்லித்தரவே முடியாதா?’’
‘‘சொல்லித் தருவது அபாயகரமானது என்றால், அதை அப்படியே ஏற்றுக் கொள்வது அதைவிட அபாயகரமானது. வேதம் சொல்லியிருக்கிறது, குரு சொல்லி விட்டார் என்பதற்காக எதையும் அப்படியே பின்பற்றும் முட்டாள்தனத்தை மனிதர்கள் நிறுத்த வேண்டும். பழைய கடவுள்களுக்குப் பதிலாக புதிய கடவுள், பழைய சமயங்களுக்குப் பதிலாக புதிய சமயம், பழைய கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக புதிய தடைகள் என்று மாற்றவேண்டிய அவசியமும் இல்லை. சுதந்திரமடைதல் என்பதன் அர்த்தம் எந்த சுமையும் இல்லாமல், யாருடைய சார்பும் இல்லாமல் வாழ்க்கையை புரிந்து கொள்வது தான். ஒவ்வொருவர் சொன்ன வார்த்தைகளையும் விதையாக மனதில் பதியவைத்து அதில் உருவாகும் இலை, காய், கனிகளில் உருவாகும் ருசியை அனுபவித்து தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தவறானவற்றை விலக்கும் தைரியம் இருத்தல் வேண்டும்…’’
அமைதியாக என் பின்னே வந்துகொண்டிருந்த சங்கரன், ‘‘சாமி… கொஞ்சநேரம் உட்காருவோமா?’’ எனக் கேட்டார். கையை பிடித்து ஒரு மரத்தின் கீழே அமர வைத்தேன், என் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.
‘‘நீங்க சொல்ற மாதிரி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போறோம் சாமி, எல்லாரும் சாகத்தானே போறோம். அரைகுறை அறிவோடு செத்துப் போனாத்தான் என்ன?’’
‘‘ஆஹா இதுதான் போராடத் தயங்கி செத்துப்போகும் பயந்த மனிதர்களின் மனநிலை சங்கரா. பெரும் துயரத்துடனும் நம்பிக்கை இல்லாத நிலையிலும்கூட, இந்த பழகிப் போன வாழ்க்கையை அப்படியே தொடரத் தயாராக இருக்கிறாய். ஆனால் வாழ்வின் உண்மையை அறிந்துகொள்ள தயங்குகிறாய்… அப்படித்தானே? வாழ்க்கை என்பது அன்றாடச் சித்ரவதையாக, அவமதிப்பாக, துயரமாக, குழப்பமாக இருப்பதற்குக் காரணமே வாழ்க்கையை மனிதன் புரிந்து கொண்டதில்லை என்பதுதான். மரணத்தில் இருக்கும் பயம்தான் மனிதர்களை இத்தனை குழப்பத்துக்கும் ஆட்படுத்துகிறது’’
‘‘மரணத்தில் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது’’ என்று மிரட்சியுடன் கேட்டார் சங்கரன்.
‘‘வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்துகொண்டவனால், மரணத்தின் சிறப்பையும் உணர்ந்து கொள்ள முடியும். மரணம் என்பது முடிவல்ல, ஒரு ஓய்வுக்கான ஆரம்பம். நாம் நேசிக்கின்ற அனைத்தையும், மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற அனைத்தையும் துறந்து விடுதல்தான் மரணம். ஒவ்வொரு நிமிடமும் இறக்காமல் ஒருவரால் வாழவே முடியாது என்பதை புரிந்து கொண்டால் மரணம் பயம் தராது. இந்த உலகை அன்போடும், அழகோடும் பார்க்கும் ஒருவர் மரணத்தைப் பார்த்தும் அஞ்சமாட்டார். ஒரு பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்ததும் கூட்டை மறந்துவிடுவது போன்று, வாழ்விற்கு இன்பம் தரும் இந்த உடலை எந்த கணத்திலும் மறந்துவிடத் தயாராக இருந்தால் மரணமானது இனிமையாகி விடும்.’’
‘‘இறப்பு எப்போது வரும் என்பதை அறிந்துகொள்ள முடியுமா?’’
‘‘ஒவ்வொரு கணமும் இறந்து கொண்டிருக்கும் போது, எதற்காக நிரந்தர மரணத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்? இறப்பு எப்போதும் வீட்டு வாசலில் காத்துக் கொண்டுதான் இருக்கும். இறப்பு என்பது புனிதமானது, ஏனென்றால் அது எந்த மனிதனிடமும் ஏற்றத்தாழ்வு பாராட்டுவதில்லை. அதற்கு ஏழை, பணக்காரன், வலியவன், வறியவன், அரசியல்வாதி என பாகுபாடு கிடையாது. வாழ்வில் இல்லாத சமநிலையை மரணம் எல்லா மனிதர்களுக்கும் கொடுத்துவிடுகிறது. மரணம் பற்றிய பயம் இல்லாத காரணத்தால்தான் மிருகங்கள் மற்றும் பறவைகள் இயல்பாக எந்த மதத்தையும் பின் பற்றாமல் இருக்க முடிகிறது.’’
‘‘அப்படியானால் பறவைகளைப் போன்று வாழவேண்டும் என்கிறீர்களா?’’
‘‘பறவைகளைப் போல வாழ முடிகிறதோ இல்லையோ, பறவைகளைப் போன்று மரணமடையலாம். ஏனென்றால் எந்த பறவையும் எதிர்கால சந்ததிக்காக பாதையை விட்டுச் செல்வதில்லை. ஒவ்வொரு பறவையும் அதனதன் வழிகளில் மரணமடைகிறது. எந்தப் பறவையும் வாழ்ந்ததற்கு சுவடுகள் கிடையாது’’ என்று முடித்து கண்களை மூடினேன்.
மரணம் பற்றி பேசியதில் சங்கரன் நிலைகுலைந்து போயிருந்ததால், அதற்கு மேல் பேசவிரும்பாமல், ‘‘சங்கரா… நான் இங்கேயே படுத்து ஓய்வெடுத்தபின் மேலே நகர்கிறேன். நீ இப்போதே கீழே சென்றுவிடு, பெரிய மழை வரும் என நினைக்கிறேன்’’ என்று மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்தேன்.
‘‘சாமி, எனக்கு இன்னும் குழப்பமா இருக்கே…’’
‘‘எல்லா குழப்பத்தையும் நீயேதான் தீர்த்துக் கொள். இன்னொருவரால் உன்னுடைய பசிக்கு சாப்பிடமுடியாது’’
‘‘நானே எப்படி எல்லாவற்றையும் அறிந்து கொள்வது? ஏற்கெனவே நான் படித்தது, உங்களை மாதிரி ஆட்களிடம் கேட்டு அறிந்தது என எல்லாமே ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது’’
‘‘இதுதான் இறுதியான உண்மை என எதுவும் இல்லை என்றாலும், உன்னளவில் இதுதான் சரி என்று நீ முடிவெடுக்காத வரை குழப்பங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். நிறைய அறிந்து கொள்ளவேண்டும் என நீ நினைத்தால், முதலில் எதுவுமே தெரியாது என்ற  என்ற எளிமையான மனநிலையை வளர்த்துக் கொள்’’
‘‘அப்படி செஞ்சா நானும் உங்களை மாதிரி ஆகமுடியுமா?’’
‘‘என்னை மாதிரி என்றால்..?’’
‘‘நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டு ஊர் ஊரா போய் பிரசங்கம் செய்யணும், எல்லோரும் என்கிட்ட கேள்வி கேட்கணும், எல்லாக் கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லணும்’’ என்று ஆசைகளைச் சொன்னார்.
‘‘பிரசங்கம் செய்வதற்கும், கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கும் நீ பெரிதாக உழைக்க வேண்டியதோ அல்லது எதையும் அறிந்து கொள்ளவோ வேண்டியதில்லை. மனப்பாடமாக சில பாடல்களையும், மேற்கோள்களையும் நெஞ்சில் நிறுத்திக் கொண்டால் சிறந்த பிரசங்கியாகி விடலாம். கேள்விகளுக்கு பதில் சொல்வது இன்னும் எளிது, ஏனென்றால் எல்லோருமே அவர்களுக்கு சாதகமான பதிலை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். அதை மட்டும் சுற்றிவளைத்து சுவாரஸ்யமாகச் சொன்னால் போதும். ஆனால் இதன்மூலம் என்ன சாதிக்கப் போகிறாய்?’’ என்றேன்.
‘‘ஒண்ணும் புரியலை சாமி… இத்தனை வருடம் பூசாரியா இருந்து என்ன சாதிச்சுட்டேன். அடுத்தவங்களுக்கு உபயோகமா எதையாவது சொல்ல நினைக்கிறேன். அதான், உங்க சிஷ்யன்னு சொல்லிக்கிட்டா மரியாதையா இருக்கும்!’’
‘‘நீ ஏதாவது தப்பாகச் சொன்னால் கூட, பழியை என் மீது போட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறாய் அப்படித்தானே’’ என்று சிரித்ததும் கொஞ்சநேரம் பேசாமல் இருந்தார்.
‘‘சாமி, நீங்க என்னய சீடனா ஏத்துக்காட்டி பரவாயில்லை. ஆனா நான் உங்களை குருவா ஏத்துக்கிட்டேன் அவ்வளவுதான். உங்களை மனசுல நினைச்சுக்கிட்டு நான் ஆசைப்பட்டதை செய்யப் போகிறேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை’’ என்று புறப்படத் தயாரானவர் அடுத்த கேள்வியை ஆர்வமாகக் கேட்டார்.
‘‘சாமி… நவராத்திரி விரதம் இருந்தா முற்பிறவியிலும், இந்த பிறவியிலும் செய்த பாவமெல்லாம் தீர்ந்து போகும். சிவராத்திரிக்கு கண் விழிச்சா சொர்க்கம் கிடைக்கும். ஏகாதசி, பிரதோஷத்தில உபவாசம் இருந்தா புண்ணியம் கிடைக்கும், பாவமெல்லாம் பனியாக கரைஞ்சிரும்னு வேதம் சொல்லுதே… அப்படின்னா தினமும் சாமி கும்பிட வேண்டாமா?’’
‘‘தினமும் சாமியை கும்பிடுன்னு சொன்னா அலுப்பு தட்டிடும், அதனாலத்தான் ஏகாதசி, பிரதோஷம், கார்த்திகை, அமாவாசைன்னு எதையாவது காரணம் காட்டி, அன்னைக்கு வழிபாடு செஞ்சா கூடுதல் சிறப்புன்னு சொல்லி வைச்சாங்க. பொருளை விக்கிறதுக்காக தள்ளுபடி, இலவசப் பொருள்னு எதையாவது சொல்லி ஏமாத்துறது போல, இந்த பண்டிகைகள் எல்லாமே கோயில் வளர்ச்சிக்காக நடத்தப்படும் வியாபார தந்திரங்கள். எல்லா நாளும் விஷேசமானதுதான், ஆனா எந்த நாளுக்கும் தனிப்பட்ட சிறப்பு கிடையவே கிடையாது. சிவராத்திரியன்னிக்கு மட்டும் கண் முழிச்சா, அடுத்த ரெண்டு நாள் தூக்கத்திலும், விழிப்பிலும் சிக்கல் வருமே தவிர வேறு எதுவும் நடக்காது’’
‘‘அப்படின்னா நான் கோயில்ல பண்ற சிறப்பு பூஜையெல்லாம் ஏமாத்து வேலைன்னு சொல்றீங்களா?’’ சங்கரன் குரலில் லேசான கோபம் எட்டிப் பார்த்தது.  

Leave a Comment