பாலியல் பாடம்
விஞ்ஞானம் ரொம்பவும் வளர்ந்துவிட்டது. உள்ளங்கை செல்போனில் உலகம் வந்துவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், நன்கு படித்த, வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கத் தெரிந்த ஆண், பெண்ணுக்கு தங்கள் அந்தரங்க உறுப்புகளை எப்படி பாதுகாப்பது என்பது பற்றித் தெரிவதில்லை. இவற்றை அறிந்துகொள்வதும், தெரிந்துகொள்ள முனைவதும் தவறு என்று பொதுசிந்தனையில் இருப்பதால் குழப்பத்துடனே வாழ்க்கையை நகர்த்துகிறாகள்.
எத்தனை வயதானாலும் இன்னும் சொல்லப்போனால் அந்தரங்க உண்மை அறியாமலே நிறைய பேர் மரணம் அடைகிறார்கள். எல்லோரும் பாலியல் பற்றி வெட்கமின்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கோயில் சிலைகளில் கூட கலவி சிற்பங்கள் செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், புனிதம் என்ற போர்வையில் யாரும் அதனை கற்றுக்கொள்ள முன்வருவதில்லை.
அந்தரங்க உறுப்பின் சரியான பெயரைச் சொல்வதே சிலருக்கு கெட்ட வார்த்தையாகத் தெரிகிறது. அதனால் என்ன தப்பு என்று கேட்கலாம். யோனிக் குழல் (vagina), யோனிப் புழை (vulva) போன்ற சரியான பெயரை சொல்லத் தெரியாமல் தப்பும் தவறுமாகப் பேசி மருந்து வாங்கும் பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். எனவே, நாகரிகமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு நாசூக்காக பேசுவதும் அல்லது வேறு ஏதேனும் பெயரைச் சொல்லி குழப்புவதும் தவறு.
வாசனை
அந்தரங்கப் பகுதியில் நறுமண பொருட்கள் பூசுவது நல்லது என பல பெண்கள் நம்புகிறார்கள். சோப்பு, ஷாம்பூ போட்டு தங்கள் யோனிக் குழாயை சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில், யோனிக் குழல் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும். நறுமணப் பொருட்கள் பூசுவது தான் தேவையில்லாத பிரச்னையை உண்டாக்குகிறது.
பொதுவாக தண்ணீர் ஊற்றி கழுவுவதே போதுமானது. மாதவிலக்கு நேரத்தில் உலர்வை போக்குவதற்கு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் தடவிக்கொள்ளலாம். யோனிக் குழல் செல்கள் ஒவ்வொரு 96 மணி நேரமும் புதிதாகத் தோன்றுவதால் தோலின் பிற பகுதிகளில் ஏற்படுவதை விட மிக விரைவாக அங்கு பிரச்னை ஏற்பட்டாலும் குணமாகிவிடும்.
யோனிக் குழாயைப் பாதுகாப்பதற்கு நிறைய பாக்டீரியாக்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. சற்றே அமிலத் தன்மையுடைய சுற்றுச் சூழலை உருவாக்கும் பொருட்களை நன்மை செய்யும் பாக்டீரியா உற்பத்தி செய்கின்றன. இதனால் தீய பாக்டீரியாக்கள் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. வழுவழுப்பாக்கும் சளி போன்ற திரவம் உருவாகவும் இந்த பாக்டீரியாக்களே காரணமாம். எனவே, தேவையில்லாத கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்துவதால் இந்த பாக்டீரியாக்களுக்கு ஆபத்து நேரலாம்.
இந்த இடங்களில் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது, பவுடர் போடுவது எல்லாமே உறுப்புகளுக்குச் செய்யும் தீங்கு ஆகும். உடலின் இயற்கையான வாசனையுடனே உறுப்புகள் திகழவேண்டுமே தவிர, செயற்கை வாசனை கொடுத்து சிக்கல் ஏற்படுத்தக் கூடாது.
முடி
அந்தரங்கம் சுத்தமாக இருந்தால் தான் ஆண்களுக்குப் பிடிக்கும் என்பது பெரும்பாலான பெண்களின் நம்பிக்கை. அதற்காக பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு முடிகளை அகற்றுகிறார்கள். அதாவது மெழுகுப் பூச்சு, ரேசர் கொண்டு மழிப்பது மூலம் தோலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தொற்றுநோய்கள் ஏற்படுகிறது. மெழுகு வாக்சிங் என்பது ஒருவருக்கு மட்டுமே செய்வதாக இருத்தல் வேண்டும். ரேசரை பயன்படுத்துவது என்றால் சருமம் வளரும் திசையிலேயே மழிக்கவேண்டும். எதிர்த் திசையில் மழித்தால் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். அந்தரங்கத்தில் முடி சருமத்திற்கான பாதுகாப்பாகவும் நோய்க் கிருமிகளைத் தடுப்பதற்கும் உதவுகிறது என்பதால் தினமும் அல்லது அவ்வப்போது மழிக்க வேண்டிய அவசியம் இல்லை.
முதுமை
மெனோபாஸ் என்பது பெண்களுக்கு முக்கியமான ஒரு காலகட்டம். மெனோபாஸ் காலத்தில் கருப்பை முட்டைகள் உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. மாதவிடாயும் நின்று விடுகிறது. பெண்களை இதுவரை பாதுகாத்து வந்த ஹார்மோன் சுரப்பிகள் தங்கள் இயக்கத்தை குறைத்துக்கொள்கிறது. இதனால் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் தேவையான அளவு சுரப்பதில்லை.
அதனால் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு உடல் உறவில் நாட்டம் குறைதல், உறவின் போது உலர்ந்த நிலையில் எரிச்சல் உண்டாகுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனை ஒரு சிக்கலாகக் கருதத் தேவையில்லை. இதற்காக கெமிக்கல் உபயோகிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
அந்தரங்க உறுப்புகளில் ஏதேனும் சிக்கல், பிரச்னை ஏற்படும் நேரத்தில் கூகுள் செய்து அறிந்துகொள்வது அல்லது சுய மருத்துவம் செய்வது தேவையற்ற சிக்கல்களை உண்டாக்கும். எனவே, மருத்துவரை நாடுங்கள். மிகவும் சிம்பிளாக தீர்க்க வேண்டிய பிரச்னையை பெரிதாக மாற்றிவிட வேண்டாம்.