உடலை பட்டினி போடாதே
இளம் தம்பதியர் கனத்த இதயத்தோடு ஞானகுருவை சந்தித்தனர். ‘’எனக்கும் இவருக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம். தினமும் பூஜை செய்கிறேன். வாரம் இரண்டு நாட்களாவது விரதம் இருக்கிறேன். திருமணமாகி 5 வருடங்கள் ஆனபிறகும், கடவுள் கண் திறந்து பார்த்து ஒரு குழந்தை வரம் தரவில்லை’’ என்று வருந்தினாள்.
‘’உனக்கு குழந்தை வரம் தரக்கூடிய ஒருவர் வந்தால் அவருக்கு விருந்து வைப்பாயா அல்லது பட்டினி போடுவாயா..?”’
‘’இதென்ன கேள்வி சாமி. வரம் தரக்கூடியவர் மட்டுமல்ல, யாரையும் எப்போதும் பட்டினியில் தவிக்க விடக்கூடாது என்றுதான் சொல்வேன். பட்டினியில் இருக்கும் ஒருவர் எப்படி நல்ல வரம் தரமுடியும்?”
‘’உனக்கு குழந்தை வரம் தரக்கூடியது உன் உடல்தான் பெண்ணே. அதனை நீ பட்டினி போட்டால் எப்படி குழந்தை வரம் கொடுக்கும்? உடலில் கோடானுகோடி செல்கள் உயிர் வாழ்கின்றன. அவற்றை வாழவைக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது…’’
‘’ஆனால், பட்டினி இருப்பதும் உடலுக்கு நன்மை செய்வதுதானே..?”
‘’யாரேனும் ஒரு சிலருக்கு பட்டினி கிடப்பதால் நன்மை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால், நீ குழந்தையை வரவேற்பதற்கு உன் உடலை சத்துணவுகளோடு தயார் செய். கடவுள் சிந்தனையை ஒதுக்கி, உன் பாலியல் உறவுகளுக்கான வாசலை திறந்து வை. ஒரு புதிய உயிரை இந்த பூமிக்கு வரவழைக்கும் அற்புதமான முயற்சியில் இருவரும் சந்தோஷமாக இறங்குங்கள். இதனை கடவுளோ அல்லது மருத்துவரோ தந்துவிட முடியாது…’’
‘’திடீரென விரதம் இருப்பதை கைவிட்டால் சாமிக்கு கோபம் வந்துவிடாதா..?”
‘’நீ பட்டினியாக இருப்பதைக் கண்டு கடவுள் சந்தோஷப்படுவார் என்று யார் சொன்னது? உடலில் சேர்ந்துவிட்ட அதிக கொழுப்பைக் குறைக்கத்தான் பட்டினி உதவும். ஆனால், பட்டினி இருக்கும்போது உனக்கு இனம்புரியாத கோபமும், சோகமும், தளர்வும் உண்டாகும். அது, கடவுளையும் அருகே நெருங்க விடாது. விரதம் வேண்டாம் பெண்ணே… குழந்தை மீது ஆசை வளர்த்துக்கொள்.. உடலில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதை மருத்க்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்.
தினமும் படுக்கையறையில் காமத்தை வெல்லுங்கள். காதலும் காமமும் கடவுளுக்குப் பிடித்தமானவை. எந்த இன்பத்தையும் கடவுள் தடுப்பதில்லை. உடலால் கடவளைத் தேடு. நீ ஆசைப்பட்டதை கண்டுபிடிக்க முடியும்” என்று முடித்தார்.
கணவனின் கையை அழுத்தமாக பிடித்துக்கொண்டு நகர்ந்தாள் நங்கை.