உண்மை தெரிஞ்சுக்கோங்க
தாய்மை என்பது ஒரு வரம் என்றே பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் தாய்மை, கர்ப்பம், குழந்தைப் பிறப்பு போன்றவைகளின் அடிப்படையில் எக்கச்சக்க பொய் நம்பிக்கைகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. உண்மை என்னவென்று பார்க்கலாம்
நம்பிக்கை ; மாதவிடாய்க் காலத்தில் உறவு கொண்டாலும் கருத்தரிக்க முடியும்
உண்மை : நன்கு படித்த பெண்கள், ஆண்களிடமும் இந்த நம்பிக்கை இன்னமும் நிலவுகிறது என்பது ஆச்சர்யம்தான். மாதவிடாய் நேரத்தில் கருத்தரிக்க 100 சதவிகிதம் சாத்தியமில்லை என்பதே உண்மை. மாதவிடாய் சுழற்சியில் மாதவிடாய்க் காலம், இனப்பெருக்க காலம், கருமுட்டை வெளியேற்ற நிலை, முன்மாதவிடாய் நிலை என நான்கு நிலைகள் உள்ளன.
அவற்றில், மாதவிடாய் தொடங்கி சராசரியாக 14வது நாள், கருமுட்டை வெளியேற்ற நிலை (இந்த நாள் கணக்கு நபருக்கு நபர் வேறுபடும்) ஏற்படும். இந்த நேரத்தில் மட்டுமே கருத்தரிக்க முடியும். ஆனால், நிறைய பேர் மாதவிலக்கு சுழற்சியை சரியாகக் கணக்கிடுவதில்லை. ஒவ்வொரு மாதமும் மிகச்சரியாக பலருக்கு சுழற்சி நிகழ்வதில்லை. எனவே, இந்த குழப்பம் காரணமாக மாதவிடாய் காலத்தில் உறவு கொண்டதால் கருத்தரித்ததாக நம்புகிறார்கள். இப்படி நடப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதே உண்மை.
நம்பிக்கை ; எந்த வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
உண்மை ; எப்போதாவது நாளிதழ்களில் 55 வயதுப் பெண் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது போன்ற செய்திகளைப் படித்திருப்பார்கள். நிறைய பேர் பேசியதைக் கேட்டிருப்பார்கள். எனவே, வயதுக்கும் குழந்தைப்பேற்றுக்கும் தொடர்பு இல்லை. எப்போது வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், வயதுக்கும் குழந்தை பேறுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இளம் வயதில் இனப்பெருக்கத்திறன் அதிகமாகக் காணப்படும். 35 வயதைக் கடந்த பெண்கள், 38 வயதைக் கடந்த ஆண்கள் இருவரும் ஆரோக்கியமாக இருந்தாலும் இனப்பெருக்கத்திறன் குறையத் தொடங்கும். அதனால் இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதே சிறந்தது.
நம்பிக்கை ; குண்டு பெண்கள் சீக்கிரம் குழந்தை பெறுவார்கள்.
உண்மை : திருமணம் செய்துகொள்ளும் குண்டு பெண்கள் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்று ஒரு நம்பிக்கை உண்டு. உண்மையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியர் இருவரும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். உடல் பருமனால் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியையும், ஆண்களுக்கான உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால், குண்டாக இருப்பவர்களுக்கு குழந்தை பேறு கிடைப்பது கடினம் என்பது தான் உண்மை.