ஞானகுரு பதில்கள்
கேள்வி : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை என்ற பாடல் வரிகள் உணர்த்துவது என்ன..?
- எம்.மனோகரன், செவல்பட்டி.
ஞானகுரு :
பணத்தால் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்று ரஜினிகாந்த் பேசியதைக் கேட்டிருப்பீர்கள். பணம் நிம்மதி தருவதில்லை என்று தெரிந்தும், அவர் வைத்திருக்கும் பணத்தை தூக்கி மற்றவருக்குக் கொடுத்துவிட மாட்டார். அடுத்த படத்திற்கு குறைவான சம்பளம் போதும் என்று கேட்க மாட்டார். அதாவது தன்னிடம் அதிகம் இருக்கும் பணத்தை, தான் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது போல் பொய்யாகப் பேசுகிறார். அதேபோல் கையில் பணமே இல்லாத ஏழைகளும் பணத்தை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதாவது, பணம் முக்கியமில்லை, குணம்தான் முக்கியம் என்பது போல் தத்துவம் பேசுவார்கள். பணம் சம்பாதிக்க நாய் மாதிரி அலைவதில்லை என்று தத்துவம் பேசுவார்கள். இப்படித்தான் வெற்றி பெற முடியாத மனிதர்கள் இப்படி பேசி தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். உண்மையில் வெற்றிக்குத் தேவை முயற்சியும் பயிற்சியும், பொறுமையும்தான். புத்திக்கு அங்கே பெரிய இடம் இல்லை.
கேள்வி : குடும்பத்தில் பாகப்பிரிவினை வரும்போது விரிசல் அடைவது ஏன்..?
- என்.சரவணன், வண்ணாரப்பேட்டை.
ஞானகுரு :
சொத்து சேமித்து வைத்தவரின் முட்டாள்தனத்தாலே பாகப்பிரிவினையில் மோதல் வருகிறது. சொத்து சம்பாதித்தவர் திடமாக இருக்கும்போதே, சொத்துக்களை சரியானபடி பகிர்ந்து கொடுத்துவிடுவதே சரி. ஏனென்றால், சம்பாதித்த சொத்தின் உண்மையான மதிப்பு அவருக்குத்தான் தெரியும். அவர் கடமையை செய்ய மறக்கும்போது, சொத்தின் அருமை தெரியாத பிள்ளைகள் சண்டை போட்டு நீதிமன்றத்தில் நின்று வீணாகத்தான் போவார்கள்.