ஞானகுரு பதில்கள்
கேள்வி : சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கும் மனிதர்கள் பற்றி தங்களுடைய கருத்து என்ன..?
- எஸ்.மாடசாமி, எம்.ஜி.ஆர். காலனி.
ஞானகுரு :
தன் மீது மதிப்பும் மரியாதையும் உள்ள மனிதர் என்றால் தன் வாக்கையும், வாழ்க்கையையும் ஒன்றாகவே கருதுவார்கள். தங்களை கட்டுப்படுத்த முடியாதவர் மட்டுமே நாக்கை இஷ்டப்படி பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை அடையாளம் கண்டு, விலகிச்செல்லுங்கள்.
கேள்வி : பொதுவாக வாழ்க்கைப் பாதை எளிமையானதா அல்லது கடுமையானதா..?
- சி.விநாயகமூர்த்தி, சூலக்கரை மேடு.
ஞானகுரு :
எல்லா ஆறுகளும் வளைந்து நெளிந்தே ஓடுகின்றன. அத்தனை பாதைகளும் பல்வேறு திருப்பங்கள் கொண்டதே. பயணம் என்றாலே பள்ளம், மேடு இருக்கத்தான் செய்யும். இதனை எளிமை என்றும் கடினம் என்றும் கட்டமைப்பது அவரவர் மனமே. சிலருக்கு 10 கிலோ அரிசி சிப்பத்தை தூக்கிச்செல்வது கடினமாகத் தெரிகிறது. சிலருக்கு அதுதான் வேலை. எத்தனை சிப்பம் தூக்குகிறாரோ, அத்தனை தூரம் பணம். ஆகவே, அந்த சுமை பணமாகத் தெரிகிறது. எனவே, மனமே அத்தனையையும் வடிவமைக்கிறது.