ஓட்டப்பயிற்சிக்கு சூப்பர் டிப்ஸ்
வெற்றி வேண்டுமானால், நிச்சயம் பயிற்சி தேவை. அப்படியே உடல் ஆரோக்கியம் வேண்டுமானால் உடற்பயிற்சி அவசியம். உடல் எடை குறைப்பதற்கும், நோய் தீண்டாதிருக்கவும் பலரும் ஓட்டப்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு முழு பலன் தருவதற்கான டிப்ஸ் இதோ.
1. ஓட்டப்பயிற்சியைத் தொடங்கிய முதல் நாளே மூச்சிரைக்க ஓடக்கூடாது. அதனால் மூச்சுத்திணறல், நெஞ்சு அடைப்பு, தலைசுற்றல் ஆகியன ஏற்படலாம். மேலும், அரை கிலோ மீட்டர்கூட ஓடமுடியாது. ஆதலால், ஓட்டப்பயிற்சியின் தூரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும்.
2. ஓட்டப்பயிற்சியை தொடங்குவதற்கு முன் பொறுமையாக முதலில் நடக்க வேண்டும். மூன்று கிலோமீட்டர் வரை நடைப்பயிற்சியில் ஈடுபடலாம். அடுத்தடுத்த நாட்களில் கூட்டிக்கொள்ளலாம்.
3. இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தினமும் அதிகாலையில் எழுந்து, நீண்டதூரம் நடக்க ஆரம்பித்து ஓரளவுக்கு உடல் ஈடுகொடுக்கத் தொடங்கியதும் ஓடத்தொடங்கலாம். ஆரம்பத்தில் வாரத்திற்கு நான்கு நாட்கள் ஓடினாலே போதும்.
4. ஓடுவதற்கு நல்ல எளிய வியர்வை உறிஞ்சக்கூடிய கச்சிதமான உடைகள் மற்றும் நல்ல தரமான காலணி, ஷூக்களைப் பயன்படுத்த வேண்டும்.
5. நல்ல சுத்தமான ஆக்ஸினோடு ஓடுவது உடலுக்கு நல்லது. அதிகாலையில் எழுந்து ஓடுவதுதான் சிறந்தது.
6. பொறுமையாக எவ்வளவு மெதுவாக முடியுமோ, அவ்வளவு மெதுவாக ஓட ஆரம்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் போகப்போக வேகம் கூட்டிக்கொள்ளலாம்.
7. ஓடும்போது மூச்சை நன்றாக உள்ளே இழுத்துவிட வேண்டும். மூக்குவழியாகவும் வாய்வழியாகவும் சீராக மூச்சுவிடவேண்டும். மூச்சை அடக்கிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டெல்லாம் ஓடக்கூடாது.
8. ஓடுவதற்கு முன் உடலை இலகுவாக்குகிற சிறிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.ஓடி முடித்தபின் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி முக்கியம். யோகா தெரிந்தவர்கள் பத்து சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
9. கூட்டமான இடங்களில் ஓடுவது சிரமம். அதற்கு சாலைகளில் ஓடலாம்.
10. முழங்கால், இடுப்பு, முதுகு, கழுத்து ஆகிய பகுதிகளில் வலி இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றபின் ஓடுவது நல்லது.
11. ஓடுவதற்குக்கூட பொறுமை மிகமிக அவசியம். முழுமையான அர்ப்பணிப்போடு ஓடுவது நலம். ஓட்டத்திற்கு நம்பிக்கைதான் முக்கியம்.
12. ஓடுபவர்களுக்கு நன்றாகப் பசிக்கும். அதனால் நொறுக்குத் தீனி அதிகம் உட்கொள்ளக் கூடாது. என்ன சாப்பிடுகிறோம் என்பதில் அதிக கவனம் வேண்டும்.
13. ஓடும்போது பாதங்களின் நடுப்பாகம் தரையில் படும்படி ஓடவேண்டும்.
14. நீண்டதூரத்திற்கு யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாக ஓடுவது நலம் தரும்.
15. ஓரிரு நாட்கள் ஓடிவிட்டு தொப்பை கரையவில்லை என்று கவலைப்படக் கூடாது. எதையும் தொடர்ந்து செய்தால்தான் அதற்கான பலன் கிடைக்கும்