தி.முக.வுக்கு தோல்வி ஆருடம்
தமிழக அரசியலைப் புரட்டிப் போடும் அளவுக்கு பா.ஜ.க.வுக்கு திடீரென ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார் ஸ்டாலின். கோ பேக் மோடி என்று தீவிரம் காட்டியவர் அண்ணாமலையை முன்னாடி வரச்சொல்லுங்க என்று அழுத்திச் சொல்கிறார். இந்த திடீர்க் கூட்டணி மக்களிடம் மிகப்பெரும் மாற்றம் ஏற்படுத்தும், இனி தி.முக.வுக்கு ஓட்டு கிடைக்காது என்று ஆருடம் சொல்கிறார் கே.சி.பழனிசாமி.
இதுகுறித்து அவர், ’’கலைஞரை விட தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கொடுத்தார்கள் அதற்க்கு காரணம் “பண்டாரம், பரதேசி” என்று விமர்சித்த பாஜகவோடு சுயநலத்திற்காக கூட்டணி கண்டார் கலைஞர். ஆனால் ஸ்டாலின், “Go Back Modi” என்று 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடத்திய போராட்டங்களை நம்பினார்கள் தமிழக மக்கள், ஆனால் அது வெறும் நாடகம் தான் என்று இன்றைக்கு ஸ்டாலின் நிரூபித்துவிட்டார்.
பாஜக எதிர்ப்பில் முனைப்போடு “ஒன்றிய அரசு” என்று அழைப்பதில் ஆகட்டும் பாஜகவுக்கு எதிராக அகில இந்திய அளவில் கூட்டணியை கட்டமைத்து “INDIA” கூட்டணியை உருவாக்குவதில் காட்டிய முனைப்பு ஆகட்டும் கலைஞரை விட சிறந்தவராக ஸ்டாலின் காட்சி தந்தார். ஆனால் அவை அனைத்தும் போலி பிம்பங்கள் என்று தற்போது அதே நாணயம் அற்ற கலைஞருக்கு நாணயம் வெளியிட்டு விழாவால் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் அதிமுகவுக்கு விழும் திமுக எதிர்ப்பு வாக்குகளை கவர முயற்சித்த அண்ணாமலை இன்று ஸ்டாலினால் அரவணைக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலினின் அன்புத்தம்பி ஆகிவிட்டார். கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் “அண்ணாமலை இங்க வாங்க” என்று ஸ்டாலின் நேசக்கரம் நீட்ட அதை ஏற்றுக்கொள்ளப்படுகிற நிலைக்கு அண்ணாமலை தள்ளப்பட்டுவிட்டார்.
இனிமேல் மத்தியில் ஆளுகிற பாஜக மாநிலத்தில் ஆளுகிற திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படலாம். செந்தில் பாலாஜி போன்றவர்கள் மீண்டும் அரசியல் ஆளுமைகளாக வளம் வரலாம். இன்றைக்கு இருக்கிற லஞ்சமும் ஊழலும் மேலும் பலமடங்கு பெருக்கெடுத்து ஓடலாம். இதற்க்கு மத்திய பாஜக முட்டு கொடுக்கலாம். * மாநிலத்தை ஆளுகிற திமுக “உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கைகொடுப்போம்” என்கிற புதிய கொள்கை முழக்கதோடு மத்திய மாநில அரசின் உறவுகளை பலப்படுத்துகிறோம் என்கிற பேரில் திமுக பாஜக உறவுகள் பலப்படலாம். ஆனால், மக்கள் சுதாரித்துக் கொண்டார்கள். இனி வாக்களித்து ஏமாற மாட்டார்கள். எனவே, அ.தி.மு.க.வினர் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’’ என்று கூறியிருக்கிறார்.
அதுசரி, அ.தி.மு.க. ஒண்ணாவது நடக்குற காரியமா என்று சிரிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.